வாக்குத்தத்தம்: 2019 நவம்பர் 1 வெள்ளி
என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் (யோவான் 7:38).
தேவனிடத்தில் சேருங்கள்; அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார் (யாக்.4:8).
எரேமியா 51,52 | தீத்து 2
என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் (யோவான் 7:38).
தேவனிடத்தில் சேருங்கள்; அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார் (யாக்.4:8).
எரேமியா 51,52 | தீத்து 2
கர்த்தாவே, நீர் எனக்குச் செவிகொடுத்து என்மேல் இரக்கமாயிரும்; கர்த்தாவே, நீர் எனக்குச் சகாயராயிரும் (சங்.30:9).
“..திடன்கொள்ளுங்கள்; உங்கள் கிரியைகளுக்குப் பலன் உண்டு” (2நாளா. 15:7) இவ்வாக்குப்படியே இம்மாதம் முழுவதும் நாம் மேற்கொள்ளும் கைகளின் பிரயாசங்களுக்கு நல்ல பலனை கர்த்தர் தந்தருளவும், தம்முடைய ஆவியினால் நம்மை வழிநடத்தவும் நம்மை அர்ப்பணித்து ஜெபிப்போம்.
தியானம்: 2019 நவம்பர் 1 வெள்ளி | வேத வாசிப்பு: யோசுவா 7:1-12
‘…இஸ்ரவேல் பாளயத்தைச் சாபத்தீடாக்கி அதைக் கலங்கப் பண்ணாதபடிக்கும், நீங்கள் சாபத்தீடானதற்கு மாத்திரம் எச்சரிக்கையாயிருங்கள்” (யோசுவா 6:18).
நம்முடைய வாழ்வில் பிரச்சனைகள் அலைகள்போல் தொடரும்போதும், கண்ணீர் கவலைகள் பெருகும்போதும், ஏன்? ஏன்? என்று அங்கலாய்கிறோம். நமது அந்தரங்க வாழ்வில் தவறுகளை வைத்திருக்கின்ற நாம், தேவன் தவறு செய்யமாட்டார் என்ற உண்மையை மறந்துவிடுவது ஏன்? நம்மை ஆராய்ந்து பார்க்க மறந்துவிடுவதுதான் இதற்குக் காரணம்.
யோசுவாவின் தலைமையில் பல யுத்தங்களில் வெற்றிக்கண்ட இஸ்ரவேலினால், கொஞ்சம் பேர்கொண்ட ஆயி பட்டணத்தையோ மேற்கொள்ள முடியவில்லை. யோசுவாவின் மனுஷர் முறிந்தோடினது மட்டுமல்ல, ஏறக்குறைய முப்பத்தாறு பேர்கள் வெட்டிப்போடப்பட்டனர். இதனை ஜீரணிக்க முடியாத யோசுவா தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு இஸ்ரவேலின் மூப்பருடன் சாயங்காலம் மட்டும் கர்த்தரின் பெட்டிக்கு முன்பாக தலையில் புழுதியைப் போட்டுக்கொண்டு கிடந்தான். அப்பொழுது, கர்த்தர் யோசுவாவை நோக்கி, “எழுந்திரு, நீ இப்படிக் கிடக்கிறது என்ன?” என்ற கேள்விக்கு கர்த்தரே காரணத்தையும் கூறினார். இஸ்ரவேல் சாபத்தீடானதில் எடுத்துக்கொண்டதும், களவு செய்ததும், வஞ்சித்ததும், ஒளித்து வைத்ததுமான மறைவான பாவங்களைக் கர்த்தர் சுட்டிக்காட்டினார்.
கர்த்தரிடம் ஏன் என்று கேட்பதை விட்டு, நம்மை நாமே கேட்க வேண்டிய கேள்விகள் அநேகமுண்டு. உண்மையாகவே என்னிடம் அன்புகூர்ந்த கர்த்தருக்கு நான் உண்மை உள்ளத்துடன் கீழ்ப்படிந்தேனா? பல தடவைகள் கர்த்தர் தமது வார்த்தைகள் மூலம் பேசியும் மெய்யாகவே மனந்திரும்பினேனா? பல தேவ ஊழியர்களின் செய்திகள் மூலம் பேசினாரே, உண்மையாகவே கீழ்ப்படிந்தேனா? ஜெபிக்கின்ற வேளைகளில் கர்த்தர் எத்தனைமுறை என்னுடன் இடைப்பட்டார். இதுவே தருணம் என்று என்னை மாற்றிக்கொண்டேனா? தவறை என்னில் வைத்துக்கொண்டு, “என்ன தவறு செய்தேன்” என்று கேட்பதெப்படி?
