ஜெபக்குறிப்பு: 2019 அக்டோபர் 14 திங்கள்

சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் போதித்து புத்தி சொல்லிக்கொண்டு (கொலோ.3:16) சத்தியவசன பாடல் செய்தி சிடிக்கள், டிவிடிக்கள் அநேகருடைய வாழ்க்கையை கிறிஸ்துவுக்குள் பெலனடையச் செய்கிறதாய் இருக்கிறபடியால் கர்த்தரைத் துதிப்போம். இவ்வூழியத்தின் தேவைகளை கர்த்தர் சந்திக்க ஜெபிப்போம்.

மேய்ப்பனின் சத்தம்

தியானம்: 2019 அக்டோபர் 14 திங்கள் | வேத வாசிப்பு: யோவான் 10:14-29

என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின் செல்லுகிறது (யோவா.10:27).

இஸ்ரவேல் தேசத்தின் மேய்ப்பர்கள் குறித்தும், அவர்களுடைய மந்தையைக் குறித்தும் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்று பார்க்க நேர்ந்தது. ஒரு மலைப் பிரதேசத்திலிருந்து பள்ளத்தாக்கை நோக்கி சில மேய்ப்பர்கள் ஏராளமான ஆடுகளை நடத்திச் சென்றனர். ஒரு கட்டத்தில், ஒவ்வொரு மேய்ப்பனும் வேறுபட்ட பாஷைகளில் உரத்த சத்தமாய் ஏதேதோ கூறினர். உடனே, அந்த ஆடுகள் தங்கள் தங்கள் மேய்ப்பர்களை நோக்கிப் பிரிந்துசென்றன. இது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. சாதாரண ஆடுகளே தங்கள் தங்கள் மேய்ப்பரின் சத்தத்தை அறியக்கூடுமானால், நமது மேய்ப்பரின் குரலை, இந்த உலகத்தின் சத்தத்திலிருந்து வேறுபடுத்தி அறிந்துகொள்ள நமக்கு முடியுமா?

இஸ்ரவேலின் தலைவரும் இப்படியே ஜனங்களை நடத்தினர். இஸ்ரவேலரைத் தேவன் எகிப்திலிருந்து விடுவித்தபோது மோசே, ஆரோன் என்பவர்கள் அவர்களை ஒரு மந்தையைப்போல வழிநடத்தினார்கள் (சங்.77:20) என்று கூறப்பட்டுள்ளது. பின்பு, ராஜாக்கள், இஸ்ரவேலின் மேய்ப்பர்களாக அவர்களை வழிநடத்த ஏற்படுத்தப்பட்டனர். அவர்களில் அநேகர் உண்மையாகவே தமது மந்தையின்மேல் அக்கறையுள்ளவர்களாய், உண்மையோடும் உத்தமத்தோடும் மேய்க்காமல், தங்களை தாங்களே மேய்க்கும் மேய்ப்பர்களானார்கள். அந்நாட்களில் கர்த்தர் அவர்களை எச்சரித்து, “என் ஆடுகளை நான் மேய்த்து, அவைகளை நான் மடக்குவேன்” (எசேக். 34:1-15) என்றார். அப்படியே, தம் மந்தையில் நல்ல மேய்ப்பனாக இயேசு இவ்வுலகிற்கு வந்தார். என்றாலும், ஆதிமுதல் தங்கள் மேய்ப்பரின் சத்தத்திற்குச் செவிகொடுக்காமற்போய் பல இன்னல்களைச் சந்தித்த ஜனம், இப்பொழுதும் நல்ல மேய்ப்பனாம் இயேசுவின் சத்தத்தை அறிந்திருக்கவில்லை.

“கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்” என்று தாவீது அனுபவ ரீதியாகப் பாடி வைத்த சங்கீதத்தை மனப்பாடமாக ஒப்புவிக்கத் தெரிந்த நாம் இன்று, நமக்காக ஜீவனையே கொடுத்த நமது பெரிய மேய்ப்பனாகிய இயேசுவின் சத்தத்தை இந்த உலக சத்தத்திலிருந்து வேறுபடுத்திப் பார்க்கப் பழகியிருக்கிறோமா? இன்று நம்மைச் சூழ்ந்து பல இரைச்சல்கள்! பல கூப்பாடுகள்! அவற்றினிடையே தான் ஆண்டவரின் சத்தத்தை நாம் இனங்காணவேண்டும். அதற்கு தினமும் அவர் பாதம் அமர்ந்து, எப்பக்கமும் நாம் சாயாமல் நடக்கும்படி அவர் நம்மை நடத்தும் சத்தத்திற்கு நம்மைப் பழக்குவிப்பதே ஒரே வழியாகும்.

நீங்கள் வலது புறமாய்ச் சாயும்போதும், இடதுபுறமாய்ச் சாயும்போதும்: வழி இதுவே, இதிலே நடவுங்கள் என்று உங்களுக்குப் பின்னாலே சொல்லும் வார்த்தையை உங்கள் காதுகள் கேட்கும் (ஏசா. 30:21).

ஜெபம்: ஆண்டவரே, உலகத்தின் சத்தங்களும் இரைச்சல்களும் எங்களை சூழ்ந்திருந்தாலும் உம்முடைய மெல்லிய சத்தத்தைக் கேட்கும் செவிகளைத் தாரும். ஆமென்.