Daily Archives: October 6, 2019

ஜெபக்குறிப்பு: 2019 அக்டோபர் 6 ஞாயிறு

இயேசு: நான் உன்னைக் கழுவாவிட்டால் என்னிடத்தில் உனக்குப் பங்கில்லை (யோவா.13:8) என்று திருவுளம் பற்றின ஆண்டவரின் சரீரத்தையும் இரத்தத்தையும் நினைவு கூரும் திருவிருந்து ஆராதனையில் பாவங்கள் கழுவப்பட்டு பயத்தோடு பங்குபெற தேவனுடைய அனுக்கிரகத்திற்காய் வேண்டுதல் செய்வோம்.

தெய்வீக வைத்தியர்

தியானம்: 2019 அக்டோபர் 6 ஞாயிறு | வேத வாசிப்பு: யோவான் 5:1-15

இயேசு அவனை நோக்கி: எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்றார் (யோவான் 5:8).

வியாதி கண்டால், குணமடைவதற்காகப் பல முயற்சிகளை எடுக்காமல் இருப்பவர் யார்? ஆனால், முயற்சிகள் எதுவும் பயன் அற்றதாகக் காணப்படுமானால், சரீர நோயின் வேதனை மட்டுமல்ல, உள்ளமும் சோர்ந்து, வாழ்க்கையில் நம்பிக்கை யற்ற ஒரு நிலைக்கும் தள்ளப்பட வாய்ப்பு உண்டு. இப்படிப்பட்ட ஒரு மனுஷனுடைய வாழ்வில்; நடந்த சம்பவத்தை யோவான் குறிப்பிட்டு எழுதியதினூடாக, இயேசு ஒரு தெய்வீக வைத்தியர் என்பதை வாசகர்களுக்கு உணர்த்துவதைக் காண்கிறோம்.

எருசலேமின் ஆட்டுவாசலருகே இருந்தது பெதஸ்தாகுளம். குணப்படுத்த கடினமான வியாதியுள்ளவர்கள் அந்தக் குளத்தினருகே இருந்த மண்டபத்தில் படுத்திருப்பார்கள். ஏனென்றால், ஒரு தேவதூதன் இக்குளத்தில் இறங்கி தண்ணீரைக் கலக்குவான்; கலக்கியதும், யார் முதலில் அதில் இறங்குவானோ, அவன் எப்படிப்பட்ட வியாதியஸ்தனாயிருந்தாலும் அவன் சுகமடைவான் என்று அன்று ஒரு நம்பிக்கை இருந்தது. யூதருடைய ஒரு பண்டிகை நாட்களில் இயேசு அங்கே போனார். 38 வருடங்களாக வியாதியாயிருந்த ஒரு மனிதனும் அக்குளத்தினருகே படுத்திருந்தான். அவனுக்குள் ஒரு பெரியகுறை. தேவதூதன் குளத்தைக் கலக்கும்போது, அவனால் எழுந்து குளத்திற்குள் இறங்க முடியாது; அவனுக்கு உதவி செய்யவும் யாரும் இருக்கவில்லை. இவனைத்தான் இயேசு கண்டார்; அவனைக் குணமாக்கினார். 38 வருடங்கள் அவனைக் கட்டியிருந்த நோயும் நீங்கியது; பாவம் செய்யாதே என்ற இயேசுவின் அன்பின் வார்த்தையும் கிடைத்தது. யூதர்கள் ஓய்வு நாளை முக்கியத்துவப்படுத்தினார்கள்; இயேசுவோ மனிதனுடைய விடுதலையை முக்கியப்படுத்தினார். இதனூடாக இயேசு ஒரு ‘தெய்வீக வைத்தியர்’ என்பதை யோவான் காண்பித்திருக்கிறார்.

நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் (யாத்.15:26) என்றும், அவருடைய தழும்புகளால் குணமாகிறோம் (ஏசா.53:5) என்றும் கூறப்பட்டபடியே இயேசுவானவர் தம்மைக் காண்பித்தார். ஆனால், சரீர சுகம் மாத்திரமல்ல, அதிக கேடானதொன்றும் உனக்குவராதபடி இனிப்பாவஞ் செய்யாதே என்று சொல்லி, அவனுடைய ஆத்துமாவுக்கும் விடுதலை கொடுத்தார் இயேசு. அங்கே தான் அவனுக்குப் பூரணசுகம் கிடைத்தது. என்ன சுகவீனமோ, என்ன மனவேதனையோ இயேசுவிடம் போவோம். அவரிடம் பூரணசுகம் உண்டு.

வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் ( மத். 11:28).

ஜெபம்: ஆண்டவரே, எங்களுக்கு நேரிடும் பாடுகளும் வியாதியின் வேதனைகளும் நம்பிக்கையற்ற சூழ்நிலையை ஏற்படுத்துமென்றாலும் எங்கள் சரீரத்தையும் இருதயத்தையும் குணப்படுத்தும் பரம மருத்துவராகிய உம்மையே நம்புவோம். ஆமென்.

சத்தியவசனம்