பாவத்திற்குத் தப்பிக்கொள்!

தியானம்: 2021 ஏப்ரல் 23 வெள்ளி | வேத வாசிப்பு: ஆதியாகமம் 39:7-23

எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல் தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும் (மத்.6:13).

உண்மையும், உத்தமமுமாய் தனது கடமைகளைச் சரிவரச் செய்த யோசேப்புக்கு, அதே இடத்தில் பாவசோதனை வந்ததை இன்றைய வாசிப்பிலே காண்கிறோம். ஆனால் யோசேப்போ அச்சோதனையிலிருந்து தன்னைக் காத்துக்கொள்ள அவ்விடத்தைவிட்டு ஓடிப்போனார். தன்னைப் பரிசுத்தமாய்க் காத்துக்கொள்வதற்கு ஓடிப்போவதைத் தவிர அந்த இடத்தில் அவருக்கு வேறு வழி ஏதும் இருக்கவில்லை. ஆனாலும் அவர் போத்திபாரின் மனைவியினால் பொய்க்குற்றம் சாட்டப்பட்டு சிறையில் தள்ளப்பட்டார். நாம் கவனிக்வேண்டிய ஒரு முக்கியமான வசனம் என்னவெனில், “கர்த்தர் யோசேப்போடுகூட சிறையில் இருந்தார்” (ஆதி.39:21-23) என்பதே. யோசேப்பு பாவம் செய்து தேவனை விட்டு விலகாமல், பாவத்துக்கு விலகி ஓடி அதற்காக சிறையில் இருக்கவும்; துணிந்தார். எந்தப் பாவமும் செய்யாத யோசேப்பு பாவிகளின் சிறையில் இருந்தாலும் தேவனுடைய சமுகம் அங்கே அவரோடுகூட இருந்தது.

பாவத்திலிருந்து தப்பிக்கொள்வதற்கு, பாவ சூழ்நிலைகளை நாம் தவிர்த்துக்கொள்வது அவசியம். குறிப்பிட்ட இடத்தில் நமக்குப் பாவ சோதனைகள் உண்டு என்று நாம் அறிந்தால் அந்த இடத்திற்குப் போகாமல் தவிர்த்துக்கொள்வதே பாவத்திலிருந்து தப்பிக்கொள்ள சாலச்சிறந்த வழியாகும். மீண்டும் மீண்டும் அதே இடத்திற்குப் போய், அதே சூழ்நிலைகளில் சிக்கிக்கொண்டு பாவத்தில் விழுவதைவிடுத்து, அவ்விடத்தை, அச்சூழ்நிலைகளைத் தவிர்த்துக்கொள்வதே நல்லது. மழை பெய்து முடிந்ததும் வீதியில் சேறும் சகதியுமாக சில பகுதிகள் தோன்றும். அப்போது, “நான் பிறந்ததிலிருந்து விழுந்ததே கிடையாது” என்று சொல்லி அந்தச் சேற்றுக்குள்ளாக நடப்போமா? இல்லையே. தற்செயலாய் விழுந்துவிடலாம் என்று அஞ்சி சகதியற்ற பகுதியைப் பார்த்து நடப்போமல்லவா! அதுபோலவேதான் பாவத்தில் இருந்து தப்பிக்கொள்வதற்கும் பாவமான சூழ்நிலைகளைத் தவிர்த்து நடக்கவேண்டும். “தன்னை நிற்கிறவன் என்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாய் இருக்கக் கடவன்” (1கொரி.10:12).

அருமையானவர்களே, நாம் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்கவேண்டிய காலம் இது. ஏனெனில் நம்மை வீழ்த்த பிசாசானவன் பல வழிகளில் முயற்சி செய்துகொண்டிருக்கிறான். கர்ச்சிக்கிற சிங்கம்போல் சுற்றித் திரியும் சாத்தானின் வாயில் அகப்படாதபடி நம்மைக் காத்துக்கொள்வோம்.

ஜெபம்: அன்பின் ஆண்டவரே, நீர் பாவத்தை ஜெயித்தவர். உம்முடைய பிள்ளையாகிய நானும் உமது பெலத்தால் பாவத்தை ஜெயித்து, வெற்றியான வாழ்வை வாழ, எனக்கு உதவி செய்வீராக. ஆமென்.