ஜெபக்குறிப்பு: 2018 செப்டம்பர் 1 சனி
“கர்த்தர் தம்முடைய ஜனத்தை நெகிழவிடாமலும், தம்முடைய சுதந்தரத்தைக் கைவிடாமலும் இருப்பார்” (சங்.94:14) இப்புதிய மாதத்தில் தேவனாகிய கர்த்தருடைய கரம் நம்மோடிருந்து நன்மையும் செம்மையுமான வழியில் நம்மை வழிநடத்த அர்ப்பணித்து ஜெபிப்போம்.
நீ எங்கே இருக்கிறாய்?
தியானம்: 2018 செப்டம்பர் 1 சனி; வேத வாசிப்பு: ஆதியாகமம் 3:8-11
“அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமைக் கூப்பிட்டு: நீ எங்கே இருக்கிறாய் என்றார்” (ஆதி. 3:9).
இப்புதிய மாதத்தின் முதல்நாளிலே, பல்வேறு மனநிலையோடு தேவ சமுகத்தை நாடியிருக்கிற ஒவ்வொருவரையும் நோக்கி ஒரு குரல் தொனிக்கிறது. அன்று ஏதேனிலே தேவனாகிய கர்த்தர் ஆரம்பித்துக் கொடுத்த பரிசுத்த ஓட்டத்திலே ஆதாமும் ஏவாளும் தவறிவிட்டதால், தங்கள் தகுதியற்ற நிலையை உணர்ந்து ஒளிந்துகொண்டார்கள். ஆகவேதான், தேவனாகிய கர்த்தர், “நீ எங்கே இருக்கிறாய்?” என்று ஆதாமைக் கூப்பிட்டார். இன்று அதே கேள்வி நம்மிடம் வருகிறது. “கிறிஸ்துவுக்குள் ஆரம்பித்த உனது விசுவாச ஓட்டத்தில் நீ எங்கே நிற்கின்றாய்?” என தேவன் கேட்கின்றார்.
கிறிஸ்துவைத் தன் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளும் ஒருவன், நிரந்தரமற்ற இவ்வுலக வாழ்க்கையை விடுத்து, ஒருநாள் நித்திய ராஜ்யத்தைச் சென்றடைகிறான் என்பதே வேதசத்தியம். இந்த விசுவாச ஓட்டம் இலகுவானதல்ல. இதன் வெற்றி, நாம் எப்போது ஓட்டத்தை ஆரம்பித்தோம் என்பதிலோ, எவ்வளவு காலம் ஓடினோம் என்பதிலோ அல்ல; ஓட்டத்தின் இலக்கை வெற்றியோடு சென்றடைகிறோமா என்பதிலேயே தங்கியிருக்கிறது. ஆனால், இந்த விசுவாச ஓட்ட பாதையில் கஷ்ட நஷ்டங்கள், பாடுகள் என்று பல தடைகளைச் சந்திக்க நேரிடும். அங்கேதான் தாமதங்களும் பின்னடைவுகளும் ஏற்படுகின்றன.
அன்று ஆதாமுக்கும் ஏவாளுக்கும் சாத்தான் விரித்த வஞ்சக வலை ஒரு சோதனையாயிற்று. அவர்களும் விழுந்துவிட்டார்கள். அவர்களது ஓட்டமும் திசைமாறியது. இன்று நாமும் பல தடைகளைத் தாண்டி ஓடிக்கொண்டிருக்கலாம். அல்லது, சோர்ந்து பின்னடைந்திருக்கலாம். நமது நிலைமையை நாமே சிந்தித்துப் பார்ப்போமாக. முதலாவது நாம் கவனிக்கவேண்டியது, நமக்கு நியமிக்கப்பட்ட பாதையில் நாம் ஓடுகிறோமா? அடுத்தது, நாம் தளர்ந்திருப்போமானால் அதற்கான காரணம் என்ன? நமது இலக்கைத் தவறவிட்டுவிட்டோமா? நமது பார்வை சூழ்நிலைகளில் மூழ்கிவிட்டதா? இந்த உலக மாயை பொல்லாதது, விழித்திருப்போமாக. காணப்படாத நித்தியத்தின் நிச்சயத்தில் நாம் விசுவாசத்துடன், கிறிஸ்துவுக்குள்ளாகப் பரிசுத்த ஆவியானவரின் பெலத்தோடு ஓடிக் கொண்டிருக்கிறோம். ஆகவே, நாம் தைரியமாக ஓடலாம். நமக்கு முன்பாக ஓடிய ஏராளமான தேவபிள்ளைகளின் வாழ்வு நமக்குச் சாட்சியாயிருக்கிறது. ஆகையால் விழுந்தாலும் எழுந்து ஓடுவோமாக.
“…பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்” (எபி.12:1).
