Daily Archives: October 2, 2019

ஜெபக்குறிப்பு: 2019 அக்டோபர் 2 புதன்

அவர் வருகிறார், அவர் பூமியை நியாயத்தீர்க்க வருகிறார் (சங்.96:13) நியாயாதிபதியாக வரப் போகும் இராஜாதிராஜாவுக்கு முன்பாக நிற்க பாத்திரவான்களாக எண்ணப்படும்படி எப்பொழுதும் ஜெபம் பண்ணி, ஆயத்தமுள்ளவர்களாயும் விழித்திருக்கிறவர்களாகவும் காணப்பட நம்மை அர்ப்பணித்து ஜெபிப்போம்.

தேவகுமாரன்

தியானம்: 2019 அக்டோபர் 2 புதன் | வேத வாசிப்பு: யோவான் 1:1-14

ஆதியிலே வார்த்தை இருந்தது, …அந்த வார்த்தை தேவனாயிருந்தது, …அந்த வார்த்தை மாம்சமாகி …நமக்குள்ளே வாசம் பண்ணினார் (யோவா.1:1,14).

தங்களுக்கு மிகவும் நெருக்கமானவர்களைக் குறித்த உண்மையான விபரங்களை யாரும் வெளிப்படையாகச் சொல்லத் தயங்குவதில்லை. இங்கே இயேசுவுக்கு மிக அன்பானவனும், மிக நெருக்கமானவனுமாகிய யோவான், இயேசுகிறிஸ்துவின் மகிமையை வெளிப்படுத்தும்படிக்குத் தன் சுவிசேஷத்தை மிக ஆழமாகவும், மற்ற சுவிசேஷங்களிலிருந்து சற்று வேறுபட்டதாகவும் எழுதியுள்ளார். மற்ற மூவரும் இயேசுவின் வாழ்க்கை வரலாறு பற்றி எழுதியிருக்க, யோவானோ, இயேசு தேவனுடைய குமாரன் என்பதை எடுத்துக்காட்டுவதில் மிக்க கவனம் செலுத்தியுள்ளார். அவரின் ஆள்தத்துவம், தெய்வத்துவம் என்று பல விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்.

இயேசு, தேவனுடைய குமாரன் என்பதற்கு ஆதாரமாக, படைப்பிலே இயேசு கிறிஸ்து, “வார்த்தையாக” தேவனோடு இணைந்திருந்ததை (ஆதி.1:1) ஆரம்பத்திலேயே யோவான் எழுதியுள்ளார். ஒன்று, இது, தீர்க்கதரிசனங்களின் வெளிப்பாடாக அமைந்திருக்கிறது. அடுத்தது, அத்தீர்க்கதரிசனங்களின் நிறைவேறுதலை, தான் இயேசுவோடு வாழ்ந்த வாழ்க்கை அனுபவங்களைக்கொண்ட சாட்சிகளுக்கூடாக யோவான் எழுதியுள்ளார். இந்தச் சாட்சிகளின் அடிப்படையில்தான், “அந்த வார்த்தை, (அதாவது, ஆதியிலே தேவனோடிருந்து, தேவனோடு இணைந்து உலகத்தையும் அதிலுள்ள யாவையும் சிருஷ்டித்த அந்த வார்த்தை) மாம்சமாகி, கிருபையினாலும், சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம் பண்ணினார். அவருடைய மகிமையைக் கண்டோம். அது, பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது” (யோவா.1:14) என்கிறார்.

இயேசு, ஒரு சாதாரண மனிதர் அல்ல; அவர் தேவனுடைய குமாரன் என்பதையும், அவரே தேவன் என்பதையும் உலகத்தின் கடைசி மனிதனும் அறியவேண்டும் என்று யோவான் இந்த சுவிசேஷத்தில் அதிக கவனம் செலுத்தியுள்ளதை நாம் கவனிக்கவேண்டும். “அவருடைய மகிமையைக் கண்டோம். அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது” என்று எழுதியதில், கிறிஸ்துவின் தேவத்துவத்தை யோவான் எடுத்து இயம்பியுள்ளார். இந்த இயேசுவுக்கு இன்று நாமே சாட்சிகள்! சுவிசேஷத்தை அறிவிப்பதிலும், சாட்சியுள்ள வாழ்விலும் கிறிஸ்துவை வெளிப்படுத்தவே நாம் அழைக்கப்பட்டுள்ளோம் என்பதை நினைத்து எச்சரிப்புடன் வாழுவோமாக!

…நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள் (மாற்கு 16:15).

ஜெபம்: நல்ல ஆண்டவரே, நாங்கள் உமது சாட்சிகள் என்பதை மற்றவர்களுக்கு விளங்கப்பண்ண உமதன்பால் எங்களை நிரப்பும். ஆமென்.

சத்தியவசனம்