ஜெபக்குறிப்பு: மே 1 வெள்ளி

“என்னைக் கண்டடைகிறவன் ஜீவனைக் கண்டடைகிறான்; கர்த்தரிடத்தில் தயவையும் பெறுவான்” (நீதி.8:35) இவ்வாக்குப்படி இம்மாதம் முழுவதும் கர்த்தருடைய தயவும், பெலனும் சமாதானமும் நம்மை ஆட்கொண்டு வழிநடத்த பாரத்துடன் ஜெபிப்போம்.

குறுகிய வாழ்வு

தியானம்: மே 1 வெள்ளி; வாசிப்பு: சங்கீதம் 39:1-4

“கர்த்தாவே, நான் எவ்வளவாய் நிலையற்றவன் என்று
உணரும்படி என் முடிவையும், என் நாட்களின் அளவு
இவ்வளவு என்பதையும் எனக்குத் தெரிவியும்” (சங்கீதம் 39:4)

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாடகர் ஒருவர், ஒரு பத்திரிகைக்குக் கொடுத்த பேட்டியிலே, “கிறிஸ்தவம் ஒருநாள் முடிவுக்கு வந்து மறைந்தேவிடும். இதைக் குறித்து வாதிடவேண்டியதில்லை, இது நடக்கும், இது உறுதி. இயேசு என்பவர் சரிதான்; ஆனால், அவருடைய காரியங்கள் மிகவும் இலேசானவை. இன்று (1966) அவரைவிட நாங்கள் அதிக பிரபல்யம் பெற்றிருக்கிறோம்” என்று கூறினாராம். இப்படிச் சொல்லி சில நாட்களுக்குள் ஆறு தடவைகள் சுடப்பட்டு இவர் இறந்துவிட்டார். தேவனுடன் போராட யாரால் கூடும்?

தேவனைச் சார்ந்து வாழாத வாழ்வு, வெறுமையும் அர்த்தமற்றதுமான வாழ்வு என்பதை தாவீது நன்கு உணர்ந்திருந்தார். தேவன் இல்லை என்று சொல்லவும், தேவனுக்கு விரோதமாக முறுமுறுக்கவும், பிறரிடம் போய் முறையிடவும் தாவீதுக்கு அதிக காரியங்கள் இருந்தன. ஆடுகளுக்குப் பின்னே பாடிக்கொண்டு சுதந்திரமாகச் சுற்றித் திரிந்த தாவீதை, இஸ்ரவேலுக்கு ராஜாவாக அபிஷேகம் செய்வித்தது கர்த்தர். அதற்காக அரியணை கிடைத்ததா? அநேக ஆண்டுகள் தனது உயிருக்கே நிச்சயமற்றவராக தாவீது காத்திருக்கவேண்டியதிருந்தது. பின்னர், தாவீதின் சொந்த மகனே, தாவீதைக் கொன்றுபோட்டு ராஜ்யத்தைக் கைப்பற்ற வகைதேடினான். இவையனைத்திற்கும் மத்தியில், தன் தேவனுக்கு எதிராக தாவீது முரண்படவில்லை. அந்த நிலையிலும் அவர் தன் தேவனிடமே சென்றார். தன் நிலை மாறவேண்டும் என்று ஜெபிக்காமல், தன் வாழ்வு நிலையற்றது என்பதைத் தனக்கு உணர்த்தும்படிக்கு ஜெபித்தார்; தனக்குக் கிடைத்த ராஜரீகம், செல்வம் எதுவுமே நிலையற்றது என்ற உணர்வுடன் வாழப் பெலன் கேட்டார். சமஸ்த இஸ்ரவேலின் ராஜா தன் நாவை அடக்கி, மனதைக் கர்த்தரில் அமரப்பண்ணினார்.

