Daily Archives: October 9, 2019

ஜெபக்குறிப்பு: 2019 அக்டோபர் 9 புதன்

வெகுவாய் மன்னிக்கிறவரும், இரக்கமும் மனஉருக்கமும், நீடிய சாந்தமும், மகா கிருபையுமுள்ளவருமான தேவனாகிய கர்த்தர் (நெகேமி.9:17) தாமே இந்தநாளின் சத்தியவசன அலுவலக ஜெபக் கூட்டத்தை ஆசீர்வதித்திடவும், ஏறெடுக்கப்படும் விண்ணப்பங்களுக்கு உருக்கமாய் இரங்கவும், ஜெபக்கூட்டத்திற்கு வருகைதரும் பங்காளர்கள் ஆசீர்வதிக்கப்படுவதற்கும் வேண்டுதல் செய்வோம்.

பெலவீனனின் பாதுகாவலர்

தியானம்: 2019 அக்டோபர் 9 புதன் | வேத வாசிப்பு: யோவான் 8:1-11

…அவர் நிமிர்ந்து பார்த்து: உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவது கல்லெறியக்கடவன்.. (யோ. 8:7).

பிறரைக் குற்றவாளி என்று கண்டு தண்டிப்பதும், தாங்கள் செய்கின்ற குற்றங்களை யாரும் காணவில்லை என்று கண்டு தண்டனைக்குத் தப்பித்துக்கொள்வதும் மிக சாதாரண விஷயங்கள்தான். அதேசமயம், குற்றம் செய்தவனும், செய்யாதவனும்கூட குற்றஞ்சாட்டப்பட்டு நிறுத்தப்படும்போது, அவர்களில் அனுதாபம் கொள்ளவோ, காப்பாற்றவோ யாருமில்லாததால் தவித்து நிற்கும் நிலையும்கூட இன்று சாதாரண விஷயங்கள்தான்.

அன்று விபசாரத்தில் பிடிபட்ட பெண்ணை, அவள் செய்தது குற்றம் என்று சொல்லி, அவளைத் தண்டிக்கவேண்டுமென்று பரிசேயரும், வேதபாரகரும் அவளை இயேசுவிடம் கொண்டுவரவில்லை. அவள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் என்னவோ உண்மைதான்; ஆனால், இவர்களோ இயேசுவில் குற்றம்பிடிக்கும் மன எண்ணத்திலேதான் அவளைக் கொண்டுவந்தனர். இது அவளுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் அவர்களோ, அவளைக் காப்பாற்ற யாருமில்லாத நிலையில், அவளுடைய பெலவீனத்தைப் பயன்படுத்தி, தங்கள் காரியத்தைச் சாதிப்பதிலேயே குறியாயிருந்தனர். அந்த மனநோக்கைப் புரிந்து கொண்ட இயேசு, அவளை அல்ல, அவளைக்கொண்டு வந்தவர்களின் நோக்கத்தைக்கொண்டே, அவர்களை அவர்களுக்குப் புரியவைக்கும்படிக்கு, “உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவது கல்லெறியக் கடவன்” என்றார். அனைவரும் எடுத்த கல்லையும் போட்டுவிட்டுப் போய்விட்டனர். அதற்காக இயேசு அவளையும் போ என்று விட்டுவிடாமல், “இனிமேல் பாவம் செய்யாதே” என்று கூறி, ஒரு புது வாழ்வைப் புரியவைத்தே அனுப்பினார்.

அந்தப் பெண் இயேசுவை, “ஆண்டவரே” என்று அழைத்தாள். ஆம், இயேசு, “பெலவீனரின் பாதுகாவலன்” என்பதை அவள் உணர்ந்தாள். இயேசுவின் இந்தக் குணாதிசயத்தை யோவான் அழகாக எடுத்துக் காண்பித்திருக்கிறார். அதற்காக இயேசு அவள் செய்த பாவத்தை ஒத்துக்கொள்ளவில்லை. பாவம் பாவம்தான். ஆனால், அவளுக்கு அவர் விடுதலையைக் கொடுத்தார். பாவம் பெலவீனமல்ல. ஆனால், பெலவீனம் ஒருவனை பாவத்திற்குள் வழிநடத்தும். நமது பெலவீனத்தைப் பிறர் தமக்குச் சாதகமாகவும் பயன்படுத்தவும் கூடும். ஆனால், எந்த நிலையிலும் இயேசுவிடம் வருகின்ற ஒருவனை அவர் புறம்பே தள்ளவேமாட்டார். இந்த நல்ல செய்தியைப் பிறருக்கும் சொல்வோமா!

பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமானது (1தீமோ. 1:15).

ஜெபம்: எங்களை புறம்பே தள்ளாத ஆண்டவரே, பெலவீனனாயிருந்தாலும், பிறரால் தவறாகப் பயன்படுத்தப்பட்டாலும், நீர் எங்களுக்கு இருக்கிறீர் என்ற ஆறுதலின் செய்திக்காக உம்மைத் துதிக்கிறோம். ஆமென்.

சத்தியவசனம்