ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 30 வெள்ளி
“.. கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது” (2நாளா.16:9) என்ற வாக்குப்படியே இம்மாதம் முழுவதும் தம் கண்ணை வைத்து நமக்கு ஆலோசனைத் தந்து, இரவும் பகலும் நம்மை தூங்காமல் பாதுகாத்த தேவாதிதேவனுக்கே எல்லா மகிமையையும் செலுத்துவோம்.
தேவதிட்டத்துக்காகப் பாடுபடல்
தியானம்: செப்டம்பர் 30 வெள்ளி; வேத வாசிப்பு: மத்தேயு 1:18-24
“அதற்கு மரியாள்: இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது என்றாள்” (லூக்கா 1:38).
தனது மிஷனரிப் பணியை முடித்துவிட்டு சொந்த நாட்டிற்கு திரும்பிய ஒரு ஊழியர், ஏராளமான மக்கள் மாலையோடு வரவேற்க காத்திருப்பதைக் கண்டு மிகவும் சந்தோஷப்பட்டார். ஆனால் அவரது அந்த சந்தோஷம் சற்று நேரத்துக்குத்தான். அங்கே தேசத் தலைவர் ஒருவர் வந்து இறங்கினார். மக்கள் மாலைகள் போட்டு அவரை வரவேற்றனர். இந்த ஊழியர் சோர்வடைந்தார். அப்போது, “நீ இன்னமும் உனது சொந்த வீட்டிற்கு வரவில்லை; வரும்போது அங்கே உனக்குப் பெரிய வரவேற்பும், ஜீவ கிரீடமும் உண்டு” என்ற சத்தம் அவர் உள்ளத்தில் கேட்டது.
தேவதிட்டத்தை அல்லது பணியைச் செய்ய முயற்சிக்கும்போது பலவிதமான உபத்திரவங்களை எதிர்கொள்ள நேரிடும். ஆனாலும் நமது நோக்கம் தேவதிட்டத்தை நிறைவேற்றுவதிலேயே இருக்கவேண்டுமே தவிர, துன்பங்களை நோக்கக்கூடாது. பிதாவின் சித்தத்தை நிறைவேற்ற இயேசு தம்மை ஒப்படைத்தபோது, இவ்வுலகில் வந்து பிறப்பதற்கு ஒரு தாயின் கர்ப்பம் தேவைப்பட்டது. அவரை வளர்ப்பதற்கு ஒரு பெற்றோர் தேவைப்பட்டனர். அதற்காக மரியாளும், யோசேப்பும் தங்களை அர்ப்பணித்தனர். அன்றிலிருந்து அவர்கள் எதிர்நோக்கிய பிரச்சனைகள் ஏராளம். திருமணமாகாதவள் கர்ப்பமுற்றதால் அவர்கள் அதிக பிரச்சனைகளுக்கு முகங்கொடுத்திருப்பார்கள். ஏரோதிற்குத் தப்பி குழந்தையோடு ஓடிப்போகவேண்டியதும் நேரிட்டது. ஆனால் அவர்கள் பிரச்சனைகளை அல்ல; தேவதிட்டத்தை நோக்கியே செயற்பட்டனர்.
நமது வாழ்வில் தேவன் கொண்டிருக்கிற நோக்கம், திட்டம் என்னவென்பதை அறிய நாம் முயற்சிக்கவேண்டும். அதை உணர்ந்தால்தான் அதற்காக நம்மை அர்ப்பணிக்கமுடியும். அர்ப்பணம் நேர்த்தியாகச் செய்யப்பட்டால், எதிர்ப்புகள் நமக்குப் பாரமாக இருக்காது. எதிர்ப்புக்களைப் பாராமல் தேவனை நோக்கிப் பார்த்து, அவரது பெலத்தைக்கொண்டு அவர் பணி செய்ய முன்வருவோமாக. மரியாள் யோசேப்பு தங்களைத் தேவதிட்டத்திற்காக அர்ப்பணித்தபோது, அந்த அர்ப்பணத்தில் உருவானதுதான் நாம் கொண்டாடி மகிழும் கிறிஸ்துமஸ். அதேபோல நாமும் தேவதிட்டத்தை நிறைவேற்ற அர்ப்பணத்துடன் செயற்படுவோமாக. பாடுகள் நேர்ந்தாலும் நமக்கு தேவனுடைய சித்தமே முதன்மையாக இருக்கட்டும்.
“முடிவுபரியந்தம் இடைவிடாமல் உம்முடைய பிரமாணங்களின்படி செய்ய என் இருதயத்தைச் சாய்த்தேன்” (சங்கீதம் 119:112).
ஜெபம்: அன்பின் தேவனே, எந்த துன்பம் நேரிட்டாலும் உமது சித்தம் செய்ய எங்களை உருவாக்கும்படியாக தேவகரத்தில் ஒப்புவிக்கிறோம். ஆமென்.