நமது வாழ்வு குறுகியது என்பது நாம் அறிந்ததே. நாமோ, சாகவே போவதில்லை என்பதுபோலல்லவா வாழுகிறோம். வாழ்வு எவ்வளவு குறுகியது என்பது அல்ல; அதற்குள் நாம் செய்யவேண்டியவற்றைத் தள்ளிப்போடாமல் சரியாகச் செய்கிறோமா என்பதே காரியம். அதில் முதன்மையானது தேவனைச் சார்ந்து வாழும் வாழ்வு. ஜெபிக்கிறோம்; வேதம் படிக்கிறோம்; ஆலயக் காரியங்களில் உற்சாகமாய் இருக்கிறோம். ஆனால், தேவனுடன் நல்லுறவில் இருக்கிறோமா? பிறருடன் நல்லுறவில் இருக்கிறோமா? ஆண்டவருடைய சேவையில் உண்மையாய் இருக்கிறோமா? நமக்கு இன்னமும் ஆறு மாதங்கள்தான் இருக்கும் என்றால், நாம் என்ன செய்வோம்; என்று நம்மை நாமே கேட்டுப் பார்த்து, சரிப்படுத்தவேண்டியவற்றை இன்றே சரிப்படுத்தி விடுவோமாக.

ஜெபம்: “பிதாவே, என் வாழ்வு குறுகியது என்று உணர்ந்து, உம்மைச் சார்ந்து, உமது பிள்ளைகளுடன் சமாதானமாய் வாழ கிருபை தாரும். ஆமென்.”

மகத்துவமான தேவன்!

அதிகாலை வேளையில்… (மே-ஜுன் 2015)
– Dr.உட்ரோ குரோல்

“மூன்றாம் நாள் விடியற்காலத்தில் இடிமுழக்கங்களும் மின்னல்களும்,
மலையின்மேல் கார்மேகமும் மகா பலத்த எக்காளசத்தமும் உண்டாயிற்று;
பாளயத்திலிருந்த ஜனங்கள் எல்லாரும் நடுங்கினார்கள்” (யாத். 19:16).

இருபத்தோராம் நூற்றாண்டின் ஆரம்ப ஆண்டுகளில் தொழிற் நுட்பங்கள் அதிகரித்து நல்லொழுக்கங்கள் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது என்பதில் சற்றும் சந்தேகமில்லை. உலகின் அறிவியல் சாதனைகள் அதிகரித்துக்கொண்டே போனாலும் பகுத்தறிவு குறைந்துகொண்டே வருகிறது. தூயனவாக ஒரு காலத்தில் எண்ணப்பட்ட நிறுவனங்கள் இப்பொழுது நிந்திக்கப்படுகின்றன. நம்முடைய முன்னோர்கள் மதித்த நம்பிக்கைகளில் பல தற்பொழுது மறக்கப்பட்டும் இகழப்பட்டும் வருகின்றன. கடந்த நூற்றாண்டின் இறுதியில் மிகவும் மதிக்கப்படவேண்டிய காரியங்கள் கேலிக்குரியவைகளாக மாறிவிட்டன. இது மத சம்பந்தமான காரியங்களில் அதிகம் காணப்பட்டது. தேவன் யார், அவரை நாம் எவ்வாறு மதிக்கவேண்டும் என்று கிறிஸ்தவ சபைகளும் மக்களுக்குப் போதுமான அறிவைத் தர மறந்துவிட்டன.

புனித யாத்திரையின் மூன்றாவது மாதத்தில் இஸ்ரவேல் மக்கள் சீன் வனாந்தரத்தில் பிரவேசித்து ஒரு பெரிய மலையின் அடிவாரத்தில் தங்கினர். தேவனுடைய பிரதிநிதியாக மோசே சீனாய் மலைக்கு வரவழைக்கப்பட்டார். இங்கே தாம் இஸ்ரவேலரை பிரத்தியேகமான பொக்கிஷமாக மாற்றப்போவதாக தேவன் மோசேக்கு வெளிப்படுத்தினார். தேவனுடைய வார்த்தைகளுக்குச் செவிகொடுத்து கீழ்ப்படியும் பொழுது அவர்கள் ஆசாரியக் கூட்டமாயும் பரிசுத்த தேசமாகவும் இருப்பார்கள் என்று தெரிவித்தார். மோசே கூறியபொழுது அவர்கள் அனைவரும் அதனை ஏற்றுக்கொண்டனர்.

