Daily Archives: October 7, 2019

ஜெபக்குறிப்பு: 2019 அக்டோபர் 7 திங்கள்

தேவரீர் என்னை ஆசீர்வதித்து, என் எல்லையைப் பெரிதாக்கும் (1நாளா.4:10) வேண்டிக்கொள்ளுகிறதற்கும் அதிகமாக செய்கிற ஆண்டவர்தாமே வேதாகமத்திற்கு திரும்புக ஹிந்தி, மராட்டி, பெங்காலி ஊழியங்களை ஆசீர்வதித்து எல்லையை விரிவாக்க, ஊழியத் தேவைகளை சந்திக்க ஜெபம் செய்வோம்.

ஜீவ அப்பம்

தியானம்: 2019 அக்டோபர் 7 திங்கள் | வேத வாசிப்பு: யோவான் 6:32-38

வானத்திலிருந்திறங்கி, உலகத்துக்கு ஜீவனைக் கொடுக்கிற அப்பமே தேவன் அருளிய அப்பம் என்றார் (யோவான் 6:33).

மனிதன் உயிர் வாழ்வதற்கு அத்தியாவசியங்களில் ஒன்று உணவு. அன்று தானியத்தைக் கொண்டு செய்யப்பட்ட அப்பம் மக்களுக்கு அன்றாட உணவாக இருந்தது. ஆகவேதான், இயேசு அப்பத்தைக் குறிப்பிட்டு அவர்களுடன் பேசினார்.

அன்று எகிப்திலிருந்து வனாந்தரத்திற்கு அழைத்துவரப்பட்ட இஸ்ரவேலுக்கு, தேவன், முழு உணவான மன்னாவை வானத்திலிருந்து நேரடியாகவே கொடுத்தார். அது ஒரு பூரண உணவாயிருந்தது. தேவன், தம் மக்களின் தேவனாக மாத்திரமல்ல, அவர்களின் பசியையும் ஆற்றுகிறவர். இயேசுவும், தம்மிடம் வந்திருந்த மக்கள் பசியோடிருந்ததைக் கண்டு, ஐந்து அப்பங்கள், இரண்டு மீன்களைக்கொண்டு அவர்களைப் போஷித்தார். பின்னர் இயேசு மறுகரைக்குச் சென்றபோதும், ஐனங்களோ அவரை விடாது பின்தொடர்ந்தனர். அவர்கள், இயேசுவை அல்ல; அப்பம் புசித்துத் திருப்தியடைந்ததினாலேயே தம்மை பின்தொடருகிறார்கள் என்பதை இயேசு அறிந்திருந்தார். அழிந்துபோகிற போஜனத்திற்காக அல்ல, நித்திய ஜீவன்வரைக்கும் நிலைத்திருப்பதற்கேற்ற போஜனத்தைத் தேடவேண்டியதின் முக்கியத்துவத்தை இயேசு போதித்தார். அன்று இஸ்ரவேலின் சரீரத்தைப் போஷிக்க மன்னா வானத்திலிருந்து இறங்கியது. ஆனால் அது பின்னர் ஓய்ந்துபோயிற்று. அதனால் நித்திய வாழ்வைக் கொடுக்கமுடியாது. நித்திய வாழ்வை அருளும் ஜீவ அப்பமே மனிதனுக்கு முக்கியம் என்று போதித்த இயேசு, வானத்திலிருந்து இறங்கி, நாளை ஒழிந்துபோகிற அல்ல; என்றும் அழியாத ஜீவனைக் கொடுக்கிற ஜீவ அப்பம் தாமே என்று தம்மை வெளிப்படுத்தினார்.

ஆதியிலே வார்த்தையாயிருந்தவர், படைப்பிலே வார்த்தையாய் நின்றவர், ஏற்ற காலத்தில் மாம்சமாகி உலகிற்கு வந்தவர், தாமே ஜீவ அப்பம் என்று எடுத்துரைத்தவர், வெறும் அப்பத்தினால் அல்ல, தம் வார்த்தையினால் மனிதன் நித்தியமாய் வாழுவான் என்ற சத்தியத்தை உலகிற்கு எடுத்துரைத்தார். உலக உணவு அன்றன்று நம்மை வாழவைக்கும். ஆனால், அழியாத ஜீவனை நமக்கு கொடுக்கின்ற ஜீவ அப்பம் நமது ஆண்டவர். ஆக, அழிந்துபோகிற உலகில், அழிந்துபோகிறவற்றைத் தேடுகிறவர்களாயிராமல், அழியாத நித்திய ஜீவனைப் பெற்று என்றும் நிலைத்திருக்க, ஜீவ அப்பமாகிய ஜீவ வார்த்தையைத் தினமும் உட்கொண்டு, தியானித்து, அதன்படி நடக்க நம்மை ஒப்புவிப்போமாக.

…மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் (மத்தேயு 4:4).

ஜெபம்: அன்பின் தகப்பனே, எனது அன்றாடத் தேவைகளுக்காக மாத்திரம் உம்மைத் தேடுகிறவர்களாக இராமல், அழியாத நித்திய ஜீவனுக்காகவே கிரியை நடப்பிக்கிறவர்களாக காணப்பட எங்களுக்கு உதவிச்செய்யும். ஆமென்.

சத்தியவசனம்