பிறரில் பழிசுமத்துவதும், சாக்குபோக்குச் சொல்லுவதும், கர்த்தருக்கு முழு மனதோடு கீழ்ப்படியாமல், அவருக்குச் செவிகொடுக்காமல் வாழுகின்ற வாழ்வு முரட்டாட்டமே (1சாமு.15:23). நிரந்தர மனந்திரும்புதலே நிச்சயமான தீர்வாக இருக்கும். தாவீதைப்போல, மனஸ்தாபப்பட்டு மனந்திரும்பி கர்த்தரிடம் மன்றாடுவோம். முழு மனதோடு கீழ்ப்படிய நம்மை அர்ப்பணிப்போம்.
“தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும்” (சங்.51:10).
ஜெபம்: அன்பின் கர்த்தாவே, எங்களிலுள்ள முரட்டாட்டமான சுபாவங்களை மன்னித்து முழுமனதோடு உமக்குக் கீழ்ப்படியும் இருதயத்தை எங்களுக்குத் தாரும். ஆமென்.
நாள்தோறும் நான் வாதிக்கப்பட்டும், காலைதோறும் தண்டிக்கப்பட்டும் இருக்கிறேன் (சங்கீதம் 73:14).
ஆசாப் என்பவர் எழுதிய 11 சங்கீதங்களில் இது இரண்டாவது பாடலாகும். 2நாளாகமம் 29:30 இல் எசேக்கியா அரசர், “தாவீதும் ஞான திருஷ்டிக்காரனாகிய ஆசாபும் பாடின வார்த்தைகளினால் கர்த்தரைத் துதிக்க” லேவியரை அழைக்கிறார். ஆசாப் என்பவர் இசை எழுத்தாளர் மாத்திரமல்ல; ஒரு தீர்க்கதரிசியாகவும் இருந்தார். குழப்பமான சங்கீதம் 37 இன் தழுவல் இச்சங்கீதம் எனலாம். சங்கீதம் 49 மற்றும் யோபு புத்தகத்தின் பொருளும் இதுவாகவே உள்ளது. துன்மார்க்கர் செழித்தோங்கவும் நீதிமான்கள் துன்பப்படவும் மகாசர்வ வல்லமையுள்ள தேவன் எவ்வாறு அனுமதிக்கிறார்? ஒருவேளை இக்கேள்வியை நீங்களும் தேவனிடத்தில் கேட்டுக் கொண்டிருக்கலாம். இதற்கான பதில் சங்கீதம் 73இல் காணப்படுகிறது.
இஸ்ரவேலரின் வனாந்தர யாத்திரை போலவே பரலோகத்துக்குச் செல்லும் வழியும் உள்ளது. அது சிலுவைகள் நிறைந்து துயரமும் துன்பங்களும் நொறுக்கங்களும் உள்ள வழியாகும். ஆசாபின் கால்கள் தள்ளாடுதலுக்கும் சறுக்குதலுக்கும் உள்ளான பொழுது இவ்வுண்மையை அறிந்து கொண்டார். தன்னைச் சுற்றிலும் உள்ள துன்மார்க்கர் செழித்திருப்பதைக் கண்டு பொறாமை கொண்டார். அவர்களுடைய வாழ்வில் வேதனைகளோ துன்பங்களோ இல்லை. துன்மார்க்கரின் கண்கள் கொழுப்பினால் எடுப்பாய்ப் பார்க்கிறது. ஆடம்பரங்களை அனுபவிக்கிறார்கள். செல்வத்திலும் செழிப்பிலும் வளருகின்றனர்; தேவனைத் தூஷித்தாலும் சர்வவல்ல ஆண்டவர் அதை அனுமதிக்கிறார். இதை அவரால் சகித்துக்கொள்ள முடியவில்லை.
மறுபுறமோ ஆசாப் தன் இருதயத்தைச் சுத்தம் பண்ணி, குற்றமில்லாமையிலே அவருடைய கைகளைக் கழுவி தேவனுக்கு முன்பாக ஓர் உத்தமமான வாழ்வை நடத்தி வந்தாலும், அவர் நாள்தோறும் வாதிக்கப்பட்டும் தண்டிக்கப்பட்டும் இருந்தார். தேவன் விரும்பும் ஒரு வாழ்வை நடத்தி வந்தாலும் தேவன் ஏன் அவருக்குப் பாடுகளை அனுமதித்ததா? அனுதினமும் ஒரு மனிதனின் ஆத்துமாவையும் எலும்பையும் நொறுக்காமலிருந்தாலும், தேவனுடைய கண்டிப்பும் தண்டனையும் இல்லாத நாட்கள் குறைவே. கிறிஸ்தவ வாழ்வில் தேவனுடைய கிருபையை அறிவதற்காகவே பாடுகள் நேரிடுகின்றன. தேவன் அடிக்கும் வேளையையும், அணைக்கும் வேளையையும் அறிந்துகொள்ள வேண்டும்.