இந்த உடன்படிக்கை மூன்று நாட்களில் செய்யப்பட்டாக வேண்டும். ஆனால் சர்வவல்லவரின் அற்புதமான பரிசுத்தமானது அவரது பிரசன்னத்தை இஸ்ரவேலர் அனுபவிக்க சில ஆயத்தங்களைச் செய்ய வேண்டியதாய் இருந்தது. இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் மாத்திரமே தேவனை தரிசிக்க முடியும். எனவே மோசே அந்த ஜனங்களை இரண்டு நாட்களுக்கு பரிசுத்தமாக்க வேண்டும். ஜனங்கள் தங்கள் வஸ்திரங்களை சுத்தப்படுத்த வேண்டும். இது ஒரு வெளிப்புற அடையாளமாய் இருந்தாலும் உள்ளான சுத்தத்துக்கு ஓர் அடையாளமாக அமைந்திருந்தது. உள்ளான மனந்திரும்புதல், மனம் வருந்துதல் தேவனுக்கு முன்பாக நீதியாக வாழ உண்மையான மனம் விரும்புதல் ஆகிய யாவும் உள்ளத்திலிருந்து புறப்பட வேண்டும். இந்த ஆயத்தத்தை ஒவ்வொரு மனிதனும் தனக்காக செய்யவேண்டும்.

மேலும் தேவனை சந்திக்க பொதுவான ஆயத்தங்களாக வேலி அமைத்தல், தடைகள் உருவாக்குதல் முதலானவை ஜனங்களுக்காக செய்யப்பட வேண்டும். தேவனுடைய அற்புதமான மகத்துவத்தை இஸ்ரவேல் ஜனங்களுக்கு மனதில் பதியச்செய்யவும், அவரைச் சந்திக்கும்பொழுது, காட்டவேண்டிய பயபக்தியையும் உருவாக்க அந்த மலை முழுவதுமே பரிசுத்தம் என அறிவிக்கப்பட்டது. மோசேயும் ஆரோனும் தவிர வேறு யாரும் அந்த வேலி அருகே வருவதற்கோ தொடுவதற்கோ அனுமதிக்கப்படவில்லை.

இத்தனை ஆயத்தங்களுக்குப் பின்னர், “மூன்றாம் நாள் விடியற் காலத்தில் இடிமுழக்கங்களும் மின்னல்களும், மலையின்மேல் கார்மேகமும் மகா பலத்த எக்காளசத்தமும் உண்டாயிற்று; பாளயத்திலிருந்த ஜனங்கள் எல்லாரும் நடுங்கினார்கள்” (யாத்.19: 16). இந்த நிகழ்வு இஸ்ரவேல் மக்களுக்கு விவரிக்கமுடியாத ஒரு பயபக்தியை தேவன்மீது ஏற்படுத்தியது.

இஸ்ரவேலின் பரிசுத்தர் ஒரு கார் மேகத்தில் காணப்பட்டார்; ஏனெனில் அவரது பிரசன்னமானது சரீரத்தில் பார்க்கமுடியாத ஒரு மகத்தான தன்மையுடையது. இடிமுழக்கங்களும் மகாபலத்த எக்காள சத்தமும் உண்டானது. எக்காள சத்தத்துக்கு பாளையத்திலிருந்த மக்கள் பயத்தினால் வாயடைத்துப்போயினர். அவர்கள் சர்வவல்லவரின் பரிசுத்தத்தை மதித்து பயபக்தியுடன் அமைதி காத்தனர். முழு மலையும் உச்சி முதல் அடிவாரம்வரை அதிர்ந்தது. மக்கள் அதிசயித்தனர்.

இந்த காட்சி மிகவும் அற்புத மாகவும் பயங்கரமாகவும் இருந்தது. ஆனால் தேவன் இஸ்ரவேலரை நியாயந்தீர்க்க இந்த சீனாய் மலை மீது எழுந்தருளவில்லை. அவர்கள் மீது வேதனையான அழிவை அறிவிக்க வரவில்லை. மாறாக சீனாய் மலையின் உடன்படிக்கை மூலமாக அவர் அவர்களை அன்போடு நெருங்கி வந்தார். புகை, அக்கினி, மேகம், எக்காளம், மின்னல் மற்றும் இடி இவை யாவும் பரிசுத்தமும் சர்வ வல்லமையுள்ள தம்மை இஸ்ரவேல் மக்கள் யாவரும், பயபக்தியுடன் தொழுது கொள்ளவுமே தோன்றின. ஆம் தேவன் நம்முடைய எண்ணங்களுக்கும் மேலான மகத்துவமானவர்.

