ஜெபக்குறிப்பு: 2019 அக்டோபர் 10 வியாழன்

உங்கள் கிரியையையும் … தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்து விடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவரல்லவே (எபி.6:10) நீதியுள்ள தேவன் சத்தியவசன ஊழியத்தின் பிரதிநிதிகளாக செயல்பட்டு வரும் சகோதர, சகோதரிகளுக்கு வேண்டிய நல்ல சுகத்தையும் ஆரோக்கியத்தை தந்து வழி நடத்தவும் அவர்கள் குடும்பங்களை ஆசீர்வதிக்கவும் ஜெபிப்போம்.

உலகத்தின் ஒளி

தியானம்: 2019 அக்டோபர் 10 வியாழன் | வேத வாசிப்பு: யோவான் 8:1-39

மறுபடியும் இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவ ஒளியை அடைந்திருப்பான் என்றார் (யோவான் 8:12).

சிருஷ்டிப்பில் இருளாயிருந்த பூமியில், தேவன் முதன்முதலாகச் சிருஷ்டித்தது வெளிச்சம்தான்; இந்த வெளிச்சத்தையும் இருளையும் வேறு பிரித்து, “பகல், இரவு” என்று பெயரிட்டார். இந்த வெளிச்சம் அவரிடத்திலிருந்து வந்தது. பின்னர்தான் இந்தப் பகலையும் இருளையும் ஆள ஆகாயத்திலே சுடர்களைச் சிருஷ்டித்தார்.

நாம் இன்று காணுகின்ற அனுபவிக்கின்ற வெளிச்சம் சூரியனின் பிரகாசத்திலிருந்து தோன்றினாலும், அந்தச் சூரியனுக்கு ஒளியைக் கொடுத்தது யார்? ஆக, சூரிய ஒளி ஒருநாள் மங்கிப்போனாலும், மங்காத தெய்வீக ஒளி இல்லையேல் நித்திய இருளுக்குள் நாம் தள்ளப்பட்டு போவோம் அல்லவா! ஆக, இந்த நித்திய ஒளியைக் குறித்து, “அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது. அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது. இருளானது அதைப்பற்றிக்கொள்ளவில்லை” என்றும், “உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி” (யோவா.1:4-5,9) என்றும் யோவான் எழுதி வைத்துள்ளார்.

யோவான் குறிப்பிட்ட இந்த ஒளியானது பாவத்தினால் இருளடைந்திருக்கும் மனிதனை ஒளிரச்செய்யும் ஜீவ ஒளி. இந்த ஒளியைக் குறித்தே ஏசாயா தீர்க்கதரிசி, “இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள். மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின்மேல் வெளிச்சம் பிரகாசித்தது” (ஏசா.9:2) என்று குறிப்பிட்டார். வாக்களிக்கப்பட்ட இந்த ஒளிக்காக யூதர் காத்திருந்தனர். ஆனால், “நான் உலகத்திற்கு ஒளியாக வந்தேன்” (யோவா.812) என்று இயேசு தம்மை வெளிப்படுத்தியபோது, பரிசேயரும் ஆசாரியரும் அதை ஏற்கமறுத்துவிட்டனர். ஒளி இல்லாத இடத்தில் இருளைத் தவிர வேறு என்னதான் இருக்கமுடியும்? மாறாக, தம்மைத் தங்கள் வாழ்வின் ஒளியாக ஏற்று விசுவாசிக்கின்ற எவரையும், அந்த ஒளிக்குள் அழைத்துக்கொள்ள ஆண்டவர் இன்றும் என்றும் தயை பெருத்தவராகவே இருக்கிறார். இன்று நமது காரியம் என்ன? அந்த ஒளியை நிராகரிக்க நாம் யூதரல்ல. ஆனால், ஒளிக்குள் வரவழைக்கப்பட்டோம் என்று சொல்லுகிற நாம் அந்த ஒளியில் நடக்கிறோமா என்பதே கேள்வி. இன்றே நம்மைச் சூழ்ந்திருக்கும் இருள் அகன்று நித்திய ஒளி நம்மில் பிரகாசிக்கும்படி கிறிஸ்துவின் கிருபைக்கு நம்மை அர்ப்பணிப்போமா!

நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய … பரிசுத்த ஜாதியாயும் அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள் ( 1பேதுரு 2:9).

ஜெபம்: எங்களை ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவரே, எங்களில் காணப்படுகிற பாவமான இருள் முழுவதும் அகன்றுபோகும்படியாக உம்முடைய பாதத்தில் எங்களை அர்ப்பணிக்கிறோம். ஆமென்.