ஜெபக்குறிப்பு: 2019 அக்டோபர் 8 செவ்வாய்

அவர் வேதத்தை முக்கியப்படுத்தி அதை மகிமையுள்ளதாக்குவார் (ஏசா.42:21) மொழியறியாத மக்கள் மத்தியில் நடைபெறும் வட மாநிலங்களின் ஊழியங்களுக்காகவும் அவர்கள் மொழிகளிலே வேதாகமத்தை மொழிபெயர்க்கும் பணியில் உள்ள அனைத்து ஊழியர்களுக்காகவும், அவர்களது முயற்சிகளை கர்த்தர் வாய்க்கப்பண்ணவும் மன்றாடுவோம்.

ஜீவ தண்ணீர்

தியானம்: 2019 அக்டோபர் 8 செவ்வாய் | வேத வாசிப்பு: யோவான் 7:37-39

வேதவாக்கியம் சொல்லுகிறபடி, என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார் (யோவா.7:38).

ஒரு மனிதன் உயிர் வாழ்வதற்கு உணவு எத்தனை முக்கியமோ, தண்ணீரும் அவ்வளவு முக்கியம். மனித சரீரத்தில் ஏறத்தாழ 60 சதவீதம் தண்ணீரே உள்ளது என்று கூறப்படுகிறது. இதன் அளவு சரீரத்தில் குறைவுபடும்போதுதான் தாகம் ஏற்படுகிறது. இத்தாகம் தீர்க்கப்படாத நிலை தொடருமானால், ஒருகட்டத்தில் மரணம் கூட நேரிட வாய்ப்புண்டு. இப்படியிருக்க, ஆத்தும தாகம் தீர்க்கப்படாவிட்டால், நித்திய வாழ்வு என்னவாகும்!

தாகமாயிருக்கிறவன் என்னிடத்தில் வந்து பானம் பண்ணக்கடவன் என்று இயேசு சத்தமிட்டு அழைத்தார் என்று யோவான் எழுதியுள்ளார். ஜீவ தண்ணீர் என்பது நித்திய வாழ்வைக் குறிக்கிறது. இந்த நித்திய வாழ்வுக்கான நமது பயணம், இயேசுவை நமது இரட்சகராக ஏற்றுக்கொண்டதும் இவ்வுலக வாழ்விலேயே ஆரம்பிக்கிறது. இதனைக் கொண்டு நடத்துகிறவர் பரிசுத்த ஆவியானவர். ஆகவே, இந்த நித்திய வாழ்வுக்கான தாகம் உள்ளவன் தம்மண்டை வரக்கடவன் என்று இயேசு அறைகூவல் விடுத்தார். தம்மிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் உள்ளத்திலிருந்து அந்த வற்றாத மாறாத ஜீவத்தண்ணீர் பாய்ந்தோடும் என்று வாக்களித்தார் இயேசு. அதாவது, தம்மை விசுவாசிக்கிறவர்கள் அடையப்போகின்ற ஆவியைக் குறித்து, பரிசுத்த ஆவியானவரின் நிறைவைக் குறித்து இயேசு இப்படிச் சொன்னார். பரிசுத்த ஆவியானவர் ஒருவனுக்குள் வரும்போது, அடக்கமுடியாதபடி, அவனுக் குள்ளிருந்து ஜீவத்தண்ணீர் பிறருக்கும் பயனுண்டாகும்படிக்கு, “ஊற்றுத் தண்ணீராக” ஊற்றெடுத்துப்பாயும் என்றார் இயேசு. ஆனால், அது நடக்கவேண்டுமென்றால், அதைக்கொடுக்கிற (யோவான்4:14) இயேசுவண்டை நாம் வர வேண்டும்.

நமக்குள் பரிசுத்தாவியானவர் வாசம் பண்ணுகிறார் என்று விசுவாச அறிக்கை செய்கின்ற நமது இருதயத்திலிருந்து ஊற்றெடுத்துப் பாய்கின்ற தண்ணீர் எப்படிப்பட்டது? மெய்யாகவே பரிசுத்தாவியானவர் அருளும் ஜீவத் தண்ணீரின் ஊற்றா? அல்லது, ஆண்டவரைவிட்டே பிறரைத் துரத்திவிடும் கசப்பான ஊற்றா? ஏன் நமக்குள் கசப்பு ஊற்றெடுக்கவேண்டும்? நாம் கிறிஸ்துவாகிய ஜீவத்தண்ணீர் ஊற்றுக்குத் தடை விதித்தால், அவருடனான உறவைத் துண்டித்தால் இது நிகழும். ஆகையால் தினமும் ஆண்டவர் பாதம் அமர்ந்து, அந்த ஜீவ ஊற்றில் மூழ்கி எழுவோமானால் அநேகருடைய தாகம் தீர்க்கும் ஊற்றாக தேவன் நம்மையும் நடத்துவார்.

ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம் பண்ணக்கடவன் (யோ. 7:37).

ஜெபம்: ஆண்டவரே, அநேகரை கிறிஸ்துவண்டை வழிநடத்துவதற்கு பரிசுத்த ஆவியாகிய ஜீவத்தண்ணீருள்ள ஊற்று என் உள்ளத்திலிருந்து புறப்பட்டு தாகமுள்ள ஆத்துமாக்களுக்கு பயனுள்ளதாக இருக்க எங்களை அர்ப்பணிக்கிறோம். ஆமென்.