ஜெபக்குறிப்பு: 2023 ஏப்ரல் 16 ஞாயிறு

அப்பொழுது… சபைகள்.. பரிசுத்த ஆவியின் ஆறுதலோடும் நடந்துபெருகின (அப்.9:31) சபைகள் பரிசுத்தமாக்கப்படுவதற்கும், இந்தநாட்களிலே பெலவீனங்களோடும் சுகவீனத்தோடும் உள்ள போதகர்கள், சுவிசேஷப்பணி ஊழியர்கள் அனைவருக்கும் கர்த்தர் ஆரோக்கியத்தை வரப்பண்ணி ஊழியத்தில் எடுத்து உபயோகித்திட மன்றாடுவோம்.

ஸ்தேவான் அனுபவித்த சிலுவை!

தியானம்: 2023 ஏப்ரல் 16 ஞாயிறு | வேத வாசிப்பு: அப்போஸ்தலர் 7:54-60

YouTube video

…. ஸ்தேவான் தொழுதுகொள்ளுகையில், அவனைக் கல்லெறிந்தார்கள் (அப். 7:59).

நல்லதை செய்ததால், அல்லது சொன்னதால் மற்றவர்களுடைய கோபத்துக்கு ஆளாகி புறக்கணிக்கப்பட்டிருக்கிறீர்களா? உங்களைப் புரிந்துகொள்ளாதவர்களால் துன்பத்துக்குள்ளாகியுள்ளீர்களா? ஸ்தேவான் சுமந்த சிலுவையும் அப்படிப்பட்டதுதான். ஸ்தேவான் பரிசுத்தாவியும் ஞானமும் விசுவாசமும் நற்சாட்சியும் பெற்றவன். விதவைகளைக் கரிசனையோடு விசாரித்தவன். ஆசாரியர்கள் பலரும் விசுவாசத்தை ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு தேவவசனம் விருத்தியடைய பாடுபட்டவன்.

இப்படிப்பட்ட ஸ்தேவான் இயேசுவைப்போலவே பொய்க் குற்றஞ்சாட்டப்பட்டான். ஆலோசனைச் சங்கத்திற்கு முன்பதாக நிறுத்தப்பட்டான். ஆனாலும், ஸ்தேவான் பயப்படவில்லை. “நீங்கள் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளவில்லை” என்று பயமின்றிச் சொன்னான். அவர்களோ கோபங்கொண்டனர். ஸ்தேவான் கண்ட தரிசனத்தினிமித்தமும் அவனை நகரத்துக்குப் புறம்பே கொண்டு போய் கல்லெறிந்தார்கள். ஸ்தேவானோ இயேசுவைப்போலவே தன்னைத் துன்புறுத்துகிறவர்களுக்காக ஜெபித்து நித்திரையடைந்தான்.

மேலதிக விசாரணையின்றியே கொலை செய்யப்பட்ட இந்த விஷயம் அநியாயம் என்றும், ஸ்தேவான் சிறிது புத்தியாக நடந்திருக்கலாம் என்றும் நமக்குத் தோன்றும். கிறிஸ்துவுக்காய் இத்தனை வைராக்கியமாக இருந்ததற்கு இதுவா பரிசு? ஆம், அந்நாட்களில் இயேசுவைப்போலவே அவருக்காக மரிக்கக் கிடைப்பது பெரிய பாக்கியம் என்று விசுவாசிகள் நினைத்தனர். அவருடைய நாமத்திற்காகத் தாங்கள் அவமானமடைவதற்குப் பாத்திரராக எண்ணப்பட்ட படியினால், அவர்கள் சந்தோஷமடைந்தனர் (அப்.5:41). ஸ்தேவான் மரிக்கும்போது கண்ட தரிசனம் உயிர்த்தெழுதலை உறுதிப்படுத்தியது. நேரடியாகவோ மறைமுகமாகவோ பல தாக்கங்களைக் கொண்டுவந்தது. பிலிப்புவின் சுவிசேஷ பணியும், சவுலின் மனமாற்றமும், பேதுருவின் சுவிசேஷ பயணமும், அந்தியோகியாவில் சபை ஸ்தாபிக்கப்பட்டதும் ஸ்தேவானின் மரணத்திற்குப் பின்னர்தானே!

தேவபிள்ளையே, மரணத்தின் வாசலில் நின்று தன்னைக் கல்லெறிகிறவர்களுக்காக ஸ்தேவான் ஜெபித்தது பரிசுத்தாவியானவரின் கிருபையே அன்றி வேறில்லை. அதுவே ஸ்தேவான் சுமந்த சிலுவையின் பெரிய வெற்றி. வார்த்தைக்குக் கீழ்ப்படிகிறதில் நமக்கு உண்டாகும் எந்தவொரு கஷ்டத்தையும் துன்பத்தையுங் குறித்தும் கலங்கவேண்டாம். நமக்குள் இருக்கும் தூய ஆவியின் கிரியைக்கு நம்மை ஒப்புக்கொடுப்போம். நாம் சுமக்கும் சிலுவையை நமக்கு வெற்றியின் சின்னமாக அவர் மாற்றிடுவார்!

ஜெபம்: உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிற ஆண்டவரே, என்ன நேர்ந்தாலும் என் ஒவ்வொரு செயலும் உம்மை வெளிப்படுத்துகிறதாய் இருக்க தூய ஆவியானவரின் பெலன் தாரும். ஆமென்.