ஜெபக்குறிப்பு: 2022 அக்டோபர் 30 ஞாயிறு

இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தராகிய தேவனே, உம்மை ஸ்தோத்திரிக்கிறோம் (வெளிப்படு.11:17) இம்மாதத்தின் கடைசி ஆராதனை நாளிலும் வட இந்தியா மற்றும் ஆலயங்களே இல்லாத இடங்களில் ஆலயம் கட்டப்படும்படியாய் எடுக்கப்படும் சகல முயற்சிகளையும் கர்த்தர் வாய்க்கச்செய்து, கட்டுமான பணிகள் யாவும் தடைகளின்றி நடப்பதற்கும் தேவைகள் சந்திக்கப்படுவதற்கும் ஜெபிப்போம்.

உண்மைத்துவமும் உற்சாகப்படுத்துதலும்!

தியானம்: 2022 அக்டோபர் 30 ஞாயிறு | வேத வாசிப்பு: 1தீமோத்.1:12-18, 4:12-16

YouTube video

… கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்னை உண்மையுள்ள வனென்றெண்ணி, இந்த ஊழியத்திற்கு ஏற்படுத்தினபடியால், அவரை ஸ்தோத்திரிக்கிறேன் (1தீமோத்தேயு 1:12).

இன்று யார் யாரோ அறிவுரைசொல்ல எழும்பிவிட்டார்கள். அறிவுரை சொல்லவும் ஒரு தகுதி வேண்டுமல்லா! தன் வாழ்வில் மனந்திரும்புதல் இல்லாதவன் எப்படி மற்றவன் மனந்திரும்பும்படி அறிவுரை சொல்லலாம்? அதேசமயம், தனது மனந்திரும்பிய வாழ்வின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும்போது, தனது முன்னிலைமை எப்படியாக இருந்தது என்பதையும் கர்த்தருக்கு மகிமையாக எடுத்துக் கூறுவது அவசியம். அது, அறிவுரையைக் கேட்கிறவர்களும் அதன்படியே தங்களைத் திடப்படுத்தி தீர்மானம் பண்ணிக்கொள்ள உதவியாயிருக்கும். தினமும் ஜெபிக்கின்ற பெற்றோரால்தான் வேதம் வாசித்து ஜெபிக்கும்படி தங்கள் பிள்ளைகளுக்கு ஆலோசனை கூறமுடியும்.

இன்றைய வேதவாசிப்புப் பகுதியிலே, தன்னைப் பெலப்படுத்துகிற கர்த்தராகிய இயேசு தன்னை உண்மையுள்ளவனென்று எண்ணி இந்த ஊழியத்தில் தன்னை ஏற்படுத்தினார் என்று பவுல் வெளிப்படையாக தீமோத்தேயுவுக்கு எழுதுகிறார். “உண்மையுள்ளவனென்று எண்ணி..” என்னையும் அவர் ஏற்படுத்தினாரே என்ற தொனி இங்கே தொனிக்கிறது. அதாவது தனது முன்னான நிலையை எடுத்துரைக்க அவர் வெட்கப்படவில்லை. அவிசுவாசத்தினாலே அப்படிச் செய்தபடியினால் இரக்கம் பெற்றதாக விளக்குகிறார் (1தீமோ.1:13). இப்போது தன்னில் கர்த்தரின் கிருபை பெருகியிருப்பதை அறிக்கையிடுகிறார் (1தீமோ.1:14). பவுலின் இந்த வார்த்தைகள் தீமோத்தேயுவின் விசுவாசத்தைப் பெலப்படுத்தித் திடப்படுத்தியதுடன். கர்த்தரில் கொண்டிருந்த அன்பையும் பெருகச்செய்தது. விசுவாசமும் நல்மனச்சாட்சியும் என்றும் அவசியம்; மாதிரியாயிரு; ஜாக்கிரதையாயிரு; அசதியாயிராதே; நிலைத்திரு என்றெல்லாம் பவுல் தீமோத்தேயுவுக்கு ஆலோசனை சொல்ல முற்றிலும் தகுதிபெற்றிருந்தார் என்பதை நாம் காண்கிறோம். இதன் பலனாக உபதேசத்தைக் கேட்பவர்களையும் இரட்சித்துக்கொள்ள முடியுமென்று பவுல் தொடர்ந்தும் ஆலோசனை கூறுகிறார்.

பிரியமானவர்களே, நாம் பவுல் அல்ல; ஆனாலும், அவரைப்போல நமது வாழ்வு மாற்றமடைந்து சாட்சியாக, பிறருக்கு மாதிரியாய் மாறவேண்டுமல்லவா? முன்னர் நாம் எப்படியோ வாழ்ந்திருக்கலாம். ஆனால், அந்தச் சேற்றினின்று கர்த்தர் நம்மைத் தூக்கியெடுத்ததை நம்மால் சாட்சியாகக் கூறமுடியுமானால் அதுதான் சாட்சி. தூக்கியெடுக்கப்பட்டவர்களுக்குத்தான் சேற்றின் கொடுமை தெரியும். அவர்களால்தான் அடுத்தவர்களுக்கு ஆலோசனை கூறமுடியும். நாம் உண்மைத்துவமுள்ளவர்களாக இருந்தால் அடுத்தவர்கள் உற்சாகமடைவர். அடுத்தவர்களுக்கு ஆலோசனை சொல்லுமுன்னர் நம்மை நாமே ஆராய்ந்து பார்ப்போம்.

நான் வருமளவும் வாசிக்கிறதிலும் புத்திசொல்லுகிறதிலும் உபதேசிக்கிறதிலும் ஜாக்கிரதையாயிரு (1தீமோத்தேயு 4:13).

ஜெபம்: எங்கள் பெலனாகிய கர்த்தாவே, மற்றவர்களை திடப்படுத்துமளவுக்கு எங்களது வாழ்வு கர்த்தருக்குள் திடமாய் உண்மைத்துவமுள்ளதாயிருக்க எங்களுக்கு கிருபை செய்யும். இயேசுவின் நாமத்தில் பிதாவே. ஆமென்.