ஜெபக்குறிப்பு: 2020 ஜுன் 26 வெள்ளி

அவர்களுக்கு நன்மையுண்டாக நான் என் கண்களை அவர்கள்மேல் வைத்து, … அவர்களைக் கட்டுவேன் (எரே:24:6) கொரனா வைரஸ் பாதிப்பினால் நம் தேசத்தில் நிலவியுள்ள பொருளாதார சரிவு, நிதிநிலை பற்றாகுறை, பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வாழ்வாதாரங்கள் யாவற்றையும் கர்த்தர் தாமே சரி செய்யவும் மேலும் இந்த வாதையிலிருந்து மக்களைப் பாதுகாக்கவும் மன்றாடுவோம்.

சாந்தம்!

தியானம்: 2020 ஜுன் 26 வெள்ளி | வேத வாசிப்பு: மாற்கு 10:13-16

அவர்களை அணைத்துக்கொண்டு, அவர்கள்மேல் கைகளை வைத்து, அவர்களை ஆசீர்வதித்தார் (மாற்கு 10:16)

ஒரு வாலிபன் அவசரமாக ஓடிவந்து பஸ்சிலே ஏறினான். அவனது மேலாடை வேர்த்து வியர்வையால் நனைந்திருந்தது. தலை கலைந்த நிலையில் மிகவும் களைப்பாகக் காணப்பட்டான். சிறிது நேரத்தில் பக்கத்தில் இருந்த முதியவர் மீது சாய்ந்து தூங்கி விழத்தொடங்கினான். இதைப் பார்த்துக்கொண்டிருந்த இன்னுமொரு பயணி, அந்த வாலிபனை எழுப்ப எத்தனித்தார். அப்பொழுது அந்த முதியவர், “வேண்டாம், பாவம். மிகவும் களைத்துப் போயிருக்கிறான்போலும். தானாக எழுந்திருக்கட்டும்” என்று சொல்லி தனது தோள்பட்டையை அவ்வாலிபனுக்கு வசதியாக்கிக் கொடுத்தார். கோபமடையாத இந்த முதியவரில் காணப்பட்ட இந்த சாந்தம் அந்தப் பயணியைத் திகைக்க வைத்தது.

சிறுபிள்ளைகளை இயேசுவிடம் ஆசீர்வாதத்திற்காக, பெற்றோர் கொண்டு வந்தபோது, இயேசுவை தொந்தரவு செய்யவேண்டாம் என்று அவர்களை சீடர்கள் தடுத்து நிறுத்தினார்கள். ஆனால் இயேசுவோ, சிறுபிள்ளைகளை என்னிடத்திற்கு வர இடங்கொடுங்கள் என்று சொல்லி அவர்களை அணைத்துக்கொண்டு ஆசீர்வதித்தார். ஆம், இயேசு இந்த சாந்தகுணத்திற்கு ஒரு முன்மாதிரியாய் இருந்தார்.

இஸ்ரவேலரை வழிநடத்தி வந்த மோசே எதிர்நோக்கிய பிரச்சனைகள், துன்பங்கள் சொல்லிமுடியாதவை. மோசே இவற்றை எப்படியாகச் சமாளித்தார். முரண்டுபிடித்தவர்களையும், கல்லெறிய முற்பட்டவர்களையும், முறுமுறுத்தவர்களையும், சாப்பாடு எங்கே, தண்ணீர் எங்கே என்று குழப்பம் விளைவித்தவர்களையும் சமாளிக்க அவரால் எப்படி முடிந்தது? இன்று எங்களது சொந்தக் குடும்பங்களையே சமாளிக்கமுடியாமல் திண்டாடுகிறோம். சிலர் குடும்பத்தைவிட்டு ஓடியும் விடுகிறார்கள். அப்படியானால், இலட்சக்கணக்கான மக்களை வழிநடத்த ஏதோ ஒரு விசேஷத்தன்மை மோசேயிடம் காணப்பட்டிருக்க வேண்டும். தேவனுடைய வழிநடத்துதல் மோசேயோடே இருந்தது உண்மைதான். அத்தோடுகூட, பூமியிலுள்ள சகல மனிதரிலும் சாந்தகுணமுள்ளவனாய் இருந்தான் என்று வேதாகமம் கூறுகிறது.

இன்று நமக்குள் இந்த ஆவியின் கனியாகிய சாந்தகுணம் உண்டா? வெடுக்கென பதிலுரைப்பதும், முடியாது என முகத்தில் அடித்தாற்போல பேசுவதும், பிறரை அவமதிக்கும் வகையில் கேவலமாக பேசுவதும், நமக்குள் இருக்கும் கோபகுணத்தின் வெளிப்பாடே தவிர, இது சாந்தகுணம் அல்ல. நாம் இயேசுவைப் போல, மோசேயைப்போல் இந்த சாந்தகுணத்தை நமக்குள் வளர்த்துக்கொள்ள ஆவியானவரின் உதவியை நாடுவோமாக.

“உங்கள் சாந்தகுணம் எல்லா மனுஷருக்கும் தெரிந்திருப்பதாக, கர்த்தர் சமீபமாயிருக்கிறார்” (பிலிப்பியர் 4:5).

ஜெபம்: இரக்கத்தின் தேவனே, நான் சாந்தமாய் நடக்கத்தவறிய தருணங்களுக்காக வருந்துகிறேன். என் கோபக் குணத்தை அழித்துப்போட்டு, என்னை பரிசுத்தாவியானவருக்குள் சரிப்படுத்திக்கொள்ள ஒப்புவிக்கிறேன். ஆமென்..