Daily Archives: September 5, 2018

ஜெபக்குறிப்பு: 2018 செப்டம்பர் 5 புதன்

…. அநியாயத்துக்கு தன் கையை விலக்கி, மனிதருக்குள்ள வழக்கை உண்மையாய்த் தீர்த்து (எசேக்.18:8) என்ற வாக்குப்படியே நம்முடைய நாட்டிலுள்ள நீதிமன்ற துறைகளில் குடும்பங்களுக்கான நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் தேவபிள்ளைகளது வழக்குகள் சீக்கிரம் முடிந்து பிரிந்திருக்கும் குடும்பங்கள் சேர்ந்து வாழ வேண்டுதல் செய்வோம்.

சோதிக்கப்படவேண்டிய விசுவாசம்

தியானம்: 2018 செப்டம்பர் 5 புதன்; வேத வாசிப்பு: 1பேதுரு 1:2-9

“ஆனாலும் நான் போகும் வழியை அவர் அறிவார் அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன்” (யோபு 23:10).

பொன்னை யார்தான் விரும்பமாட்டார்! பொன்தான் ஒரு நாட்டின் தரத்தையே நிர்ணயிக்கிறது. எந்தக் கலப்படமும் இல்லாத சுத்தப்பொன் எப்படிப் பெறப்படுகிறது என்பது நமக்குத் தெரியும். அது அக்கினிச் சூளையில் போடப்பட்டு, அதனோடு சேர்ந்திருக்கின்ற உலோகங்கள் அகற்றப்பட்டு, சுத்த பொன்னாகப் புடமிடப்படுகிறது. அக்கினியைச் சந்திக்காத பொன் சுத்தமான பொன் அல்ல. மண்ணிலிருந்து பெறப்படுகின்ற இந்தப் பொன்னுக்கே இத்தனை புடமிடுதல் தேவை என்றால், நமது விசுவாசம் பொன்னாக விளங்க, புடமிடப்பட வேண்டியது அவசியமல்லவா! அப்படியானால், அக்கினிச் சோதனை தேவைதானே!

அன்று இஸ்ரவேலும் பலவித அசுத்தங்களின் மத்தியில் வாழ்ந்தார்கள். “கபடத்தின் நடுவிலே குடியிருக்கிறாய்” என்ற கர்த்தர், “ஆகையால், இதோ, நான் அவர்களை உருக்கி, அவர்களைப் புடமிடுவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். என் ஜனமாகிய குமாரத்தியை வேறெந்தப் பிரகாரமாக நடத்துவேன்?” (எரே.9:7) என்கிறார். அசுத்தமான எதுவும் தேவ சந்நிதானம் சேரமுடியாது. ஆகவே, நமது விசுவாசம் சோதிக்கப்படும்போது, அல்லது ‘நாம் விசுவாசிக்கிறோம்’ என்று அடிக்கடி சொல்லுகின்ற நமது விசுவாசம் சோதனைக்குட்படும்போதுதான், நாம் மெய்யாகவே தேவனைச் சார்ந்திருக்கிறோமா என்பது புலப்படும். யோபுவின் வாழ்வில் நடந்தது அதுதான். காரணமே தெரியாமல் யோபு பாடுகள் பட்டான். அவனுக்குள்ளும் குழப்பங்கள் வந்தன. என்றாலும், “அவர் என்னைச் சோதித்துமுடிய நான் பொன்னாக விளங்குவேன்” என்ற யோபுவின் அறிக்கை, அவனுக்குள் இருந்த விசுவாசத்தின் உறுதியை எடுத்தியம்புகிறது. எந்தக் கோர நிலைமையிலும் யோபு தன் வாயினால் பாவம் செய்யாமல், தன் தேவன் தனக்கு நலமானதையே செய்வார் என்று அமர்ந்திருந்தான். முடிவில் இரட்டிப்பான ஆசீர்வாதத்தையும் பெற்றான்.

“அழிந்து போகிற பொன் அக்கினியினாலே சோதிக்கப்படும். அதைப் பார்க்கிலும் அதிக விலையேறப் பெற்றதாயிருக்கிற உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசு கிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாகக் காணப்படும்” (1பேதுரு 1:7) ஆகவே, வாழ்வில் நமக்குச் சோதனைகள் ஏற்படும்போது தேவனுடைய கரத்தில் விழுந்து விடுவோமாக. அவர் நம் அருகில் இருப்பார். அதிக வெப்பம் நம்மைக் கருக்கி விடாதபடி அவர் பார்த்துக் கொள்வார். நம்மில் தம் முகம் தெரிகின்றபோது அவர் நம்மில் மகிழ்ந்திருப்பார்.

“சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் உத்தமனென்று விளங்கினபின்பு, கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு, வாக்குத்தத்தம் பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான்” (யாக்.1:12).

ஜெபம்: அன்பின் தேவனே, எனது வாழ்க்கையின் பாடுகளில் நான் சோர்ந்து போகாமல், இனி வரும் மகிமையை எண்ணி அவைகளை கடந்துசெல்ல கிருபை தாரும். ஆமென்.

சத்தியவசனம்