தேவனைத் துதிப்பது ஒவ்வொரு கிறிஸ்தவனுடைய கடமை. எனினும், அவருக்குப் பயந்து அவரை கனப்படுத்துவதே முதற் கடமையாகும். (எபி.12:28,29). இன்றே தேவனை மகிமைப்படுத்தி, அவருடைய பண்புகளுக்காக அவரைத் துதிப்போம்.

அதிகாலைப் பாடல்:
போற்றிடு ஆன்மமே, சிருஷ்டி கர்த்தாவாம் வல்லோரை;
ஏற்றிடு உனக்கு ரட்சிப்பு சுகமானோரை;
கூடிடுவோம், பாடிடுவோம் பரனை
மாண்பாய் சபையாரெல்லோரும்.

மொழியாக்கம்: Sis.அகஸ்டா மங்களதுரை

அனைத்துலக மொழிபெயர்ப்புப் பணிகள்

புனித வேதாகமத்தின் வரலாறு (மே-ஜுன் 2015)
அத்தியாயம்-9
சகோ.M.S.வசந்தகுமார்

மத்திய அமெரிக்க மொழிகளில் வேதாகமம்

டெளன் சென்ட் 1934 இல் வைக் கிளிப் முகாமை ஆரம்பித்தார். இம் முகாமின் நோக்கம், வேதாகமம் மொழி பெயர்க்கப்பட்டிராத கோத்திர மக்களது மொழிகளில் வேதாகமத்தை மொழி பெயர்ப்பதாகும்.

1946ஆம் ஆண்டு, டெளன்சென்ட் தென் அமெரிக்காவிலுள்ள பெரூ எனும் நாட்டுக்குச் சென்று 17 வருடங்கள் அங்கு ஊழியம் செய்துள்ளார். அதன் பின்னர், தென் அமெரிக்காவின் இன்னுமொரு நாடான கொலம்பியாவுக்குச் சென்றார். மத்திய மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் 50 வருடங்கள் பணியாற்றிய பின்னர் ரஷ்யாவுக்குச் சென்று அங்குள்ள மக்களது மொழிகளில் வேதாகமத்தை மொழிபெயர்க்கும் பணியை ஆரம்பிப்பதற்கான வழிவகைகளையும் டெளன்சென்ட் ஆராய்ந்தார். “தாய் மொழி வேதாகமமே உலகிலுள்ள மிகப் பெரிய மிஷனரி” எனும் கூற்றைப் பல சந்தர்ப்பங்களில் உபயோகித்த டெளன்சென்ட், உலகிலுள்ள எல்லா மொழிகளிலும் வேதாகமம் மொழி பெயர்க்கப்பட வேண்டும் என்பதைத் தன் வாழ்வின் இலட்சியமாகக் கொண்டு செயல்பட்டார்.

டெளன்சென்ட் முதன் முதலாக கெளத்தமாலாவில் மொழி பெயர்த்த கக்சிகுவெல் வேதாகமம், அம்மொழி பேசிய அநேகரை இரட்சிப்புக்குள் கொண்டுவந்துள்ளது. 1970இல், கெளத்தமாலாவிலுள்ள 17 கோத்திர மொழிகளில் வேதாகம மொழி பெயர்ப்பு வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அவ்வாண்டு வரை 7 கோத்திர மொழிகளில் புதிய ஏற்பாடு மொழிபெயர்க்கப்பட்டிருந்தது. மேலும் 11 கோத்திர மொழிகளில் வேதாகமப் பகுதிகள் இருந்தன. டெளன்சென்ட் ஆரம்பித்த வைக் கிளிப் முகாமின் அங்கத்தவர் எண்ணிக்கை படிப்படியாக உயர்வடைந்துகொண்டே சென்றது. 1994 ஆம் ஆண்டு மார்ச் மாதம், வைக் கிளிப் முகாமில் 5100 பேர் வேதாகம மொழி பெயர்ப்புகளில் ஈடுபட்டிருப்பதாகவும், இன்னும் 700 பேர் புதிய மொழிகளில் வேதாகமத்தை மொழி பெயர்ப்பதற்குத் தம்மைப் பயிற்றுவித்துக் கொண்டிருப்பதாகவும் கணிப்பிடப்பட்டுள்ளது.

