Daily Archives: January 16, 2019

ஜெபக்குறிப்பு: 2019 ஜனவரி 16 புதன்

ஒவ்வொரு ஆண்டும் சுமார் 6 இலட்சம் மக்கள் புற்றுநோயால் மரிக்கின்றனர். கர்த்தர்தாமே மருத்துவ விஞ்ஞானத்தில் புற்றுநோய்க்கான மருந்துகளை கண்டுபிடிக்க கிருபை செய்வதற்கும், இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஒவ்வொருவருக்கும் சர்வாங்க சுகத்தைத் தந்தருளவும் மன்றாடுவோம்.

தாவீதின் தைரியம்

தியானம்: 2019 ஜனவரி 16 புதன் | வேத வாசிப்பு: 1சாமுவேல் 17:20-37

‘பின்னும் தாவீது: என்னைச் சிங்கத்தின் கைக்கும் கரடியின் கைக்கும் தப்புவித்த கர்த்தர் இந்தப் பெலிஸ்தனுடைய கைக்கும் தப்புவிப்பார் என்றான்’ (1சாமு. 17:37).

கிறிஸ்தவ வாலிபன் ஒருவன், ஒரு ஆயுதக் கும்பலினால் கடத்திச் செல்லப்பட்டு பின் விடுதலை செய்யப்பட்டான். “உனக்குப் பயமாக இருக்கவில்லையா?” என்று கேட்டபோது, அவன் தன் பயங்கரமான அனுபவத்தை நினைவுபடுத்தியவனாக: “அந்த நேரத்தில், அதைவிடப் பயங்கரமான சூழ்நிலைகளைச் சந்தித்த என் கடந்த கால அனுபவங்களையும், மரணத்தின் எல்லைவரை போய் வந்த சம்பவங்களையும் எண்ணிப் பார்த்தேன். அந்த மோசங்களிலிருந்து என்னை பாதுகாத்த கர்த்தருக்கு முன்பாக, இந்தப் பயங்கரம் எம்மாத்திரம் என்ற எண்ணம் எனக்குள் தோன்றியது. அதுவே எனக்குத் தைரியத்தைக் கொடுத்தது” என்று கண்களில் நீர் ததும்பக் கூறினான்.

தாவீது ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தபோது முதலில் ஒரு சிங்கம் வந்து ஒரு ஆட்டைப் பிடித்தது. ஆட்டைத் தப்புவித்தபோது சிங்கம் தாவீதைத் தாக்கியது. தாவீது அந்தச் சிங்கத்தைக் கொன்றுபோட்டார். கர்த்தர் அமைதியாகப் பார்த்திருந்தாரா! சிங்கத்திடம் தப்பியிருக்க, கரடி வந்தது. அதையும் தாவீது தாக்கி வெற்றியீட்டவும் கர்த்தர் பார்த்திருந்தாரா! ஆம், அமைதியாகவே இருந்தார். கர்த்தர் தாவீதுக்கு அழகாகப் பயிற்சி அளித்திருக்கிறார் என்பது இப்போது நமக்கு விளங்குகிறது. ஆகவேதான் தாவீதுக்குப் பயமே அற்றுப் போனது. அடுத்த காரணம், ஒரு சிங்கத்தையும் கரடியையும் கொன்றவனுக்கு விருத்தசேதனம் இல்லாத இந்தப் பெலிஸ்தனும் அந்த மிருகங்கள்போலவே தென்பட்டன. இஸ்ரவேலின் தேவனை நிந்தித்தவனை சும்மாவிடலாமா? தைரியத்தோடே தாவீது முன்வந்தார். தாவீது தன் சுயபெலத்தில் முன்செல்லவில்லை. கோலியாத்தைத் தாக்கியபோது, “இஸ்ரவேலுடைய இராணுவங்களின் தேவனாகிய சேனைகளின் கர்த்தரின் நாமத்திலே உன்னிடத்தில் வருகிறேன்” என்று சொல்லியே கோலியாத்தைத் தாவீது எதிர்த்து வீழ்த்தினான். தாவீதின் முந்திய அனுபவம், தேவன் தன்னுடன் இருக்கிறார் என்ற நிச்சயத்தைக் கொடுத்ததால் அவருக்குள் பயம் என்பது இம்மியளவேனும் இருக்கவில்லை.

அன்பானவர்களே, சற்று அமர்ந்து, கடந்து வந்த வாழ்க்கைப் பாதையிலே கர்த்தர் எப்படி நம்மை நடத்தினார் என்பதைச் சிந்தித்துப் பார்ப்போம். நாம் உண்மையற்றவர்களாய் இருந்த போதும், தேவன் உண்மையுள்ளவராய் இருந்து நம்மை பல ஆபத்துக்கள் துன்பங்கள் நடுவிலும் வழிநடத்தி வரவில்லையா? பின்னர் ஏன் பயம்? காத்தவர் காப்பார்! தைரியமாய் முன்செல்லுவோமாக.

“சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார். யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர்” (சங். 46:7).

ஜெபம்: நாங்கள் நம்பும் கன்மலையாகிய தேவனே, கடந்த நாட்களில் நீர் எங்களை நடத்தி வந்த சகல பாதைகளுக்காகவும் உம்மைத் துதிக்கிறோம். ஆமென்.

சத்தியவசனம்