ஜெபக்குறிப்பு: ஜுன் 13 செவ்வாய்

சத்தியவசன இலக்கிய பணிகளில் மொழியாக்க ஊழியம் செய்துவரும் சகோதர சகோதரிகளை கர்த்தர் தொடர்ந்து அநேக ஆயிரமாயிரமான மக்களுக்கு ஆசீர்வாதமாக எடுத்து பயன்படுத்திடவும், அவர்களது சுகநலனுக்காகவும் ஜெபிப்போம்.

கைவிடப்பட்ட பாத்திரம்

தியானம்: ஜுன் 13 செவ்வாய்; வேத வாசிப்பு: மாற்கு 5:25-34

“கர்த்தாவே, உம்மைத் தேடுகிறவர்களை நீர் கைவிடுகிறதில்லை…” சங்கீதம் 9:10

ஒருவன் கைவிடப்பட்ட நிலையில் வாழுவதற்கு பலவித காரணங்கள் இருக்கலாம். ஆனாலும், ‘கைவிடப்பட்டுவிட்டேனே’ என்ற நினைவு மிகவும் வேதனையானது. இயேசு இவ்வுலகில் வாழ்ந்த நாட்களில், வைத்தியரால் கைவிடப்பட்ட ஒரு பெண் இருந்தாள். அவள் துணிகரமாக எடுத்துக்கொண்ட முயற்சியினால், கைவிடப்பட்டுக் கலங்கிய அவளுடைய நிலை மாற்றமடைந்தது.

பன்னிரண்டு வருடங்களாக பெரும்பாடுள்ளவளாக மிகவும் கஷ்டப்பட்ட  பெண் இவள். தனது வியாதியைச் சுகப்படுத்துவதற்காக தன்னிடம் உள்ள அனைத்தையும் விற்று வைத்தியருக்குச் செலவிட்டாள். ஆயினும், வியாதி சுகமடையவில்லை. வைத்தியரால் கைவிடப்பட்டாள். பழைய ஏற்பாட்டு முறைமைகளின்படி இந்த நோயுள்ள பெண்கள் தீட்டுள்ளவர்களாகக் கணிக்கப்பட்டார்கள். இவர்களை சமுதாயம் புறந்தள்ளிவிடும். இந்தப் பெண்ணும் எல்லாராலும் கைவிடப்பட்டுக் கலங்கி நின்றாள். பன்னிரு வருடங்களாக வியாதி ஒருபுறமும், தள்ளப்பட்டுவிட்ட மனநிலை இன்னொரு புறமுமாக போராடிக்கொண்டிருந்த இவள், இயேசுவைக் குறித்துக் கேள்விப்பட்டு, அவரது வஸ்திரத்தின் ஓரத்தையாகிலும் தொட்டாலே தான் சுகமாகமுடியும் என்ற விசுவாசத்தோடு, தன் நிலையையும் பொருட்படுத்தாமல், துணிகரமாகச் செயற்பட்டாள். ஜனக்கூட்டத்திற்குள் சென்று இயேசுவின் வஸ்திரத்தைத் தொட்டாள்; அவள் விசுவாசித்தபடி இயேசுவிடமிருந்து புறப்பட்ட வல்லமை அவளது நோயின் வேதனையையும், அவளது கைவிடப்பட்ட நிலையையும் நீக்கிவிட்டது. அவளை முன்னாக அழைத்த இயேசு, அவளுடைய விசுவாசத்தைக் கனப்படுத்தி, சமுதாயத்தில் அவளுக்கு ஏற்பட்டிருந்த வெட்கத்தையும் நீக்கிவிட்டார். அவள் கலக்கம் நீங்கிய பாத்திரமாய் சந்தோஷத்தோடு போனாள்.

“நான் இளைஞனாயிருந்தேன். முதிர்வயதுள்ளவனுமானேன். ஆனாலும், நீதிமான் கைவிடப்பட்டதையும், அவன் சந்ததி அப்பத்திற்கு இரந்து திரிகிறதையும் நான் காணவில்லை” (சங்.37:25) என்று முன்னரே தாவீது பாடி வைத்து விட்டார். வியாதியினிமித்தம் தள்ளப்பட்ட நிலையிலிருந்த இந்தப் பெண்ணைப் போல இன்று ஏதோ ஒருவகையில் நம்மில் யாராவது கைவிடப்பட்ட பாத்திரங்களாகிவிட்டோம் என்று கலங்கி நிற்கிறோமா? இப்படியான சந்தர்ப்பங்களில் நமது விசுவாசத்திலும் நாம் தள்ளாடிப்போவதுண்டு. நமக்குள் பல கேள்விகள் எழும்பும். சோர்ந்துபோக வேண்டாம். “உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக. தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள். என்னிடத்திலும் விசவாசமாயிருங்கள்” (யோவான் 14:1) என்று சொன்னவர் நமக்கிருக்கிறார். விசுவாசத்தில் நிலைத்திருப்போம்; ஆண்டவர்தாமே நம்மைச் சேர்த்துக்கொள்வார்.

ஜெபம்: அன்பின் தேவனே, நீர் எங்களைக் கைவிடாமல் குணப்படுத்துகிறவரும் பாதுகாக்கிறவருமாக இருக்கிறபடியால் உம்மைத் துதிக்கிறோம். ஆமென்.