ஜெபக்குறிப்பு: 2019 அக்டோபர் 23 புதன்

எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும் அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார் (1தீமோ.2:4) சத்தியவசன ஊழியத்திலே சத்தியத்தைப் போதிக்கும் ஊழியத்தில் தேவன் பயன்படுத்திவரும் செய்தியாளர்களுக்கு வேண்டிய நல்ல ஆரோக்கியம் சுக வாழ்வு யாவற்றிற்காகவும் ஜெபிப்போம்.

இருக்கிறவராக இருப்பவர்

தியானம்: 2019 அக்டோபர் 23 புதன் | வேத வாசிப்பு: யாத்திராகமம் 3:1-15

…இருக்கிறவராக இருக்கிறேன் என்று மோசேயுடனே சொல்லி, இருக்கிறேன் என்பவர் என்னை உங்களிடத்திற்கு அனுப்பினார் என்று …சொல்வாயாக என்றார் (யாத்.3:14).

நாற்பது ஆண்டுகள் ஓடிக் கழிந்ததும் தெரியாது மாமனின் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த மோசேயை, எரிந்தும் கருகாத முட்செடியின் நடுவில் நின்ற கர்த்தருடைய தூதனானவர்,”மோசே, என் ஜனத்தை எகிப்திலிருந்து மீட்டு, கானானுக்குக் கொண்டுசேர்க்கும்படிக்கு, அவர்களை எகிப்திலிருந்து அழைத்து வரும்படி உன்னைப் பார்வோனிடம் அனுப்புவேன்” என அழைப்பு விடுத்தார். பெரியதொரு மீட்புப்பணிக்கான அழைப்பு மோசேக்கு வந்தது. ஆனால் மோசேயோ தயங்கினான்; மறுப்புக் காட்டினான். ஏன்? எகிப்தின் கடந்தகால கசப்பான அனுபவமா? தன் ஜனத்தார் தன்னை ஏற்றுக்கொள்வார்களா என்ற பயமா? எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த தேவன் யார் என்ற கேள்வி அவனுக்குள் தொங்கி நின்றது. அந்தக் கேள்வியை வெளிப்படுத்திய மோசேக்குத் தேவன் கொடுத்த பதில்: “இருக்கிறவராக இருக்கிறேன்” என்றார். மாத்திரமல்ல, ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்ற அவர்களுடைய பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் என்பதே என்றென்றைக்கும் தம்முடைய பெயர் பிரஸ்தாபம் என்று மோசேயுடன் கூறினார்.

“இருக்கிறவராக இருக்கிறேன்” என்று மோசேக்குத் தம்மை வெளிப்படுத்தியவரே இந்த உலகையும் அதிலுள்ள யாவையும், சிருஷ்டித்தவர்; உலகுக்குத் தம்மை வெளிப்படுத்தும்படி ஒரு ஜனத்தைத் தெரிந்துகொண்டவர். ஆனால், அவருடைய ஜனமோ தம்மைத் தெரிந்துகொண்ட தேவனைவிட்டுத் தூரம் போனார்கள். அப்போதும், அவர் அவர்களைக் கைவிடவில்லை. என்றும் மாறாத நித்திய மீட்பை அருளும்படி தாமே மனிதனாக வந்தவரும் இவரே. நமது பாவங்களுக்காக மரித்து உயிர்த்தவரும் இவரே. இருக்கிறவராக இருந்து, இனியும் வரப்போகிறவரும் இவரே.

இந்த தேவனே நமது தேவனும். நம் தேவன் யார் என்பதை உண்மையாகவே நாம் அறிந்து, அவரை நமது வாழ்வில் ஏற்றுக்கொண்டிருந்தால், அன்று அவரைத் தெரியாமல் மீட்புப் பணிக்குத் தயக்கம் காட்டிய மோசேயைப் போல நாம் இருக்கமாட்டோம். தம்முடைய ஜனத்துக்கு மீட்பின் செய்தியை எடுத்துச்செல்ல அன்று மோசேயை அழைத்தவர், இன்று அந்த மீட்பைத் தாமே நிறைவேற்றிவிட்டு நம்மை அழைக்கிறார். அவர் இனி ராஜாவாக வரும்போது, நாம் அவருக்கு எதைச்செலுத்தி வணங்குவோம்? சிந்திப்போம்.

இந்த தேவன் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நம்முடைய தேவன்; மரணபரியந்தம் நம்மை நடத்துவார் (சங். 48:14).

ஜெபம்: சர்வவல்லமையுள்ள கர்த்தாவே, சீக்கிரமாக வரப்போகிற உம்முடைய வருகைக்கு நாங்கள் ஆயத்தப்படவும், மற்றவர்களை ஆயத்தப்படுத்துவதற்கும் எங்களுக்கு உதவி செய்யும். ஆமென்.