ஜெபக்குறிப்பு: 2019 அக்டோபர் 31 வியாழன்
கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவர் என்னிடமாய்ச் சாய்ந்து என் கூப்பிடுதலைக் கேட்டார் (சங்.40:1) இம்மாதத்தின் இறுதிநாளில் நிற்கிற நாம் இம்மட்டும் கர்த்தர் செய்த நன்மைகளுக்காகவும் பாதுகாப்பிற்காகவும் நன்றி செலுத்தி, புதிய மாதத்தின் ஆசீர்வாதத்திற்காக ஜெபிப்போம்.
நன்மை தொடருவது நிச்சயம்!
தியானம்: 2019 அக்டோபர் 31 வியாழன் | வேத வாசிப்பு: 2சாமு. 2:5-7
என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும் (சங்.23:6).
தாவீதை எதிர்த்த சவுல் மரணமடைந்தபோது கீலேயாத்து தேசத்து மனுஷரில் சிலர் போய், அவனது உடலை அடக்கம் பண்ணினார்கள். இதனைக் கேள்விப்பட்ட தாவீது, அந்த யாப்பேசின் மனுஷரிடத்திற்கு தனது ஸ்தானாதிபதிகளை அனுப்பினார். “உங்கள் ஆண்டவனாகிய சவுலுக்கு இந்தத் தயவைச் செய்து, அவரை அடக்கம் பண்ணினபடியினாலே, கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக” என்று அவர்களை வாழ்த்தினார். பின்னர், நீங்கள் செய்த இந்த நன்மைக்குத்தக்கபடி உங்களை நடத்துவேன் எனவும், சவுல் மரித்தபின்பு, யூதா வம்சத்தார் என்னைத் தங்கள்மேல் ராஜாவாக அபிஷேகம் பண்ணினார்கள் எனவும் தாவீது அவர்களுக்குச் சொல்லச் சொன்னார் என்று இன்றைய வாசிப்புப் பகுதியிலே வாசிக்கிறோம்.
ஒரு சாதாரண மனிதனான தாவீது, இவ்வாறு நன்மையும் தயையும் செய்யும்போது, நமது பரமதந்தையாகிய ஆண்டவர் நமக்கு எவ்வளவு நன்மை செய்வார். அவரது அன்பு மாறாதது, அது மனிதர்களுடைய அன்பைப்போல சூழ்நிலைகளுக்கு ஏற்றவிதமாக கூடிக்குறைவது அல்ல. எனவே நாம் எந்நிலையிலிருந்தபோதும் எப்பொழுதும் ஒரே விதமாகவே ஆண்டவர் நம்மை நேசிக்கிறார். அவர் நமக்கு நன்மை செய்கின்றவராகவே இருக்கிறார். அவர் நமக்கு ஒருபோதும் தீமையானதைத் தரமாட்டார் என்ற நிச்சயத்தை நாம் உடையவர்களாக மற்றவர்களுக்கு நன்மை செய்வதில் சோர்ந்துபோகாதிருப்போம். அப்போது தேவனின் நன்மையும் கிருபையும் நம்மைத் தொடந்துவரும்.
தேவனை நம்பி தேவபயத்தோடு வாழ்கின்றவர்கள் நிச்சயமாக தேவனுடைய ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ள தகுதியுள்ளவர்களாகவே இருக்கிறார்கள். தேவனாகிய கர்த்தர் தமது பிள்ளைகளுக்குரிய “..கிருபையையும் மகிமையையும் அருளுகிறவர்” (சங்.84:11), “உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காதிரார்” என நீதி.14:22இல் தேவ வார்த்தை கூறுகின்றது. ஆம், நன்மையை யோசிக்கிறவர்களுக்கு தேவகிருபையும் சத்தியமுமுண்டு. தேவனை நம்பியவர்கள் எப்பொழுதும் அவருடைய நன்மையினாலும் கிருபையினாலும் நிறைந்தவர்களாகவே இருப்பார்கள்.
தேவபிள்ளையே, கர்த்தரை நம்பி நன்மையை செய். அப்பொழுது அவரே உன்னைக் காப்பாற்றுவார். அவர் அருளும் நன்மையும் அவரது கிருபையும் நம்மைத் தொடர்ந்துவரும்.
உன் பிராணனை அழிவுக்கு விலக்கிமீட்டு, உன்னைக் கிருபையினாலும் இரக்கங் களினாலும் முடிசூட்டி, நன்மையினால் உன் வாயைத் திருப்தியாக்குகிறார் (சங்.103:4,5).
ஜெபம்: கர்த்தாவே, நீர் தருகின்ற நன்மைக்காகவும் கிருபைக்காகவும் உமக்கு நன்றி. இம்மாதம் முழுவதும் என்னைக் கரம்பிடித்து நடத்தினீரே. ஸ்தோத்திரம். ஆமென்.
வாக்குத்தத்தம்: 2019 அக்டோபர் 30 புதன்
சத்தியத்தையும் அறிவீர்கள். சத்தியம் உங்களை விடுதலையாக்கும் (யோவா.8:32).
