ஜெபக்குறிப்பு: 2020 ஜுன் 14 ஞாயிறு

பரிசுத்தத்தில் மகத்துவமுள்ளவரும், துதிகளில் பயப்படத்தக்கவரும், அற்புதங்களைச் செய்கிறவருமாகிய உமக்கு ஒப்பானவர் யார்? (யாத்.15:11) என்ற வாக்குப்படி இந்த நாளில் அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் பரிசுத்த அலங்காரத்துடனும் ஆவியோடும் உண்மையோடும் தொழுது கொள்ளத்தக்கதாக, பரிசுத்தமுள்ள தேவனிடம் மன்றாடுவோம்.

விதைத்ததையே அறுப்போம்!

தியானம்: 2020 ஜுன் 14 ஞாயிறு | வேத வாசிப்பு: வெளிப்படுத்தல் கலா.6:1-10

மோசம்போகாதிருங்கள். தேவன் தம்மைப் பரியாசம் பண்ணவொட்டார், மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். கலா.6:7

ஒருவன் பாவத்தில் விழுந்துவிட்டால், அதைக் குத்திக்காட்டியே அவனை மீண்டும் எழும்ப முடியாதபடிக்கு பள்ளத்தில் தள்ளிவிடும் ஒரு சமுதாயத்தின் மத்தியில்தான் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஆனால் இங்கே பவுல், “ஒருவன் யாதொரு குற்றத்தில் அகப்பட்டால், ஆவிக்குரியவர்களாகிய நீங்கள் சாந்தமுள்ள ஆவியோடு அப்படிப்பட்டவர்களைச் சீர்பொருந்தப் பண்ணுங்கள்” என கலாத்தியருக்கும் இன்று நமக்கும் சுட்டிக்காட்டுகிறார். குற்றத்தில் விழுந்தவனை அப்படியே அழிந்துபோக நாம் விட்டுவிட முடியாது, காரணம், அவனையும் தேவன் நேசிக்கிறார். அவனை மீண்டும் மனந்திரும்பி வாழும் ஒரு வாழ்வுக்குள் வழிநடத்துவது அவசியம். அதேவேளை அவனை வழிநடத்துபவர்களும் சோதனைக்குள் விழுந்துவிடாதபடி எச்சரிக்கையாய் இருக்கவேண்டும் என்பதே பவுல் கூறும் ஆலோசனை.

மேலும், மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான் என்பதையும் பவுல் இங்கே நினைவுபடுத்துகிறார். இது நாம் உணர்ந்துகொள்ள வேண்டிய சத்தியமாகும். நாம் எப்படியும் வாழ்ந்துவிட்டு போகலாம் என்று நினைக்க முடியாது. நாம் இப்படித்தான் வாழவேண்டும் என்று வேதாகமம் எமக்குப் போதிக்கிறது. அதை நாம் கடைப்பிடித்து வாழவே அழைக்கப்பட்டுள்ளோம். நாம் தேவனுடைய பிள்ளைகளாய் அவருக்குச் சாட்சிகளாய் வாழவேண்டியவர்கள். அப்படியாயின் அவருடைய சத்திய வார்த்தைகளும் நம்மில் வாழவேண்டுமல்லவா? நாம் நம்மைச் சரிப்படுத்தி அவர் பாதையில் நேர்த்தியாய் நடக்க வேண்டும். அதேவேளை தப்பிதத்தில் விழுந்தவனைப் பார்த்து, “நீ எதை விதைத்தாயோ அதை இப்போது அறுத்துக்கொண்டிருக்கிறாய்” என்று சொல்லி அவனை வேதனைப்படுத்தவும் கூடாது. அவனும் மீண்டும் மனந்திரும்பி தேவனுடைய பாதைக்குள் வரவேண்டுமென்பதே நமது நோக்கமாய் இருக்கவேண்டும். எனவே, விழுந்தவனை மீண்டும் தூக்கி நிறுத்தும் பொறுப்பு நம்முடையதே.

பிரியமானவர்களே, இன்று நம்முடைய நிலை என்ன என்பதை உணர்ந்திருக்கிறோமா? நாமும் முன்னர் விழுந்துகிடந்தவர்கள்தான், தேவன் நம்மைத் தூக்கியெடுத்தாரல்லவா என்ற நினைவு நமக்கு அவசியம். அப்போது விழுந்தவனைத் தூக்கி நிறுத்த நாம் தயங்கமாட்டோம். நாம் முதலில் கிறிஸ்துவுக்குள் நிலையாய் நிற்போமாக. எனவே தினமும் தேவசமுகத்தில் இருந்து நம்மை நாமே ஆராய்ந்து பார்ப்போம். தேவ ஆவியானவர் நம்மை ஆராய்ந்து பார்த்துத் திருத்த நாம் அவரிடம் முற்றிலுமாய் நம்மைக் கொடுத்துவிடுவோமாக.

இப்படியிருக்க, தன்னை நிற்கிறவனென்று, எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன் (1கொரி.10:12).

ஜெபம்: என்னைக் கரம் பிடித்து தூக்கிவிடும் தேவனே, என் வாழ்வில் ஏற்பட்ட விழுகையின்போது என்னைத் தூக்கி நிறுத்திய சந்தர்ப்பங்களை எண்ணி உம்மைத் துதிக்கிறேன். ஆமென்.