ஜெபக்குறிப்பு: 2019 அக்டோபர் 5 சனி
அவர் ஆலோசனையில் ஆச்சரியமானவர், செயலில் மகத்துவமானவர் (ஏசா.28:29) மகத்துவமுள்ள தேவன்தாமே நிரந்தர வேலைகளுக்கும், வேலையில் உயர்வு, இட மாறுதல் இவைகளுக்கு காத்திருக்கும் பங்காளர் குடும்பங்களில் உள்ள ஒவ்வொருவருக்கும் பெரிய காரியங்களைச் செய்தருள மன்றாடுவோம்.
மேசியா
தியானம்: 2019 அக்டோபர் 5 சனி | வேத வாசிப்பு: யோவான் 4:7-43
அந்த ஸ்திரீ அவரை நோக்கி: கிறிஸ்து என்னப்படுகிற மேசியா வருகிறார் என்று அறிவேன்.., என்றாள். அதற்கு இயேசு உன்னுடனே பேசுகிற நானே அவர் என்றார் (யோவான் 4:25,26).
எந்தவொரு எதிர்பார்ப்பும் ஒரு முன்னறிவித்தலைக் கொண்டிருக்கும். முன்னறிவிக்கப்பட்டது நிறைவேறும் என்று காத்திருப்பதில் ஒரு தவறும் இல்லை. ஆனால், அதைக் குறித்துத் தமக்கென்று ஒரு கற்பனை செய்து காத்திருப்பது ஏமாற்றத்தையே தரும். யூதருக்கு ஒரு மேசியா அதாவது அபிஷேகம் பண்ணப்பட்டவர் வருவார் என்று தீர்க்கரால் உரைக்கப்பட்டவரை அவர்களும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அவர்கள் அவரை ஒரு மதத் தலைவராக, உலக ராஜாவாக, ரோமரிடமிருந்து தம்மை மீட்கும் ஒருவராகவே எதிர்பார்த்தார்கள். வந்தவரோ தேவராஜ்யத்தை ஸ்தாபிப்பவராக, ஆத்தும விடுதலையாளராகவே வந்தார்.
இங்கே தன் சரீர தாகத்தைத் தீர்ப்பதற்காக தண்ணீரை நாடின ஒரு சமாரியப் பெண்ணிடம், சமாரியரை ஒதுக்கிய யூதரைச் சேர்ந்த இயேசு, தன் சரீர தாகத்தை வெளிப்படுத்தி, பேச்சை ஆரம்பிக்கிறார். அவளது மீட்புக்காகவே இயேசு அங்கே வந்தார் என்பதை நாம் மறுக்கமுடியாது. அவளுக்கு விடுதலை வேண்டுமென்றால் அவள் தன்னை உணரவேண்டும். இயேசு. அவளை நோகடிக்காமல், மெதுவாகவே அவளை அவளுக்கு உணர்த்துகிறார். அவள் ஆச்சரியப்பட்டு, “ஆண்டவரே, நீர் தீர்க்கதரிசி என்று காண்கிறேன்” என்றாள். அவள் பேச்சை வேறு திசையில் திருப்பியபோதும், இயேசு, அவளுக்கான திசையை மாற்றவில்லை. அவள் போக்கிலேயே போனார் ஆண்டவர். இறுதியில் ‘கிறிஸ்து எனப்படுகின்ற மேசியா வருகிறார்’ என்று அவளே கூறும்படி ஆயிற்று. அப்போது இயேசு, “உன்னுடன் பேசுகிற நானே அவர்” என்று தம்மை வெளிப்படுத்தினார். உடனே, அவள் கிணற்று நீரை மறந்து, ஊருக்குள் ஓடி, “இவர் கிறிஸ்து” என்ற அறிவிக்கத் தொடங்கினாள். ஆம், அவள் அவரை வெறும் உலக ராஜாவாக அல்ல; தன் ஆத்தும தாகத்தைத் தீர்க்கின்ற ராஜாவாக, தன் வாழ்வுக்கு விடுதலை தந்த மேசியாவாக இயேசுவைக் கண்டாள்.
உலக ஆசிகளுக்காக இன்று இயேசுவை நாடுகின்றவர்கள் ஏராளம். உலக ஆசிகள் நமக்கு ஆத்தும விடுதலையைத் தராது. சமய ரீதியான உலக ரீதியான விடுதலையை எதிர்பார்த்த யூதரால், முன்னறிவிக்கப்பட்ட மேசியாவே, ‘இயேசு’ என்ற உண்மையை ஏற்கமுடியவில்லை. ஏனெனில் அவர் உலகப்புரட்சியல்ல, ஆத்தும புரட்சி செய்கிறவராகவே வந்தார். அறிஞர்களால் புரிந்திட முடியாததை இந்தப் பெண் புரிந்துகொண்டாள். அவரை ஆத்தும மீட்பராகக் கண்டாள்; பிழைத்துக்கொண்டாள். இன்று நாம் இயேசுவை யாராகக் காண்கிறோம்?
மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக் கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? (மத். 16:26).
ஜெபம்: எங்கள் ஆத்தும நேசரே, நீர் எங்களை மீட்க வந்த மேசியா என்பதை கண்டுகொள்ளும் பாக்கியத்தைத் தந்தீரே, உமக்கு ஸ்தோத்திரம். ஆமென்.