சத்திய வசனம் பங்காளர் மடல்

செப்டம்பர்-அக்டோபர் 2019

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள விசுவாச பங்காளர்களுக்கு,

நேற்றும் இன்றும் என்றும் மாறாத இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்.

உலகமெங்கும் போய் சர்வசிருஷ்டிக்கும் நற்செய்தியை அறிவிக்க இயேசுகிறிஸ்து அருளிய கட்டளைக் கிணங்க வெகுஜன ஊடகங்கள் வாயிலாக இயேசுகிறிஸ்துவின் நற்செய்தியை இதுவரைக்கும் அறிவித்துவர தேவன் கிருபை செய்தபடியால் அவரைத் துதிக்கிறோம். வேதாகம சத்தியங்களை வானொலி, தொலை காட்சி, இலக்கியங்கள் வாயிலாக மக்களுக்கு அறிவிக்கவும் போதிக்கவும் தேவன் கொடுத்துள்ள வாய்ப்புகளுக்காக அவரை ஸ்தோத்திரிக்கிறோம். இப்பணியில் ஈடுபட்டுவரும் சத்தியவசன செய்தியாளர்கள், எழுத்தாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் யாவரையும் வல்லமையாக தேவன் உபயோகப்படுத்த வேண்டுதல் செய்வோம்.

தற்போது இந்திய தேசத்தில் ஏற்பட்டுவரும் பொருளாதார வீழ்ச்சி, வேலையில்லா திண்ட்டாட்டம், வறுமை, பற்றாக்குறை ஆகியவை நீங்கவும் தேசம் சுபிட்சம் பெறவும் தொடர்ந்து மன்றாடுவோம். தேசமே பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார் என்ற வாக்குப்படி நம் தேசத்தில் கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்து ஆசீர்வதிக்கவும், தேசமக்கள் ஆண்டவரை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளவும் மனந்திரும்பவும் ஜெபிப்போம்.

அக்டோபர் 2ஆம் தேதி புதன்கிழமை சென்னையில் எக்மோர், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தூய ஆன்ட்ரூஸ் சர்ச்சில் பங்காளர் சிறப்புக்கூடுகையை ஒழுங்கு செய்துள்ளோம். அக்டோபர் 26 ஆம் தேதி சனிக்கிழமை ஈரோடு சி.எஸ்.ஐ. பிரப் மெமோரியல் ஆலயத்தில் பங்காளர் சிறப்புக் கூடுகை நடைபெறும். இக்கூட்டங்களுக்கான அறிவிப்புகள் 7 மற்றும் 8 ஆம் பக்கங்களில் பிரசுரித்துள்ளோம். இக்கூட்டங்களுக்காக ஜெபிக்கவும் பங்குபெறவும் உங்களை அன்பாய் அழைக்கிறோம்.

இவ்விதழில் சகோதரி சாந்திபொன்னு அவர்கள் தேவனுடைய பிள்ளைகளாகிய நாம் அவருடையதை அவருடைய மகிமைக்காகவே உக்கிராணத்துவத்தோடு பயன்படுத்த வேண்டும் என்பதை விளக்கி ஒருவருக்கொருவரும் உக்கிராணத்துவமும் என்ற தலைப்பில் சிறப்புக்கட்டுரையை எழுதியுள்ளார்கள். ஒருவருக்கொருவர் உதவி செய்வது எப்படி? என்ற தலைப்பில் யோபுவின் வாழ்க்கையிலிருந்து Dr.வாரன் வியர்ஸ்பி அவர்கள் எழுதிய சிறப்பு கட்டுரையும், நற்செய்தியை அறிவிக்க நாம் ஆண்டவரின் கரத்தில் கொடுக்கும் சிறிய முதலீடு ஆத்மபசியை ஆற்றும் சிறந்த முதலீடு என்பதை விவரித்து அப்பங்களும் மீன்களும் என்ற தலைப்பில் சகோ.கிறிஸ்டியன் வெய்ஸ் அவர்கள் எழுதிய கட்டுரையும், அப்.பவுலின் அனுபவத்திலிருந்து பலவீனத்தில் மேன்மை என்ற தலைப்பில் சகோ.ஜெஃப்ரி ஸ்டோனியர் அவர்கள் எழுதிய சிறப்புக் கட்டுரையும், மான்கால்களின் வேகம் கொண்ட சாதனையாளர் ஆசகேலைப் பற்றி Dr.உட்ரோ குரோல் எழுதிய சிறப்புக் கட்டுரையின் தொடர்செய்தியும், மேலும் திரு.பிரகாஷ் ஏசுவடியான் அவர்கள் வழங்கிய குடும்பங்களுக்கான தொடர்செய்தியும் இடம் பெற்றுள்ளது. இச்செய்திகள் ஒவ்வொருவருடைய வாழ்க்கைக்கும் ஆசீர்வாதமாக இருக்க ஜெபிக்கிறோம்.

கே.ப.ஆபிரகாம்