Daily Archives: January 21, 2019

ஜெபக்குறிப்பு: 2019 ஜனவரி 21 திங்கள்

பிரியமானவர்களே, இந்தப்படியே கர்த்தருக்குள் நிலைத்திருங்கள் (பிலிப்.4:1) சத்தியவசன ஊழிய ஜெபபங்காளர்களாக ஜெபத்தில் தாங்கிவரும் அனைவருக்காகவும் நன்றி செலுத்தி இப்புதிய வருடத்திலே பல புதிய ஆதரவாளர்கள் இணைக்கரம் கொடுத்து தாங்குவதற்கும் ஜெபம் செய்வோம்.

எசேக்கியாவின் பயம்

தியானம்: 2019 ஜனவரி 21 திங்கள் | வேத வாசிப்பு: 2இராஜாக்கள் 18:13-18

உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள், நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார்” (யோவான் 16:33).

“நான் கர்த்தரை அதிகமதிகமாக நெருங்கி வரவர அதற்கும் அதிகமாக நெருக்கங்கள் என்னைச் சூழ்ந்துகொள்கின்றன. நான் சாதாரண விசுவாசியாக இருந்திருக்கலாமோ என்ற எண்ணம் எனக்குள் வருகிறது” என்று தன் ஆதங்கத்தை ஒருவர் துக்கத்தோடே வெளிப்படுத்தினார். கிறிஸ்தவ விசுவாச வாழ்விலே, முதல்தரம், இரண்டாந்தரம் என்று எதுவுமே கிடையாது. ஒன்றில் என்ன நேர்ந்தாலும் தேவனுக்குப் பிரியமாய் வாழவேண்டும். அல்லது, நமது வழியில் போகவேண்டும். இரண்டிலும் குந்திக் குந்தி நடப்பது எப்படி?

எசேக்கியா ராஜா கர்த்தரின் பார்வைக்கு செம்மையானதைச் செய்தார். ஆலயத்தின் கதவுகளைத் திறப்பித்து, பழுதுபார்த்தார், ஆலயம் சுத்திகரிக்கப்பட்டது; தொழுகையும் ஆரம்பமானது. தேவனுடைய காரியங்களுக்கு முக்கியம் கொடுத்து, அவரைக் கனம் பண்ணின இவர் சத்துருவுக்குப் பயந்தது ஏன்? அசீரியா ராஜா யூதாவின் பட்டணங்களைத் தன் வசமாக்குவதற்கு வந்தான். எசேக்கியா தேவனுடைய காரியங்களைச் செய்துகொண்டிருந்தபோதுதான் இது நடந்தது. அசீரியா ராஜா யூதாவின் பட்டணங்களைப் பிடித்துக்கொண்டான் என்று கேள்விப்பட்டவுடனே எசேக்கியா பயந்து, சமாதானம் பேசி அவனிடத்தில் ஆட்களை அனுப்புகிறார். மாத்திரமல்ல, ஆலயக் கதவுகளிலும் நிலைகளிலும் அழுத்தியிருந்த பொன் தகடுகளையும் கழற்றி அனுப்புகிறார். இது எசேக்கியா செய்த பெரிய தவறாகும். எசேக்கியா தேவனை நோக்கிப் பார்க்கத் தவறிவிட்டார். சத்துருவைச் சமாதானப்படுத்த முயன்றார். இதற்குக் காரணம் பயம்.

இதையேதான் இன்று தெரிந்தோ தெரியாமலோ நாமும் செய்கிறோமோ என்று எண்ணத் தோன்றுகிறது. கர்த்தருக்காக நாம் பெரிய காரியங்கள் செய்யலாம்; பெரிய ஊழியங்கள் செய்யலாம். அது நல்லது, தேவையானது. ஒரு நெருக்கம் வரும்போது, நாம் முதலில் செய்வது என்ன? உண்மையிலேயே தடுமாறி நமது அறிவைப் பிரயோகித்துக் காரியங்களை முன்னெடுக்கிறோம் என்பதை மறுக்கமுடியாது. நெருக்கத்தைக் கர்த்தரிடம் கொண்டுசெல்லுவதை விட்டுவிட்டு, சத்துருவைப் பிரியப்படுத்தும் காரியங்களைச் செய்து, கர்த்தரைவிட்டுத் தூரம்போய் விடுகிறோம் என்பதை நாம் உணருவதுமில்லை. இது ஏன்? அல்லது எப்படி? நாம் சத்துருவுக்கும், வரும் பிரச்சனைகளுக்கும் பயப்படுவதால்தானே! தேவனை நம்புவோம், அவர் விடுவிப்பார்.

“இந்த ஏழை கூப்பிட்டான், கர்த்தர் கேட்டு, அவனை அவன் இடுக்கண்களுக் கெல்லாம் நீங்கலாக்கி இரட்சித்தார்” (சங். 34:6).

ஜெபம்: எங்கள் நீதியின் தேவனே, நிந்தனைகள் போராட்டங்கள் வந்தாலும் நீர் எங்களை அதினின்று பாதுகாத்து நடத்துகிறபடியால் உம்மைத் துதிக்கிறோம். ஆமென்.

சத்தியவசனம்