ஜெபக்குறிப்பு: 2019 அக்டோபர் 3 வியாழன்

திரும்புங்கள் … உங்கள் சகல அருவருப்புகளையும் விட்டு உங்கள் முகங்களைத் திருப்புங்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் (எசேக்.14:6) மதுபானம் மற்றும் புகைபிடித்தல் இதுபோன்ற பழக்கங்களில் அடிமைப்பட்டுள்ள பங்காளர் குடும்பத்தின் மக்கள் முற்றிலுமாக அவற்றிலிருந்து விடுபட்டு கர்த்தருக்கு சாட்சியாய் வாழ வேண்டுதல் செய்வோம்.

மனுஷகுமாரன்

தியானம்: 2019 அக்டோபர் 3 வியாழன் | வேத வாசிப்பு: யோவான் 2:1-11

இவ்விதமாக இயேசு இந்த முதலாம் அற்புதத்தைக் கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே செய்து, தம்முடைய மகிமையை வெளிப்படுத்தினார் (யோவா. 2:11).

ஒரு விருந்துக்கு அழைப்புக்கிடைக்கும்போது, தங்கள் தகுதிக்கும் தராதரத்திற்கும் ஒவ்வாத இடம் என்றால், சிலர் அந்த அழைப்பை அலட்சியப்படுத்தி விடுவதுண்டு. ஆனால், அதை அன்புடன் ஏற்று, சமுகளித்து, மனமுவந்து உதவி செய்கிறவர்களும் பலர் இருக்கிறார்கள். அதனால் தாங்களும் அவர்களில் ஒருவர் என்பதையே அவர்கள் அடையாளப்படுத்துகிறார்கள்.

கானா ஊரில் நடந்த ஒரு கலியாண வைபவத்திற்கு இயேசுவுக்கும் அவருடைய தாயாருக்கும், சீஷருக்கும்கூட அழைப்புக் கொடுக்கப்பட்டிருந்தது. எவ்வித தயக்கமுமின்றி எல்லோரும் கலியாணத்திற்குச் சமுகமளித்திருந்தனர். இயேசு, தாம் தேவ குமாரனாயிருந்தாலும், ஒரு முழு மனிதனாகவே உலகில் வாழ்ந்திருந்தார். அவர் தம்மை மனிதரோடு மனிதனாக அடையாளப்படுத்தியதை எடுத்துக்காட்டும் சம்பவமாகவே யோவான் எழுதிய இந்தக் கானா ஊர் கலியாணம் அமைந்திருக்கிறது. இங்கே இயேசு செய்த முதலாவது அற்புதம் நிகழ்ந்தது. என்றாலும், இயேசு சமுதாயத்தில் தாமும் ஒரு சாதாரண மனிதனாக, மற்றவர்களோடு இணைந்து, அவர்கள் விருப்பங்கள், உணர்வுகள், தேவைகளை அறிந்து செயற்பட்டார் என்பதை நாம் கவனிக்கவேண்டும். அதாவது, அவர் தேவகுமாரனானாலும், “மனுஷ குமாரனாகவும்” ஜீவித்தார் என்பதையே யோவான் தெளிவுபடுத்துகிறார்.

இயேசு இன்று உலகில் வாழுகின்ற மனுஷன் அல்ல; அவர் உயிர்த்தெழுந்த ஆண்டவராக, பிதாவின் வலது பாரிசத்தில் நின்று நமக்காகப் பரிந்து மன்றாடுகின்றவராக (ரோமர் 8:34) இருக்கிறார். இன்றும் அவரே நமது வாஞ்சைகளை நிறைவு செய்கிறவர். நமது தேவைகளையும், உணர்வுகளையும் அறிந்து நம் வாழ்க்கையில் செயற்படுகிறவர் அவரே. இப்படிப்பட்ட ஆண்டவரை நமது தெய்வமாகக் கொண்டுள்ள நாம், இன்று அவர் நடந்த பாதையில் நடக்கிறோமா? அவரைப்போல சமுதாயத்தோடு இணைந்து, பிறரோடு நம்மை அடையாளப்படுத்தி, அவர்கள் தேவைகளில் உதவி செய்கிறோமா? அல்லது, சமுதாயத்தைவிட்டு நம்மை விலக்கி, நமது தகுதிக்கு ஏற்றவர்கள் என்று நாம் கருதுகிறவர்களோடு மாத்திரம் பழகுகிறோமா? பிறமனிதருக்கு பலன் கொடுக்கின்ற வாழ்வையே ஆண்டவர் நம்மில் எதிர்பார்க்கிறார். பூமிக்கு உப்பாக இருக்கும்படி அழைத்த ஆண்டவரின் அழைப்புக்கு இணங்குவோமாக.

நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள். உப்பானது சாரமற்றுப்போனால், எதினால் சாரமாக்கப்படும்? (மத். 5:13).

ஜெபம்: எங்கள் தேவைகளின்போது எங்களோடு இருக்கும் கர்த்தாவே, நாங்களும் உமது வழிகளில் நின்று பிறருடைய வாழ்வில் உப்பாய் பலன் கொடுக்கத்தக்கதாக அருள் செய்யும். ஆமென்.