ஜெபக்குறிப்பு: 2023 ஏப்ரல் 27 வியாழன்

சமாதானத்தைக் கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவித்து, இரட்சிப்பைப் பிரசித்தப்படுத்துகிற (ஏசா.52:7) மிஷன் ஸ்தாபனங்களுக்காக, பணித்தளங்களில் மருத்துவம் சார்ந்த மிஷனெரிபணி செய்யும் மருத்துவர்களுக்காக, ஆசிரியர்களுக்காக, குழந்தை காப்பகங்களுக்காக ஜெபிப்போம். தங்கள் ஆஸ்திகளால் இவர்களை தாங்கும் விசுவாச குடும்பங்களை கர்த்தர் தழைக்கச்செய்திட மன்றாடுவோம்.

இருதய காவல்!

தியானம்: 2023 ஏப்ரல் 27 வியாழன் | வேத வாசிப்பு: நீதிமொழிகள் 4:20-27

YouTube video

எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதினிடத்தினின்று ஜீவ ஊற்று புறப்படும் (நீதி.4:23).

“அவன் இருதயத்தின் நினைவு எப்படியோ, அப்படியே அவன் இருக்கிறான்” (நீதி.23:7). தேவனைத் துதிக்கும் துதியும் ஸ்தோத்திரமும் இருதயத்தின் ஆழத்திலிருந்து புறப்படவேண்டும். அதேசமயம், அதே இதயத்திலிருந்து எழும் சிந்தனைகள் நம்மையும் தேவனையும் பிரித்துப்போடும் அளவுக்குச் சக்தி வாய்ந்தவையாகும் என்பதைக் குறித்தும் நாம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். நமது மூளை சிந்தனை செய்தாலும், அந்த சிந்தனைகள் இருதயத்தையே ஆக்கிரமிக்கின்றன. பின்னர் அவை உருவெடுத்து, செயலாக வெளிப்படுகிறது. “உன்னைக் குறித்து நீ யாரென்று நினைக்கிறாயோ, நீ அவனல்ல; உன்னுடைய நினைவு எப்படி இருக்கிறதோ அவ்வாறே நீ இருக்கிறாய்.”

ஞானத்திலும் அறிவிலும் ஆற்றலிலும் செல்வத்திலும்கூட சிறந்து விளங்கிய சாலொமோன் ராஜா, எல்லாம் மாயை என்றும், தேவனுக்குப் பயந்து வாழுவதே மனிதனுக்கு சிறந்தது என்றும் எழுதிவைத்தது ஏன்? அப்படியெனில், அவர் தனது வாழ்வில் எவ்வளவாய் குழம்பித் தவித்திருக்கவேண்டும்! இறுதியில் அவருக்கு ஏற்பட்ட வீழ்ச்சியும் நமக்குத் தெரியும். இத்தனைக்கும் காரணம் அவருடைய இருதயத்தின் சிந்தனைகள்தான். “எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள்” என்று அவர் எழுதியதிலிருந்தே இது விளங்குகிறது. ஒன்றை நாம் சிந்தித்துப் பார்ப்போம். நாம் எதை விரும்புகிறோமோ, அதை முடிக்க, எப்படியோ நேரத்தையும், வழிகளையும் கண்டுபிடித்து, அதைச் செய்து விடுகிறோமல்லவா! ஆம், அன்பும் ஆசைகளும் ஊற்றெடுக்கும் நமது இருதயமே நமது வாழ்வுமுறையை நிர்ணயிக்கிறது.

ஒரு உண்மைக் கிறிஸ்தவன், அடிக்கடி அலைபாய்கின்ற தன் இருதய சிந்தனையைக் கட்டுப்படுத்தவேண்டியது மிக முக்கியம். தேவனுக்குப் பிரியமான வழியில் வாழ்வதைக் குறித்த சிந்தனையால் நம் இருதயத்தை நிரப்புவோமானால், அதிலிருந்து ஊற்றெடுக்கும் ஊற்று நமக்கும் அநேகருக்கும் ஆரோக்கியத்தையே கொடுக்கும். வாயில் வருவதையெல்லாம் பேசாதபடி, கண் காண்கிற எல்லாவற்றுக்கும் பின்னே செல்லாதபடி முதலில் நமது இருதயத்திற்கு நாமேதான் காவல் வைக்கவேண்டும். பிறரிடம் அன்பு செலுத்துவதிலும் கவனம் வேண்டும்; நம்மைக் கவரும் காரியங்களிலும் கவனம் வேண்டும். வலது புறம் இடது புறம் சாயாமல் நமது இருதயத்தைக் காத்துக்கொள்வது கடினம்தான். ஆனாலும், அதனை நாம் செயற்படுத்தாவிட்டால், அது நம்மைப் பாவ வாழ்விற்கு இட்டுச் சென்றுவிடும். ஆகவே தேவபிள்ளையே, எப்போதும் நமக்கு துணைநிற்கும் பரிசுத்த ஆவியானவரின் பெலத்தை நாடி, சத்திய வேதாகமத்தின் வார்த்தைகளைக் கைக்கொண்டு, நல்ல ஊற்றுக்கண்களாக வாழ நம்மை ஒப்புவிப்போமாக.

ஜெபம்: நல்ல ஆண்டவரே, வீண்சிந்தனைகளை வெறுத்து உமது வேதத்தில் பிரியமாயிருக்கவும், உமது வார்த்தையால் எங்கள் இருதயத்தைக் காத்துக்கொள்ளவும் தூய ஆவியானவர் பெலப்படுத்தவும் எங்களை ஒப்புவிக்கிறோம். ஆமென்.