எரேமியா 45-48 | 2தீமோத்தேயு 4
ஜெபக்குறிப்பு: 2019 அக்டோபர் 30 புதன்
கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்; நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார் (சங்.55:22) பற்பலவிதமான தேவைகளோடும் மன பாரங்களோடும் உள்ள பங்காளர்களது மனகுழப்பங்கள் பாரங்களை கர்த்தர் நீக்கி அவர்களது தேவைகளைச் சந்திப்பதற்கும், தேவனுடைய நன்மையான திட்டங்கள் அவர்களது வாழ்வில் நிறைவேறுவதற்கும் வேண்டுதல் செய்வோம்.
வார்த்தையில் ஜாக்கிரதை!
தியானம்: 2019 அக்டோபர் 30 புதன் | வேத வாசிப்பு: யாக்கோபு 3:1-5
தன் வாயைக் காக்கிறவன் தன் பிராணனைக் காக்கிறான். தன் உதடுகளை விரிவாய்த் திறக்கிறவனோ கலக்கமடைவான் (நீதி.13:3).
அதிகாலையில் தொலைபேசியின் அலறல் சத்தம் என்னைத் தூக்கத்திலிருந்து எழுப்பியது. யாராயிருக்கும் என்ற கேள்வியோடு தொலைபேசியை எடுத்ததும், “சொல்லக்கூடாததைச் சொல்லிவிட்டேன். இதனால் எனது வேலை ஸ்தலத்தில் பல குழப்பங்களை எதிர்நோக்குகிறேன். தயவுசெய்து எனக்காக ஜெபியுங்கள்” என்று ஒரு சகோதரி அழுகின்ற சத்தம் கேட்டது.
“நாவானதும் சிறிய அவயவமாயிருந்தும் பெருமையானவைகளைப் பேசும்” (யாக்.3:5) என்கிறார் யாக்கோபு. ஒரு சிறிய தீக்குச்சி நெருப்பு எவ்வளவு பெரிய காட்டையும் பற்றியெரிய வைத்துவிடுகிறதல்லவா! “நாவும் நெருப்புத்தான். அது அநீதி நிறைந்த உலகம். நம்முடைய அவயவங்களில் நாவானது முழு சரீரத்தையும் கறைப்படுத்தி, ஆயுள் சக்கரத்தைக் கொழுத்திவிடுகிறதாயும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறதாயும் இருக்கிறது” என்று தொடர்ந்து யாக்கோபு விளக்குகிறார். மேலும்,”நாவை அடக்க ஒரு மனுஷனாலும் கூடாது. அது அடங்காத பொல்லாங்குள்ளதும், சாவுக்கேதுவான விஷம் நிறைந்ததுமாயிருக்கிறது. துதித்தலும் சபித்தலும் ஒரே வாயிலிருந்து புறப்படும். சகோதரரே! அப்படியிருக்கலாகாது” என்றும் எழுதியுள்ளார். இது எத்தனை உண்மை! மனிதன் தன் நாவினால், அதில் வெளிப்படும் வார்த்தையால் எதையும் சாதிக்க முடியும் என்று எண்ணினால், அது அவனையே சுட்டுப்போடும்.
அன்பானவர்களே, நமது நாவு எப்படிப்பட்டது. நறுக்கென்று வெட்டுமா? அல்லது, ஆறுதல் கொடுக்கும் வார்த்தைகளை உதிர்க்குமா? பிறரைக் குறித்து அநாவசியமாகப் பேசி அவர்களைக் கொன்றுபோடுமா? அல்லது, வாழ்வளிக்கும் இனிய வார்த்தைகளைப் பேசுமா? நமது நாவுகளைத் தேவகரத்தில் விட்டுவிடுவோம். அவரது வார்த்தைகள் மாத்திரம் நமது நாவுகளில் வெளிப்படுமானால், அது நமக்கும் பிறருக்கும் ஆசீர்வாதமாக இருக்குமே தவிர, தீங்கிழைக்காது. சிந்திக்காமல், உணர்வினால் தூண்டப்பட்டு, அவசரப்பட்டுப் பேசிவிடுகின்ற வார்த்தைகள் எத்தகைய விபரீதங்களை இதுவரை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை உண்மைத்துவத்துடன் சிந்தித்து மனந்திரும்புவோமாக. தேவனுடைய வார்த்தையால் நமது இருதயம் நிரம்புமானால், நமது நாவும் ஜீவன் தரும் வார்த்தைகளையே பேசும் அல்லவா! அது நமக்கும் பிறருக்கும் ஆரோக்கியத்தைக் கொடுக்கும். தேவனுடைய நாமமும் நம்மில் மகிமைப்படும்.
ஆரோக்கியமுள்ள நாவு ஜீவவிருட்சம்; நாவின் மாறுபாடோ ஆவியை நொறுக்கும் (நீதி.15:4).
ஜெபம்: அன்பின் கர்த்தாவே, என் வாய்க்கு காவல் வையும்; என் உதடுகளின் வாசலைக் காத்துக்கொள்ளும். ஆமென்.