வாக்குத்தத்தம்: செப்டம்பர் 29 வியாழன்
இருமனமுள்ளவன் தன் வழிகளிலெல்லாம் நிலையற்றவனாயிருக்கிறான். (யாக்.1:8)
ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 29 வியாழன்
“..நான் வானத்தையும் பூமியையும் நிரப்புகிறவர் அல்லவோ என்று கர்த்தர் சொல்லுகிறார்” (எரேமி.23:24) சகல அதிகாரமுமுள்ள தேவன்தாமே அனைத்து மிஷனரி இயக்கங்களையும், மிஷனரிகளையும் ஆசீர்வதித்து, அனைத்து ஊழியத் தேவைகளையும் தமது பொக்கிஷசாலையாகிய வானத்தை திறந்து சந்திப்பதற்கும் ஜெபிப்போம்.
உபத்திரவத்தில் அமைதி
தியானம்: செப்டம்பர் 29 வியாழன்; வேத வாசிப்பு: ஏசாயா 53:1-12
“…அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப் போலவும், தன்னை மயிர்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார்” (ஏசா.53:7).
நாவு மிகச் சிறிய அவயவம்; ஆனால், அதை அடக்குவது கடினம். நரம்பில்லாத இந்த நாவு நாலாபக்கமும் பேசும். அதிலும் கஷ்ட துன்பமென்றால் இந்த நாவு என்னவெல்லாமோ பேசும்; மற்றவரையும் பேசவைக்கும்.
இயேசு அநியாயமாகத் துன்புறுத்தப்பட்டபோதும், அவர் தமது வாயைத் திறக்கவேயில்லை. ஏனெனில், அவர் தம்மைப் பிதாவின் சித்தத்திற்கு முழுமையாக ஒப்புக்கொடுத்திருந்தார். அவர் குற்றம் செய்து பாடனுபவிக்கவில்லை; நமது மீறுதல்களினிமித்தமே காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களின் நிமித்தமே நொறுக்கப்பட்டார். ஆனாலும், அதனை அவர் அமைதியாக ஏற்றுக் கொண்டார். நாம் இன்று வீண்பேச்சுப் பேசிக்கொண்டிருப்பது தகுமா? தாம் பட்ட பாடுகளின் பலன் அவருக்குத் தெரிந்திருந்தது. அதன் நோக்கம் பிதாவின் சித்தம் என்பதையும் அவர் அறிந்திருந்தார்.
நமது வாழ்வுக்கும் ஒரு நோக்கம் உண்டு. அது பிதா நம்மில் கொண்டிருக்கிற சித்தம்தான் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். ஆனால், உபத்திரவம் என்று எதைக் குறிப்பிடுகிறோம்? நாம் பாவஞ்செய்து ஏற்படுகின்ற துன்பத்தையா? நாம் பாவஞ்செய்து துன்பப்படுவது தேவசித்தமல்ல. ஆனால், நாமோ அப்படிப்பட்ட சமயங்களிலும், குற்றச்சாட்டை தேவனில் சுமத்திப் பேசுகிறோம்; அது தவறு. அடுத்தது, மெய்யாகவே கிறிஸ்துவின் சுவிசேஷத்தினிமித்தம் சில பாடுகளை நாம் சந்திக்க நேரிடும்போது, அல்லது சில தீர்மானங்கள் எடுக்கவேண்டிய சமயங்களில் தேவவார்த்தைக்கு முதலிடம் கொடுக்கும்போது நிச்சயம் இந்த உலகம் நம்மைச் சும்மாவிடாது. அப்படிப்பட்ட தருணங்களில் நமது பதிலுரை என்ன? கர்த்தரைச் சேவிப்பது விருதா என்போமா? அல்லது, பாடுகளானாலும் நமக்கு அருளப்பட்ட தருணத்துக்காய் தேவனுக்கு நன்றி சொல்வோமா? தேவபிள்ளைகளுக்கு உலகத்தில் உபத்திரவம் உண்டு என்று இயேசு கூறியுள்ளார். அதற்காக நாம் சோர்ந்துபோக வேண்டியதில்லை. ஏனெனில், “…திடன்கொள்ளுங்கள், நான் உலகத்தை ஜெயித்தேன்” (யோவா.16:33) என்று ஆண்டவர் நம்மைத் திடப்படுத்தியுள்ளார். ஆகவே, நீதியினிமித்தம் துன்பமோ, நமது குற்றத்தினிமித்தம் துயரமோ, எதுவானாலும் தேவகரத்தில் ஒப்புக்கொடுப்போம். அவர் நம்மை நடத்தட்டும்.
“நான் மவுனமாகி ஊமையனாயிருந்தேன், நலமானதையும் பேசாமல் அமர்ந்திருந்தேன். ஆனாலும் என் துக்கம் அதிகரித்தது” (சங்கீதம் 39:2).
ஜெபம்: ஆண்டவரே, நீதியினிமித்தம் நாங்கள் படும் துன்பங்களிலும், பாடுகளிலும் அமர்ந்திருந்து நீரே தேவன் என்பதை அறிந்துகொள்ள கிருபைச் செய்யும். ஆமென்.