Daily Archives: January 1, 2019

வாக்குத்தத்தம்: 2019 ஜனவரி 1 செவ்வாய்

தேசமே, பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார் (யோவேல் 2:21)


தேவரீர் என் விளக்கை ஏற்றுவீர்; என் தேவனாகிய கர்த்தர் என் இருளை வெளிச்சமாக்குவார் (சங். 18:28).
ஆதியாகமம் 1,2 | மத்தேயு 1

ஜெபக்குறிப்பு: 2019 ஜனவரி 1 செவ்வாய்

என் நாமத்தினாலே நீங்கள் எதைக் கேட்டாலும் அதை நான் செய்வேன் (யோவான் 14:14).


“அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவர் பாதைகளில் நடப்போம்” (ஏசா.2:3) வருஷத்தை நன்மையால் முடிசூட்டுகிற கர்த்தருக்கு முன்பாக நம்மை தாழ்த்தி, ஒவ்வொரு நாளிலும் அவர் பாதைகளில் நடந்திட தீர்மானித்து ஜெயமெடுக்க தேவனுடைய கிருபைகளுக்காய் ஜெபிப்போம்.

நீ பயப்படாதே!

தியானம்: 2019 ஜனவரி 1 செவ்வாய் | வேத வாசிப்பு: யோசுவா 1:3-9

‘நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை. உன்னைக் கைவிடுவதுமில்லை” (யோசுவா 1:5).

வாசகர்கள் அனைவருக்கும் சத்தியவசன ஊழியத்தின் சார்பாக எமது இனிய
புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

இப்புத்தாண்டை மகிழ்ச்சியோடே வரவேற்கிறோமா? அல்லது, பயத்தோடே காலடி எடுத்து வைத்திருக்கிறோமா? பயம், மனித வாழ்க்கையிலே ஏற்படுகின்ற ஒரு சாதாரண அனுபவம். சில சந்தர்ப்பங்களில் “பயம்” நன்மை பயக்கும் அனுபவமாகிறது. இல்லாவிட்டால் பாதையின் நடுவிலே நடந்துசென்று விபத்துக்குள்ளாக நேரிடும் அல்லவா! இப்படியான ‘இயல்பான பயம்’ இல்லையென்றால் நாம் ஆபத்துக்குள்ளாகி உயிரைக்கூட இழக்கநேரிடும். அதேவேளை தேவையற்ற பயங்களும் உண்டு. நடக்காததை நடந்தது போல கற்பனை செய்வதும், இப்படி ஆகுமோ என்று நமக்கு நாமே அச்சத்தை ஏற்படுத்திக்கொள்வதுமான எதிர்மறையான பயங்களும் உண்டு. இவை நமக்கு நல்லதல்ல.

மோசே என்ற ஒரு பெரிய தலைவன் சுமந்துவந்த பொறுப்பு, இப்போது யோசுவாவின் மீது சுமத்தப்படுகிறது. இப்பெரிய சுமையால் யோசுவா பயப்பட்டிருந்தாலும் தவறில்லை. இலட்சக்கணக்கான ஜனத்தை, அதிலும் அடிக்கடி முறுமுறுக்கின்ற இந்த ஜனத்தை, கானானுக்கு நடத்திச்சென்று, தேசத்தைப் பிரித்துக் கொடுக்கவேண்டிய ஒரு பெரிய பொறுப்பு யோசுவாவுக்கு வந்திருக்கிறது. இதனால் அவன் சோர்ந்து, பயந்துவிடாதபடி, “பலங்கொண்டு திடமனதாயிரு” என்றும், “நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார்” என்றும் கர்த்தர் அவனை உற்சாகப்படுத்தினார்.

என்ன மனநிலையில் நாம் இப்புதிய ஆண்டைச் சந்தித்திருக்கிறோம்! யோசுவா ஒருவித பாரத்துடன் இருந்தான் என்றால், நாம் வேறுபட்ட மனப்பாரத்துடன் இருக்கலாம். இளவயதினர் புதிய வருடத்தைப் பயமின்றிச் சவாலாக எடுக்கலாம். வயது முதிர்ந்தவர்கள், வியாதிப்படுக்கையில் இருப்பவர்கள், இவர்களது உள்ளங்கள், “என்னவாகுமோ” என்று கலங்கக்கூடும். ஆனால், கர்த்தரோ, “நான் உன்னைக் கைவிடேன்” என்கிறார். பயம் என்பது என்ன? நமக்கு நேரிடுகின்ற அல்லது நேரிடலாம் என்று நாம் எண்ணுகின்ற பாதகமான காரியங்களைவிட, நமக்குள் இருக்கின்ற நம்பிக்கையின்மையே அதிக பயத்தைத் தோற்றுவிக்கிறது. ஒரு குழந்தை தன் தாயை நம்பி, அவள் மடியிலே அமைதியாய் தூங்குகிறது என்றால், ஒரு தாயிலும் மேலான அன்புகொண்ட ஒரு ஆண்டவர் நமக்கு இருக்கும்போது நாம் எதற்கும் பயப்பட வேண்டிய அவசியமில்லையே! பயங்களைத் தூக்கி எறிவோம். நம்பிக்கையோடு கர்த்தருடைய கரத்தைப் பற்றிக்கொண்டு முன்செல்லுவோம்.

“நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன். திகையாதே, நான் உன் தேவன்” (ஏசா.41:10).

ஜெபம்: அன்பின் தேவனே, இமைப்பொழுதும் தூங்காமல் கண்மணியைப்போல எங்களைப் பாதுகாக்கும் ஆண்டவர் எங்களுக்கு இருக்கிறபடியால் உம்மைத் துதிக்கிறோம். ஆமென்.

சத்தியவசனம்