டெளன்சென்ட் ஆரம்பித்த வைக் கிளிப் முகாமில் பிரபல்யம் பெற்ற மொழியியலாளராகக் கருதப்படுபவர் கென்னத் பைக் என்பவராவார். 1912 இல் பிறந்த இவர், 1935இல் வைக் கிளிப் முகாமில் பணியாற்றுவதற்காகச் சேர்ந்து மெக்சிகோ நாட்டில் வாழும் மிக்ஸ்டெக் எனும் கோத்திர மக்களிடம் சென்று, அவர்களது மொழியைக் கற்கத் தொடங்கினார். பைக் அம்மொழியை வெகு விரைவில் கற்றதை அறிந்த டெளன் சென்ட் அவரைத் தனது முகாமின் மொழியியல் ஆசிரியராக நியமித்தார். இதனால், ஒவ்வொரு வருடமும் கோடை காலத்தில் பைக், அர்க்கன் சஸ் எனுமிடத்திலிருந்த மொழியியல் கல்லூரிக்குச் சென்றுவந்தார். அதே சமயம், அவர் தனது மொழியியல் கல்வியையும் தொடர்ந்திட்டார்.

1941இல் மறுபடியுமாக மெக்சிகோவுக்குச் சென்ற இவர், பத்து வருடங்களின் பின் 1951இல் மிக்ஸ்டெக் கோத்திர மக்களது மொழிகள் ஒன்றில் புதிய ஏற்பாட்டை மொழி பெயர்த்தார். மெக்சிகோவிலுள்ள இன்னுமொரு கோத்திரமான செல்டால் எனும் கோத்திர மொழியில் வேதாகமத்தை மொழிபெயர்க்கும் வேலைகள் பில்பென்ட்லி என்பவரினால் ஆரம்பிக்கப்பட்டது. 1941 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இவருக்கும் மெக்சிகோவில் இன்னுமொரு கோத்திரத்தினர் மத்தியில் பணியாற்றிய மரியானா என்பவளுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

எனினும், அவ்வருடம் ஆகஸ்டு மாதம் பில் மரணமடைந்தார். அதன் பின்னர் பில்லினால் ஆரம்பிக்கப்பட்ட பணியைத் தொடர்ந்து செய்வதற்காகத் தன்னை அர்ப்பணித்த மரியானா, செல்டால் கோத்திர மக்கள் மத்தியில் ஊழியம் செய்யத் தொடங்கினாள். பல உபத்திரவங்களுக்கு மத்தியிலும் சுவிசேஷத்தை அறிவித்த மரியானாவினுடைய முயற்சியினால் 1000-த்திற்கும் அதிகமான செல்டால் கோத்திர மக்கள் கிறிஸ்தவர்களாகியிருந்தனர். மரியானா செல்டால் கோத்திர மொழியில் மொழிபெயர்த்த புதிய ஏற்பாடு 1956 இல் வெளிவந்தது. 1957 இல், மரியானா இன்னுமொரு கோத்திர மக்களது மொழியில் வேதாகமத்தை மொழிபெயர்க்கும் பணியை ஆரம்பிக்கச் சென்றாள்.

8 வருடங்களின் பின் மரியானா, பகாயொன் எனும் அக்கோத்திர மக்களது மொழியில் புதிய ஏற்பாட்டை மொழிபெயர்த்து வெளியிட்டாள். தனிமை, வியாதி, எதிர்ப்புகள், செளகரியமற்ற வாழ்விடம் என்பவற்றுக்கு மத்தியில், இரு மெக்சிகோ கோத்திர மொழிகளில் புதிய ஏற்பாட்டை மொழி பெயர்த்த மரியானா, அதன்பின் கொலம்பியாவிலுள்ள கோத்திர மொன்றின் மொழியில் புதிய ஏற்பாட்டை மொழிபெயர்க்கும் பணியை ஆரம்பித்தாள். மரியானாவைப் போல இன்னும் பல வைக் கிளிப் முகாம் மிஷனரிகள் மெக்சிகோ மக்கள் மத்தியில் ஊழியம் செய்துள்ளனர். 1970வரை, மெக்சிகோவிலிருக்கும் 90 கோத்திர மக்களது மொழிகளில் வேதாகமத்தின் பகுதிகள் மொழி பெயர்க்கப்பட்டிருந்தன. இவற்றில் 8 மொழிகளில் புதிய ஏற்பாடு முழுவதும் மொழிபெயர்க்கப்பட்டிருந்தது.