ஜெபம்: அன்பின் தேவனே, நான் எங்கே நிற்கிறேன் என்பதைச் சற்று நின்று நிதானித்தறியவும், என் ஓட்டத்தை சரிவர கிறிஸ்துவுக்குள் திடமாக ஓடவும் கிருபையருளும். ஆமென்.
மாத வாக்குத்தத்தம்: செப்டம்பர் 2018
நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது (1யோவான் 4:10).
மாத ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 2018
நான் உம்மிடத்தில் விண்ணப்பம் பண்ணுவேன்; என் ராஜாவே, என் தேவனே, என் வேண்டுதலின் சத்தத்தைக் கேட்டருளும் (சங்.5:2).
தந்திர வலை!
அதிகாலை வேளையில்… (செப்டம்பர் – அக்டோபர் 2018)
– Dr.உட்ரோ குரோல்
வேதபகுதி: நியாயாதிபதிகள் 9: 22-57
காலமே சூரியன் உதிக்கையில் எழும்பி, பட்டணத்தின்மேல் விழுந்து, அவனும் அவனோடிருக்கிற ஜனங்களும் உமக்கு எதிரே புறப்படும்போது, உம்முடைய கைக்கு நேரிடுகிறபடி அவனுக்குச் செய்யும் என்று சொல்லியனுப்பினான் (நியாயா.9:33).
பிறரை ஏமாற்றுவது என்பது ஒரு கலை. நாம் பிறரை ஏமாற்ற எண்ணும் பொழுது முதலில் ஒரு சிக்கலான வலையை உருவாக்குகிறோம். பின்னர் அதனை செயல்படுத்துகிறோம். ஆயினும் கெடுவான் கேடு நினைப்பான் என்ற முதுமொழிக்கு ஏற்ப அது அவர்களுக்கே கேடு விளைவிக்கும்.
மேலும் நீதிமானுக்கு விரோதமாக எழும்பும் சதிகாரர்கள் தங்களுடைய சதித்திட்டத்தால் இறுதியில் அழிக்கப்படுவார்கள் என்ற உண்மையை கிதியோனும் அவனுடைய முந்நூறு வீரர்களும் பெற்ற வெற்றிக்குப் பின்னர் தொடர்ந்த நாட்களின் அவல நிலையிலிருந்து நாம் அறிகிறோம்.
நியாயாதிபதிகள் 8: 33-35 என்ற வேதபகுதியில் மீதியானியரை வெற்றி கண்ட பின்னர் இஸ்ரவேலர்களால் தொடர்ந்து சிறப்புடன் வாழமுடியவில்லை எனக் காண்கிறோம். தங்களை விடுதலையாக்கிய தேவனை இஸ்ரவேலர் மறந்தபடியால் வெளியிலிருந்த எதிரிகளைவிட அவர்களுக்குள்ளே இருந்த உட்பூசல்கள் அதிக அழிவைத் தந்தன. கிதியோன் மறுத்த ஆட்சியை சீகேமிலிருந்த அவனுடைய மறுமனையாட்டியின் மகன் அபிமெலேக்கு இச்சித்தான். தனது தந்தையின் புகழை உபயோகித்துக்கொள்ள விரும்பிய அபிமெலேக்கு சீகேமின் மக்களிடம் ஒரு நீண்ட வீர வசனம் பேசினான். கிதியோனின் குமாரர்கள் 70 பேர் அவர்களை ஆள்வதைவிட ஒரு தனிமனிதன் ஆளுவதே சிறந்தது என்று கூறினான். பாகால் பேரீத்தின் கோவிலிலிருந்து பெற்றுக்கொண்ட எழுபது வெள்ளிக்காசைக் கொண்டு வீணரும் போக்கிரிகளுமான மனுஷர்களை தனது சேவகத்தில் வைத்துக்கொண்டான். இவர்கள் கிதியோனின் குமாரர்களைக் கொலை செய்தனர். ஆனால் யோதாம் என்னும் கிதியோனின் இளைய குமாரன் அதிசயமாய் இத்தந்திர வலைக்குத் தப்பிவிட்டான்.
அபிமெலேக்கு இஸ்ரவேலின் ஒரு சிறிய பகுதியை மூன்று வருடங்கள் ஆண்டான். யோதாம் கெரிசீம் மலைக்குச் சென்று அபிமெலேக்குக்கும் சீகேம் மனிதர்களுக்கும் சாபமிட்டான். இந்த சாபம் ஒரு உருவகமாகக் கூறப்பட்டுள்ளது. மரங்கள் தங்களுக்கு அரசனாக இருக்க வேண்டுமென ஒலிவமரம், அத்திமரம் மற்றும் திராட்சைச்செடி இவற்றை வரிசையாகக் கேட்டன. ஆனால் அவைகள் மறுத்துவிட்டன. பின்னர் அவை முட்செடியிடம் சென்று தங்கள் கோரிக்கையை வைத்தன. அதனை முட்செடி ஏற்றுக் கொண்டது.
