Daily Archives: September 22, 2018

ஜெபக்குறிப்பு: 2018 செப்டம்பர் 22 சனி

சத்தியவசன ஆங்கிலம் மற்றும் தமிழ் இலக்கிய பணிகளை கர்த்தர் ஆசீர்வதிக்கவும், மறு அச்சுப்பதிப்பு செய்யப்பட வேண்டிய புத்தகங்களின் அச்சுப்பணித் தேவைகள் சந்திக்கப்படவும், இலக்கியப் பணி வாயிலாக ஏராளமானோர் சத்தியமும் ஜீவனுமாகிய கர்த்தரை அறிகிற அறிவிலே வளர்ந்து பெருக ஜெபிப்போம்.

அமர்ந்திரு!

தியானம்: 2018 செப்டம்பர் 22 சனி; வேத வாசிப்பு: சங்கீதம் 46:1-11

“நீங்கள் அமர்ந்திருந்து, நானே தேவனென்று அறிந்து கொள்ளுங்கள்” (சங்.46:10).

கிறிஸ்துவின் பிள்ளைகள் என்பதால் இவ்வுலகில் நமது வாழ்க்கை என்றும் சுமூகமாக இருப்பதில்லை. பலவித கஷ்டங்களும், துன்ப துயரங்களும், சடுதியாக ஏற்படுகின்ற புயலைப்போல் திடிரென நம்மைத் தாக்கும். சூழ்நிலை கொந்தளிப்பால், உள்ளத்திலும் அமைதி இழந்து, நமது விசுவாச ஓட்டத்திலும் தடுமாறி, முன்செல்ல முடியாமல் திகைத்து நிற்கும் நிலை நேரிடுகிறது. இப்படியான வேளைகளில் நாம் என்ன செய்கிறோம்?

கடுமையாக வீசிய காற்றையும், கொந்தளித்த கடலையும், அலைகளில் அலைவுண்ட படகையும் கண்ட சீஷர்கள், அதே படகிலே தம்மோடே பயணம் செய்த இயேசுவை மறந்தார்களே! அதுமாத்திரமா, தமது உயிருக்கு பயந்தவர்களாக, “ஐயோ மடிந்துபோகிறோமே” என்று அலறினார்கள். இயேசு படகிலே இருந்தார் என்பதற்காக, காற்று வீசாமல் கடல் கொந்தளிக்காமல் போனதா? ஆனால், அதன் மத்தியிலும் ஆண்டவர் இருப்பாரானால் நமக்கு ஏன் பயம்?

இன்று நாமும்கூட பல வேளைகளிலும் நம்மோடே கூடவே வருகின்ற இயேசுவை மறந்து, அவரை நோக்கிப் பார்ப்பதைவிட்டு, சூழ்நிலைகளையே பார்த்து தடுமாறி விடுகிறோம். பாதகமான தருணங்களே நமது விசுவாச ஓட்டத்திலே முக்கிய தருணங்கள் என்பதையும் நாம் நினைத்துப் பார்ப்பதில்லை. நம்மால் சமாளிக்க முடியாத இப்படியான தருணங்களில்தான் தேவனுடைய பலத்த கரம் ஓங்கி நிற்கிறதை நம்மால் உணரக்கூடும். பின்னர் ஏன் இந்த அவதி? அமர்ந்திருக்கலாமே! அமர்ந்திருப்பது என்பது சுலபமான காரியமல்ல. ஆனால், யாவையுமே முற்றுமுழுதாக கர்த்தருடைய பாதத்தில் ஒப்புவித்துவிட்டு, அவரது வேளைக்காய் காத்திருந்து, அவரது சித்தம் நிறை வேற நம்மை அர்ப்பணிப்போமானால், அது ஒரு மேலான அனுபவமாயிருக்கும். பாதகமான சூழ்நிலைகள் ஏற்படாவிட்டால், எப்படி நாம் அமர்ந்திருந்து பாடத்தைக் கற்றுக்கொள்ளுவது?

நாமோ பல தடவைகளிலும், நம்பிக்கையிழந்து தேவனை கேள்வி கேட்கும் நிலைக்குள்ளாகிறோம். அன்று பவுல், “நான் விசுவாசித்திருக்கிறவர் இன்னாரென்று அறிவேன்” என்று கூறி எந்தச் சந்தர்ப்பத்திலும் கர்த்தரின் சமுகத்திலே அமர்ந்திருக்கக் கற்றுக்கொண்டிருந்தார். புயல் வீசட்டும், கடல் கொந்தளிக்கட்டும். அமர்ந்திருந்து, கர்த்தரே தேவனென்று அறிந்து மற்றவர்களுக்குமுன் சாட்சியாக ஜீவிப்போமாக.

“…தரித்து நின்று தேவனுடைய ஆச்சரியமான கிரியைகளைத் தியானித்துப் பாரும்” (யோபு 37:14).

ஜெபம்: அன்பின் தேவனே, எனக்கு வரும் பிரச்சனைகளின் மத்தியிலேயும் உமது பாதத்தண்டையில் நான் அமர்ந்திருக்க கற்றுத் தாரும். ஆமென்.

சத்தியவசனம்