மத்திய அமெரிக்க நாடுகளில் உள்ள பலதரப்பட்ட கோத்திர மக்களது மொழிகளில் வேதாகமத்தை மொழிபெயர்ப்பதை நோக்கமாகக் கொண்டு உருவாகிய வைக்கிளிப் முகாமினது பணி இன்று மத்திய அமெரிக்காவுக்கும் அப்பால் முழு உலகுக்கும் சென்றுள்ளது. இன்று பல நாடுகளில் கிளைகளைக் கொண்டுள்ள வைக்கிளிப் முகாம், வேதாகம மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட்டுள்ள வேறு நிறுவனங்களுடனும் சேர்ந்து பணியாற்றுகிறது. 1994 ஆம் ஆண்டு மார்ச் மாதக் கணிப்பீட்டின்படி, வைக்கிளிப் முகாமைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர்கள் மொத்தம் 376 உலக மொழிகளில் புதிய ஏற்பாட்டை மொழிபெயர்த்துள்ளதோடு, தற்சமயம் 50 நாடுகளின் 943 கோத்திர மக்களது மொழிகளில் வேதாகம மொழிபெயர்ப்பு வேலைகளில் ஈடுபட்டுள்ளதை அறிகின்றோம். இதன்படி, வைக்கிளிப் முகாம் வேதாகம மொழிபெயர்ப்பாளர்கள் மொத்தம் 1319 மொழிகளில் தேவ வார்த்தையை மொழிபெயர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தென் அமெரிக்க மொழிகளில் வேதாகமம்

தென் அமெரிக்காவில் கொலம் பியா, வெனிசூலா, பொலிவியா, சிலி, பெரூ, அர்ஜன்டீனா, பிரேசில், உருகுவே, பராகுவே, போக்லன்ட், ஈக்குவெடோ எனும் நாடுகள் உள்ளன. மத்திய அமெரிக்காவைப் போலவே இங்கும் பலதரப்பட்ட கோத்திரங்களைச் சேர்ந்த மக்கள் வாழ்கின்றனர். வைக்கிளிப் முகாமைச் சேர்ந்த மிஷெனரிகள் இந்நாடுகளில் பலவற்றுக்குச் சென்று, அங்குள்ள மொழிகளைக் கற்று அம்மொழிகளில் வேதாகமத்தை மொழிபெயர்த்துள்ளனர். தென் அமெரிக்க நாடுகளுக்குச் சென்ற வைக்கிளிப் வேதாகம மொழி பெயர்ப்பாளர்களில் முக்கியமானவராகக் கருதப்படுபவர் ரேச்சல் செய்ன்ட் எனும் பெண்மணியாவார்.

வேதாகம மொழிபெயர்ப்பிலும் மிஷெனரிப் பணியிலும் இருந்த ஆர்வம் காரணமாக 1948இல் அமெரிக்காவிலுள்ள ஒக்லஹாமா எனுமிடத்திலிருந்த மொழியியல் கல்லூரியில் பயின்ற பின்னர் வைக் கிளிப் முகாமில் சேர்ந்த ரேச்சல், ஆரம்பத்தில் பெரூ நாட்டிற்குச் சென்று சிறிதுகாலம் ஊழியம் செய்தாள். பின்னர் 1955 இல் ஈக்கு வெடோ எனும் நாட்டுக்குச் சென்று அங்குள்ள கோத்திரங்களில் ஒன்றான ஒளக்கா இனரது மொழியைக் கற்கத் தொடங்கினாள். அக்கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு பெண் ரேச்சலுக்கு அவர்களுடைய மொழியைக் கற்பித்தாள். இக்கோத்திரமே அந்நாட்டிலுள்ள எல்லா கோத்திரங்களையும் விட பயங்கரமானதும் கொடூரமானதுமான கோத்திரமாக இருந்தது. ரேச்சலின் சகோதரனும் இன்னும் நான்கு மிஷெனரிகளும் இக்கோத்திரத்தினரால் கொல்லப்பட்டிருந்தனர். அப்படியிருந்தும் அக்கோத்திர மக்களுக்குத் தேவனுடைய வார்த்தையை அறிவிப்பதற்காக அவர்களுடைய மொழியை ரேச்சல் கற்றாள்.

