ஜெபக்குறிப்பு: 2017 டிசம்பர் 12 செவ்வாய்

சத்தியவசன இலக்கிய ஊழியங்களை ஆசீர்வதித்த கர்த்தர் மறு அச்சுப் பதிப்பு செய்யப்படவேண்டிய புத்தகங்களுக்கான தேவைகளைச் சந்தித்திடவும், சத்தியவசன சஞ்சிகை, அனுதினமும் கிறிஸ்துவுடன் மாத இதழ்கள் குறித்த காலத்தில் பங்காளர்களுக்கு அனுப்பப்படுவதற்கான கிருபைகளைத் தந்தருளவும் பாரத்துடன் ஜெபிப்போம்.

உலகத்தாரல்ல

தியானம்: 2017 டிசம்பர் 12 செவ்வாய்; வேத வாசிப்பு: யோவான் 17:6-19

“நான் உலகத்தான் அல்லாததுபோல, அவர்களும் உலகத்தாரல்ல” (யோவான் 17:16).

இந்நாட்களில் கிறிஸ்து பிறப்பு கிறிஸ்தவர்களால் மாத்திரமல்ல, உலகம் முழுவதினாலும் கொண்டாடப்படுகிறது. ஆனால், கிறிஸ்து பிறப்பின் அர்த்தமானது உலகம் முழுவதுக்கும் அறிவிக்கப்படவில்லை. பிறப்பின் அர்த்தம் தெரியாதோரின் கொண்டாட்டத்துக்கும், கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் நாம் நினைவுகூரும் கிறிஸ்து பிறப்பின் கொண்டாட்டத்துக்கும் என்ன வித்தியாசம்? உலகத்தார் அர்த்தம் அறியாமல் கொண்டாடுகிறார்கள்; நாமோ அர்த்தம் அறிந்தும் அதை அசட்டை செய்து, உலகத்தோடு ஒத்து ஓடுகிறோம். இதிலே யார் பரிதாபத்திற்குரியவர்கள்?

கிறிஸ்துவும் இவ்வுலகத்தில் பிறந்து வாழ்ந்து மரித்து உயிர்த்தவரே. ஆனாலும், தாம் உலகத்தானல்ல என்று சொல்லுகிறார். காரணம் என்ன? அவர் உலகத்தில் வாழ்ந்திருந்தாலும், அந்த வாழ்வின் நோக்கம், பிதாவின் சித்தத்தை நிறைவேற்றுவதும், பிதாவுக்குப் பிரியமாய் வாழுவதுமேயாகும். இயேசு ஒருபோதும் உலகத்துக்கு ஒத்த வேஷம் போடவில்லை. எப்போதுமே தாம் வந்த நோக்கத்திலும், பாவக்கட்டுகளிலும் வியாதியின் அவஸ்தையிலும் இருந்த மக்களை விடுவிப்பதிலும், வார்த்தையைத் திடமாகப் பிரசங்கிப்பதிலுமே ஈடுபட்டிருந்தார். தேவனுடைய ராஜ்யமே அவருடைய மூச்சாயிருந்தது.

கிறிஸ்துவின் நாமத்தைத் தரித்தவர்களாய் வாழுகின்ற நாம், அவரது பரிசுத்த நாமத்துக்கு எந்நேரத்திலும் இழுக்கு வராமல் வாழவேண்டுமல்லவா! அவரது பிறப்பை நினைவுகூரும்போதும் இதை நாம் நினைவிற்கொண்டவர்களாய் நமது கொண்டாட்டங்கள் நடவடிக்கைகளை சரிவரத் திட்டமிட வேண்டியது அவசியம். நமது கொண்டாட்டங்கள் மற்றவர்களுக்கு கிறிஸ்து பிறப்பின் அர்த்தத்தையும் சந்தோஷத்தையும் புரியவைக்கும்படியாக இருக்கவேண்டுமே தவிர, வெறுப்பூட்டும்படியாக அமைந்துவிடக்கூடாது.

கொண்டாட்டங்களும் குதூகலங்களும் வாழ்வல்ல; நாம் எடுத்து வைக்கின்ற ஒவ்வொரு அடியையும் உலகம் பார்த்துக்கொண்டிருக்கிறது. நாம் உலகத்தில்தான் வாழுகிறோம்; வாழவேண்டும். அதற்காக உலகத்தோடு ஒத்தவர்களாய் வாழுவோமானால், நமது வாழ்வின் நோக்கத்தையே இழந்துவிடுவோம். நாம் இவ்வுலகில் வெறும் நாடோடிகள்; பரதேசிகள். நமது நித்தியமான பரம வீட்டிற்குச் செல்லுவதற்கு நம்மை ஆயத்தப்படுத்துவதோடு, பிறரையும் ஆயத்தப்படுத்தவேண்டிய மேன்மையான பொறுப்புள்ளவர்கள். அதை நினைந்து கிறிஸ்துவின் பிள்ளைகளாய் அவருக்கே சாட்சியாய் வாழுவோமாக.

“நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்” (ரோமர் 12:2).

ஜெபம்: அன்பின் தேவனே, நான் இவ்வுலகத்துக்கு உரியவனல்ல, உமக்கு உரியவன். நான் இவ்வுலகில் கிறிஸ்துவுக்கு சாட்சியாய் வாழ உதவியருளும். ஆமென்.