ஆசாப் “நாள்தோறும் நான் வாதிக்கப்பட்டும் காலைதோறும் தண்டிக்கப்பட்டும் இருக்கிறேன்” (சங்.73: 14) என்று அங்கலாய்க்கிறார். தேவனால் அடிக்கப்பட்டவராய் காலையில் எழும்புகிறார். அவர் இடுக்கத்தின் அப்பத்தை காலை உணவாகவும், விசாரத்தை பானமாகவும் கொண்டார். தேவனுடைய கண்டிப்பை உணரவே ஒவ்வொரு நாளும் காலையில் எழுவதாகக் கூறுகிறார். தன்னைச் சுற்றிலும் உள்ளவர்கள் பரிசுத்தமில்லாமல் வாழ்ந்தாலும் செழிப்பாக இருப்பதாயும், தான் உலகத்தால் கறைபடாத பரிசுத்த வாழ்க்கை நடத்தி துன்புறுவது தேவையா என்று வினவுகிறார். ஒருவேளை இந்த கேள்வியே உங்கள் உள்ளத்திலும் எழுந்திருக்கும்.
வட ஐரோப்பாவின் காடுகளில் எர்மைன் என்ற ஒரு சிறிய பிராணி உண்டு. அதனுடைய வெள்ளை நிற உரோமம் பெயர் பெற்றது. அது தன்னுடைய வெள்ளை நிற உரோமத்தை கறைபடாமல் காத்துக்கொள்ளும். இப்பண்பினை வைத்து ஐரோப்பிய வேட்டைக்காரர்கள் அதனைப் பிடிக்கின்றனர். அவர்கள் இயந்திர வலையை வைத்து அவைகளைப் பிடிப்பதில்லை. மலையுச்சியில் அதனுடைய வீட்டைக் கண்டுபிடித்து அதன் வாசலை தாரினால் மெழுகி விடுகின்றனர். அப் பிராணியை விரட்டும்பொழுது அது பயந்து தனது வீட்டுக்கு விரைந்தோடும். ஆனால் அது அழுக்காக இருப்பதைக் கண்டு வேறொரு பாதுகாப்பான இடத்தை நாடி ஓட எண்ணும். தன்னை கறைபடுத்திக் கொள்ளாதிருப்பதற்காக வேடர்களைத் துணிச்சலுடன் எதிர்த்து நிற்கும். இதுதான் அதன் குணநலன். மயிர் நீப்பின உயிர் வாழாக் கவரிமான் போல தன் உயிரைவிட பரிசுத்தத்தையே அது பாதுகாக்கிறது.
தேவனால் நாம் அநியாயமாய் தண்டிக்கப்படுகிறோம் என்று நாம் உணரும் வேளைகளில் நம்முடைய உத்தமமான வாழ்வினை இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். அப்பொழுது எர்மைனை நினைத்துக் கொள்ளுங்கள். உலகத்தால் கறை படாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்ளுகிறதுமே பிதாவாகிய தேவனுக்கு முன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது (யாக்.1:27). உலகத்தால் கறைபடாதபடி நம்மைக் காத்துக்கொள்வதே கிறிஸ்தவ வாழ்வின் குறிக்கோள்.
பாடுகள் நமது பண்பினை சோதிக்கும்; பண்புகள் சோதிக்கப்படும் பொழுது சரியான வழிமுறையைப் பின்பற்றினால் பண்பு நலன் உறுதிப்படும். தேவன் நமக்கு தேவையான பாடுகளை அனுப்பி நம்மை சிட்சிப்பதால் நாம் மகிழ்ந்து களிகூருவோம்.
சோதனையில் இயேசுவே எனக்காக மன்றாடும்;
உம்மை மறுதலித்து விலகாதபடி காத்திடும் .
நான் தடுமாறும் வேளையில் என்னைத் தாங்கிடும்;
பயமோ அன்போ என்னை வீழ்த்தாதபடி உதவிடும்.
மொழியாக்கம்: Sis.அகஸ்டா மங்களதுரை
[01]
I am very happy to tell you that I follow this Time table ever since introduced to the readers. I follow this Time table sincerely and finish reading the Bible in one year. This helps me to read the Bible Systematically and continuously from 1st January to the 31st December. Sometimes if I have to read 3 or 4 chapters a day. I never get bored. It also gives me the satisfaction of reading and completing the Bible in a year. Thank you very much for helping me read the Bible not only just reading but I study every verse with concentration and understanding. I assure you of my continued prayers for the Sathiavasanam Ministry.
Mrs.Nalini stephenson, Vellore.