இதன் பயனாக மாற்கு சுவிசேஷம் அக்கோத்திர மொழியில் மொழி பெயர்க்கப்பட்டது. ஆரம்பத்தில் மிஷனரிகளைக் கொன்றவர்களையும் ரேச்சல் கிறிஸ்துவுக்குள் கொண்டு வந்துள்ளாள். 1970இல் ஈக்கு வெடோ நாட்டின் ஏழு கோத்திர மக்கள் மத்தியில் வைக்கிளிப் முகாம் மிஷெனரிகள் பணியாற்றினர். மாற்கு சுவிசேஷம் அந்நாட்டின் நான்கு கோத்திர மக்களது மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டிருந்தது.

(தொடரும்)

வாசகர்கள் பேசுகிறார்கள்

(மே-ஜுன் 2015)

1. 2014ஆம் ஆண்டிற்குரிய வேதாகமத்தின் வாசிப்புப் பகுதிகளை அனுதினமும் கிறிஸ்துவுடன் புத்தக அட்டவணைப்படி முடித்துவிட்டேன். தற்சமயம் 2015க்குரிய தியான புத்தக அட்டவணைப்படி வாசிக்கிறேன். இப்படி வாசிப்பதினால் மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. வேதாகமத்தை நன்கு அறிந்துகொள்ள முடிகிறது. சத்தியவசன காலண்டர் கிடைத்தது. மிக்க நன்றி.

Mrs.Sarojini Moses, Dohnavur.

2. Greetings in the name of our Saviour Jesus Christ. I have enclosed here my contribution towards the subscription of the monthly Magazine, Anuthinamum Christhuvudan. This Magazine is very useful to us.

Mr.I.Gladson Stanley, Mumbai.

3. I receive all your books and Magazines. May God bless your Ministries and enlarge your territories. God bless you.

Mrs.Emy Mohandas, Chennai.

4. என் பெயர் ஹேமலதா. எனது தோழி வீட்டில் அனுதினமும் கிறிஸ்துவுடன் ஜனவரி மாத தியானங்களைப் படித்தேன். அந்தப் புத்தகம் நல்ல வழிகாட்டியாகவும், ஆறுதலாகவும் இருந்தது. அனுதினமும் வாசிப்பு அட்டவணைப்படி படிப்பதையும், வேதத்தை தியானிப்பதையும் பற்றி அறிந்துகொண் டேன். நான் வேதத்தை அதிகமாக கற்றுக்கொள்ள விரும்புவதால் எனக்கும் இந்தப் புத்தகத்தை அனுப்பித் தர கேட்டுக்கொள்கிறேன்.

Ms.HemaLatha, Karur.

5. சத்தியவசனம் சஞ்சிகை, அனுதினமும் கிறிஸ்துவுடன் தவறாமல் கிடைத்து வருகிறது. புத்துணர்ச்சியும் தேவனுடைய பெலனையும் பெற்று அகமகிழ்கின்றோம். வேதபாடமும் தின தியானமும் மிக அருமை. இதை தயாரித்து தொகுத்துகொண்டிருக்கும் ஊழியர்களுக்காக தினமும் ஜெபிக்கிறோம்.

Mr.Immaneul Gideon, Vellore.

6. I thank God for the Sathiyavasanam Ministries. I also thank God for enabling me to be a faithpartner in this ministries. I personally thank you for the Time table which helps me to read the word of God in an orderly manner and to complete the Bible within a year. I sincerely follow this ever since you have started this plan. I also enjoy reading the devotions everyday from Anuthinamum Christhuvudan which helps me grow spiritually feel the presence of God to walk closely with Jesus. I assure you of my continued prayers for the Sathiyavasanam Ministries. May God continue to bless all those who are involved in this Ministry.

Mrs.Nalini Stephenson, Vellore.

7. Greetings to you in His sweet name. Anuthinamumum Christhuvudan, the content passage is very consoling, thoughtful and fruitful. May God bless your Ministry.

Mr.R.S.A.Sundersingh, Tirunelveli.

page 1 of 2