ஜெபக்குறிப்பு: 2023 ஏப்ரல் 18 செவ்வாய்

தேவனே …. என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது (சங்.63:1) என்ற வாக்குப்படியே ஆவிக்குரிய வாழ்விற்காக ஜெபிக்கக் கேட்ட ஒவ்வொருவரும் வேதவசனத்தின் மேல் தாகம் கொண்டு வாசிக்கவும் அனுதின வாழ்க்கையில் கர்த்தருக்கு பிரியமானதைச் செய்யவும் தூயஆவியானவர் அவர்களை ஆட்கொண்டு வழிநடத்த வேண்டுதல் செய்வோம்.

முழுமையான கீழ்ப்படிதல்

தியானம்: 2023 ஏப்ரல் 18 செவ்வாய் | வேத வாசிப்பு: எபிரெயர் 5:1-10

YouTube video

அவர் குமாரனாயிருந்தும் பட்டபாடுகளினாலே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டு … (எபிரெயர் 5:8).

ஒரு காரியத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்றால், இன்னொன்றை இழந்துதான் ஆகவேண்டும். மாறாக, இலகுவாக நமது விருப்பங்கள் நிறைவேறுகிறது என்றால் அது எங்கிருந்து கிடைக்கிறது என்பதில் நமக்கு எச்சரிப்பு அவசியம். பாடுகளின்றி பரலோகம் இல்லை. இயேசுவின் உயிர்த்தெழுதலை நினைவுகூர்ந்த நாம், அந்த மகிமையான உயிர்த்தெழுதலின் முன்னதாக நடந்த எவற்றையும் இலகுவில் மறந்துவிடக்கூடாது.

உயிர்த்தெழுந்த ஆண்டவர் இன்று மகா பிரதான ஆசாரியராக (எபி.4:14) நமக்காகப் பரிந்துபேசுகிறவராகப் பிதாவின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார். ஆனால், இந்த உன்னத நிலைக்காக அவர் தம்மைதாமே உயர்த்தவில்லை. பிதாவே அவரை உயர்த்தினார். இது நடந்தது எப்படி? இயேசு, மாம்சத்தில் இருந்த நாட்களில் மரண ஆக்கினையிலிருந்து தப்புவிக்க வல்லவரிடம் மகா சத்தமாய் கண்ணீரோடே விண்ணப்பம் பண்ணினார். அவர் தமது குமாரன் என்பதினால் பிதா தமது குமாரனை அந்த சிலுவை மரணத்திலிருந்து தப்பித்துக்கொள்ள விடவில்லை. இயேசுவின் மானிடவாழ்வு இலகுவானதல்ல. இயேசு தாமே பாடுகள் நிறைந்த இந்த வாழ்வைத் தெரிந்துகொண்டார் (யோவான் 10:17,18). அதாவது, தமது பிதாவாகிய தேவனுடைய சித்தத்தை செய்து முடிப்பதற்காக இயேசு மேற்கொண்ட படிமுறைதான் இது.

பிதாவுக்குக் கீழ்ப்படிந்தால் வேதனை, பாடுகள், உலகத்தின் பாவத்தைச் சுமந்து பிதாவின் முகத்திலிருந்து மறைக்கப்படுதல், கொடூர மரணம் ஆகிய இவை யாவும் உண்டாயிருக்கும் என்று தெரிந்திருந்தும், பிதாவின் சித்தத்திற்குரிய பாதையை இயேசு மனப்பூர்வமாகவே ஏற்றுக்கொண்டார். சகல பாடுகள் மத்தியிலும் இயேசு பரிபூரணமாகவே பிதாவுக்குக் கீழ்ப்படிந்ததாலேயே இன்று அந்த உன்னத ஸ்தானத்தில் ஜீவனுள்ளவராய் வீற்றிருக்கிறார். மாத்திரமல்ல, நமது வாழ்வில் என்ன பாடுகள் நேர்ந்தாலும் அவற்றின் மத்தியிலும் நாம் கீழ்ப்படிந்திருக்க நம்மை வழிநடத்தவும் அவராலே முடியும்.

அருமையானவர்களே, கர்த்தருக்குக் கீழ்ப்படிந்து வாழ்வதென்பது இந்த பொல்லாத உலகத்தில் கடினமே! ஆனால், கர்த்தருக்கு முழுமையாக நாம் கீழ்ப்படியாவிட்டால் அதன் பிரதிபலன் மிகவும் கொடுமையாக இருக்கும். உலகம் நாளை மாறிப்போகும். ஆனால், மாறாத கர்த்தரோடு நாம் நித்தியமாக வாழ வேண்டுமானால் இந்த உலகம் கொண்டுவரும் பயமுறுத்தல்களுக்கு அஞ்சாமல், அவரை முழுமையாகக் கீழ்ப்படிந்திருக்க ஆண்டவரைச் சார்ந்திருப்போமாக.

ஜெபம்: கிருபையுள்ள கர்த்தாவே, உயிர்த்தெழுதலின் சாயலில் நாங்கள் இணைக்கப்படுவதற்கும், கர்த்தருடைய சித்தத்தின்படி செய்கிறவர்களாக காணப்பட முழுமையான கீழ்ப்படிதல் எங்கள் வாழ்வில் இருப்பதற்கும் எங்களை அர்ப்பணிக்கிறோம். எங்களை ஏற்றுக்கொண்டருளும். ஆமென்.