[02]
அன்பு சகோதரருக்கு, நீங்கள் அனுப்பும் தின தியான புத்தகங்களும் எனக்கு மிகவும் பிரயோஜனமாக இருக்கிறது. தொலைகாட்சி நிகழ்ச்சிகளும் அதிக பயனுள்ளதாக இருக்கிறது. ஊழியத்தில் பங்கேற்கும் ஒவ்வொருவரையும் குடும்பங்களையும் தேவன்தாமே அபரிமிதமாக ஆசீர்வதிப்பாராக!
Mrs.Padmini Victor, Madurai.
[03]
அன்பான சகோதரருக்கு, தங்களது வாட்ஸ் அப் மூலம் தினமும் செய்திகள் பெற்று பலன் அடைந்துவருகிறேன். ஊழியங்களுக்காக ஜெபிக்கிறேன். நன்றி.
Mr.Alphonse Jesu Antony, Chennai.
[04]
தாங்கள் ஒலிபரப்பிவரும் வானொலி நிகழ்ச்சிகளை 1965 முதல் கேட்டு வருகிறேன். அதில் வரும் பாடல்கள் மிக மிக இனிமையாக இருக்கிறது. ஊழியங்களுக்காக மறவாமல் ஜெபித்து வருகிறேன்.
Mr.D.Francis, Elathagiri.
[05]
தாங்கள் அனுப்பும் அனுதினமும் கிறிஸ்துவுடன் புத்தகத்தை தவறாமல் படித்து பயனடைந்து வருகிறேன். உங்கள் ஊழியம் மேன்மேலும் சிறப்புறவும் பன்மடங்கு ஆசீர்வதிக்கப்படுவதற்கும் ஜெபிக்கிறோம்.
Mr.D.Thangaraj, Kottaram.
கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,
அதிசயமான தேவனின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.
இவ்விதழின் மூலம் தங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம். வருடத்தின் இறுதி மாதங்களுக்குள் வந்திருக்கிறோம். இவ்வருடம் முழுவதும் கர்த்தர் போதுமானவராக இருந்து ஊழியத்தை ஆசீர்வதித்தார். தேவைகளை சந்தித்தார். தேவனுக்கு எமது நன்றிகளைத் தெரிவிக்கிறோம்.
அக்டோபர் 2ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற விசுவாச பங்காளர் கூடுகை கர்த்தருடைய கிருபையால் சிறப்பாக நடைபெற்றது. சென்னையிலுள்ள பங்காளர்களும் நேயர்களும் கலந்துகொண்டு கூட்டத்தைச் சிறப்பித்தார்கள். சாட்சி வேளையிலும் சத்திய வசன ஊழியத்தின் மூலம் பெற்றுக்கொண்ட நன்மைகளை ஆசீர்வாதங்களை அநேக பங்காளர்கள் பகிர்ந்துகொண்டது எங்களுக்கு அதிக ஊக்கத்தை அளித்தது. இக்கூட்டத்தின் மூலமாக சென்னையிலுள்ள பங்காளர்களையும் நேயர்களையும் சந்தித்தது எங்களுக்கு அதிக மகிழ்ச்சி. கலந்துகொண்ட யாவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
2019ஆம் ஆண்டிலும் தியான புத்தகத்திலுள்ள வேதவாசிப்பு அட்டவணையைப் பயன்படுத்தி பரிசுத்த வேதாகமத்தை முழுவதும் வாசித்து முடித்தவர்கள் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். உங்கள் பெயர்களை வரும் இதழில் பிரசுரிப்போம். வாசிக்க தவறியவர்கள் வரும் ஆண்டிலே வாசிப்பதற்கும் உற்சாகப்படுத்துகிறோம்.
இவ்விதழில் சகோ.தர்மகுல சிங்கம் அவர்கள் பரிசுத்த வேதாகமத்தின் பலருடைய வாழ்க்கை அனுபவங்களை முன்நிறுத்தி அதன்மூலம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய ஆவிக்குரிய சத்தியங்களைத் தியானித்து நவம்பர் மாதத்தில் எழுதியுள்ளார்கள். டிசம்பர் மாதத்தில் சகோதரி தர்ஷினி சேவியர் அவர்கள் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் முதல் வருகையைக் கொண்டாடும் நாம் இரண்டாம் வருகைக்கு ஆயத்தமாவதைப் பற்றியும் கிறிஸ்துமஸின் உண்மையான அர்த்தங்களைப் புரிந்துகொண்டு கிறிஸ்துமஸ் தினத்தை அனுசரிப்பதைப்பற்றியும் தியானங்களை எழுதியுள்ளார்கள். தியானங்களினாலே நமது ஆத்துமாவிலே கர்த்தர் பெலன் தந்து தைரியப்படுத்துவார். தியானங்களை எழுதும் சகோதர, சகோதரிகளுக்காக ஜெபியுங்கள்.
கே.ப.ஆபிரகாம்
