ஆசிரியரிடமிருந்து…

சத்திய வசனம் பங்காளர் மடல்

செப்டம்பர்-அக்டோபர் 2017

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள விசுவாச பங்காளர்களுக்கு,

வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் பெற்றிருக்கிற நமதாண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

இவ்வருடத்தின் இறுதி காலாண்டிற்குள் பிரவேசிக்க கர்த்தர் உதவி செய்திருக்கிறார். “என் நாட்கள் நெய்கிறவன் எறிகிற நாடாவிலும் தீவிரமாய் ஓடுகிறது” (யோபு 7:6) என்ற யோபுவின் வார்த்தைகள்போல வேகமாக உருண்டோடிக்கொண்டிருக்கிற இக்காலத்திலே எந்தச் சூழ்நிலையிலும் கர்த்தரைப் பற்றும் விசுவாசத்தோடும் பொறுமையோடும் நமது விசுவாச ஓட்டத்தை ஓடி நமது இலக்கை அடைய தேவன்தாமே கிருபைச் செய்வாராக, இதுவரையிலும் இவ்வூழியத்தை தங்களது அன்பின் ஜெபத்தாலும் காணிக்கையாலும் தாங்கிவந்துள்ளீர்கள். தொடர்ந்து தங்களது ஜெப உதவியை நாங்கள் நாடுகிறோம்.

அக்டோபர் 14-ம் தேதி திருச்சி, உறையூரில் அமைந்துள்ள C.S.I. ST.Paul’s Church-ல் உள்ள துதி மண்டபத்தில் சத்தியவசன விசுவாசப்பங்காளர் கூடுகையை நடத்த ஜெபத்தோடு ஒழுங்கு செய்துள்ளோம். மாலை 6.30 மணியளவில் இக்கூட்டம் ஆரம்பிக்கும். வேதாகமத்திற்கு திரும்புக இயக்குனர்கள் இதில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு தேவ செய்தியைப் பகிர்ந்துகொள்வார்கள். திருச்சியில் உள்ள பங்காளர்கள் தாங்கள் குடும்பமாக இக்கூடுகையில் கலந்து கர்த்தருடைய நாமத்தை மகிமைப்படுத்த அன்போடு அழைக்கிறோம்.

‘நான் நிற்கும் கன்மலை’ என்ற புத்தகத்தை பங்காளர்களுக்கு அனுப்பியிருந்தோம். இப் புத்தகத்தை பங்காளர்களுக்கு அன்பளிக்காக அளித்த Dr.ஸ்டான்லி, வேலூர் அவர்களுக்கும் எங்களது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். இப்புத்தகத்தின் வாயிலாக அநேகர் பிரயோஜனமடைந்ததை அறிந்து தேவனைத் துதிக்கிறோம்.

இவ்விதழில் திரு.அஜீத் பெர்னாண்டோ அவர்கள் மெய்யான செல்வ செழிப்புள்ள கிறிஸ்தவர்களது குணாதிசயங்களை விளக்கி சிறப்புச் செய்தியை எழுதியுள்ளார்கள். தேவன் நமக்கு அளித்துள்ள பணத்தை எவ்விதமாக பயன்படுத்த வேண்டும் என்பதை ‘வேதம் அறிவுறுத்தும் நிதிக் கொள்கைகள்’ என்ற தலைப்பில் திரு. ஜார்ஜ் ஃபூஷீ அவர்களும், ‘மகிழ்ச்சியான வாழ்வுக்கு ஒரே தெரிவு’ என்ற தலைப்பில் சகோதரி சாந்தி பொன்னு அவர்களும், சபையைக் குறித்த செய்தியில் ஐக்கியமாக செயல்பட்ட சபை’ என்ற தலைப்பில் சகோ.பிரேம் குமார் அவர்களும், பண ஆசை தேவனுடைய ராஜ்யத்திற்குள் பிரவேசிக்க எவ்வாறு தடையாயிருக்கிறது என்பதைக் குறித்து பேராசிரியர் எடிசன் அவர்களும் எழுதியுள்ளார்கள், விசுவாசியின் ஆவிக்குரிய போராட்டம் என்ற தொடர் வேதபாடத்தில் ‘விசுவாசமென்னும் கேடகத்தை’ விவரித்து Dr.தியோடர் எச்.எஃப். அவர்கள் எழுதியுள்ளார்கள்,. இச்செய்திகள் அனைத்தும் உங்கள் ஒவ்வொருவருக்கும் அதிக பிரயோஜனமாகவும் ஆசீர்வாதமாகவும் இருக்கவேண்டுதல் செய்கிறோம்.

கே.ப.ஆபிரகாம்

சத்தியவசனம்