இந்த உருவகத்தை நாம் எளிதில் புரிந்து கொள்ளலாம். தங்களுடைய கனிகளைத் தருவதில் ஆர்வம் காட்டும் மரங்கள் ஆட்சியை விரும்பவில்லை. எதையுமே கொடுக்க இயலாத முட்செடி தனது சுயநலத்துக்காக தலைமை பொறுப்பை ஏற்றது. அபிமெலேக்கே அந்த முட்செடி. அபிமெலேக்கிலிருந்து அக்கினி புறப்பட்டு, சீகேம் பட்டணத்தாரையும், மில்லோவின் குடும்பத்தாரையும் பட்சிக்கவும், சீகேம் பட்டணத்தாரிலும் மில்லோவின் குடும்பத்தாரிலுமிருந்து அக்கினி புறப்பட்டு, அபிமெலேக்கைப் பட்சிக்கவும்கடவது என்று யோதாம் சொன்னான் (நியாயாதிபதிகள் 9:20).
யோதாமின் சாபம் வெகு விரைவிலேயே பலித்தது. அபிமெலேக்கு இஸ்ரவேலை மூன்று வருஷம் அரசாண்ட பின்பு, அவனுக்கும் சீகேமின் பெரிய மனுஷருக்கும் நடுவே பொல்லாப்பு உண்டாக்கும் ஆவியைத் தேவன் வரப்பண்ணினார். சீகேமின் பெரிய மனுஷர் அவனைக் கொலை செய்ய திட்டமிட்டனர். ஆனால் அபிமெலேக்கின் விசுவாசியாகிய பட்டணத்தின் அதிகாரியாகிய சேபூல் அச்சதித்திட்டத்தை சில ஆட்களின் மூலம் அதை அவனுக்குத் தெரியப்படுத்தினான். இரவில் சீகேமின் பட்டணத்து வாசலில் காத்திருந்து அதைத் தாக்க ஆலோசனை கூறினான். காலமே சூரியன் உதிக்கையில் எழும்பி, பட்டணத்தின்மேல் விழுந்து, அவனும் அவனோடிருக்கிற ஜனங்களும் உமக்கு எதிரே புறப்படும்போது, உம்முடைய கைக்கு நேரிடுகிறபடி அவனுக்குச் செய்யும் என்று சொல்லி அனுப்பினான் (நியா.9:33). அவ்வாறே சீகேம் பட்டணத்து மக்களில் அநேகரை அபிமெலேக்கு வெட்டினான்.
துரோகிகளைக் கொன்ற பின்னர் அபிமெலேக்குத் தனது கவனத்தைப் பக்கத்திலிருந்த தேபேசு பட்டணத்துக்குத் திருப்பினான். சில சீகேம் பட்டணத்து மக்களும் தாபேசின் மக்களும் பாதுகாப்பைத் தேடி அப்பட்டணத்தின் நடுவிலிருந்த உயர்ந்த கோபுரத்துக்குள்ளே அடைக்கலமாயினர். அவர்களைக் கொளுத்துவதற்கு அபிமெலேக்கு ஆயத்தப்படுகையில் ஒரு ஸ்திரீ ஓர் ஏந்திரக் கல்லின் துண்டை மேலிருந்து எறிந்தாள். அது சரியாக அபிமெலேக்கின் தலையிலே விழுந்து அவன் மண்டையை உடைத்தது. அவன் மரணமடைந்தான். யோதாமின் தீர்க்க தரிசனம் நிறைவேறியது.
அரசனாக விரும்பியவனும் அவனது குடிகளாக அமைய இருந்தவர்களும் அவர்களது சதிவலையில் விழுந்தார்கள். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும். நீதிமான்களை அழித்தவர்கள் தாங்களே ஒருவரை ஒருவர் அழித்துக்கொண்டார்கள். தேவனுடைய ஆசீர்வாதம் இல்லாமல் சுயமுயற்சியுடன் முன்னேற விரும்பாது அவருடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று அறிந்து அதற்கு நம்மை ஒப்புவிப்பதே சாலச் சிறந்தது.
அதிகாலைப் பாடல்:
ஆதியும் அந்தமுமானவரே, ஆபிரகாமின் தேவனே,
உன்னதமான சிங்காசனத்தில் வீற்றிருப்பவரே,
அநாதியாய் இருக்கிறவராய் இருப்பவரே
வானத்தையும் புமியையும் படைத்த ஆண்டவரே
என்றும் நிலைக்கும் உம்முடைய நாமத்தை
நான் பணிந்து வணங்குகிறேன்.
மொழியாக்கம்: Sis.அகஸ்டா மங்களதுரை