ஜெபக்குறிப்பு: 2017 டிசம்பர் 22 வெள்ளி

“அவர்மேல் நம்பிக்கையாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்” (சங்.34:8) இவ்வாக்குப்போல வேலைக்காக காத்திருக்கும் 16 நபர்களுக்கும் வேலையில் உயர்விற்காக காத்திருக்கும் 4 நபர்களுக்கும் இடமாறுதலுக்காக ஜெபிக்கும் 3 நபர்களுக்கும் நம்பிக்கையின் தேவன் அற்புதங்களைச் செய்திட ஜெபிப்போம்.

விடுதலையா! விமர்சனமா!

தியானம்: 2017 டிசம்பர் 22 வெள்ளி; வேத வாசிப்பு: யோவான் 9:6-27

“இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் குருடராயிருந்தால் உங்களுக்குப் பாவமிராது. நீங்கள் காண்கிறோம் என்று சொல்லுகிறபடியினால் உங்கள் பாவம் நிலைநிற்கிறது என்றார்” (யோவான் 9:41).

கிறிஸ்து பிறப்பை நினைவுகூரும் இந்நாட்களில், அவரது மீட்பைப் பெற்றிராதோர், மீட்பின் செய்தியைக்கூடக் கேட்டிராதோர் பலர் இன்னமும் இருக்கிறார்கள் என்பதையும் நாம் சிந்திக்கத் தவறக்கூடாது. அவர்களும் தேவ அன்பைக் கண்டு கொண்டு மீட்படையவேண்டுமென்று நம்மில் எத்தனை பேர் வாஞ்சிக்கிறோம். ஆலய நிகழ்வுகளுக்கு அதிமுக்கியத்துவம் கொடுக்கிற நாம் இதற்கு என்ன முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்று சற்று சிந்திப்போம். நிகழ்வுகள் தவறினால் கேள்வி கேட்கப் பலர் முன்நிற்பர்; ஆனால் இதைக் குறித்து யார் கேள்வி கேட்கிறார்கள்?

ஒரு பிறவிக்குருடனை இயேசு சந்திக்கிறார். உமிழ்நீரினால் சேறு உண்டாக்கி, அதை அவனுடைய கண்களில் பூசி, ‘போய் சீலோவாம் குளத்தில் கழுவும்படி’ சொன்னார். அவனும் அப்படியே செய்து பார்வை பெற்றுவிட்டான். பிறக்கும் போதே குருடனாயிருந்த ஒருவன் அதிலிருந்து விடுதலை பெற்றுக்கொண்டானே என்று சந்தோஷப்படுவதற்குப் பதிலாக, அவனுடைய கண்களை திறந்தது யார்? இந்த ஓய்வு நாளில் அதைச் செய்தது யார்? என்று எல்லோரும் தேடுகிறார்கள். இது அர்த்தமுள்ள தேடல் அல்ல; குற்றம்பிடிக்கும் தேடுதலாகும். அதிலும் மோசேயின் சட்ட திட்டங்களுக்கு விரோதமாகச் செயற்பட்டது யார்? என்று பரிசேயர் கொதித்தெழும்பினர். இப்படியான ஆராய்ச்சியே மேலோங்கிக் கிடந்ததே தவிர, விடுதலையாக்கப்பட்டது பெரிய காரியமாக யாருக்கும் தெரியவில்லை. விடுதலைக்குப் பதில் விமர்சனமே மேலோங்கியது. இந்த விமர்சனத்துக்குப் பயந்து அவனுடைய பெற்றோரும், ‘அவனையே கேளுங்கள்’ என்று தப்பித்துக்கொண்டனர்.

விடுதலையைக் குறித்து வியப்படைகின்ற ஒரு கூட்டம்; அதையே விமர்சிப்பது இன்னொரு கூட்டம். இவர்களில் நாம் யார்? இந்தக் கிறிஸ்துமஸ் காலங்களிலாயினும் நமது சிந்தனைகளை மாற்றிக்கொள்வோம். கிறிஸ்துவின் அன்பை அனைவரும் அறிந்துகொள்ளவேண்டுமென்று முதலில் உணர்ந்துகொள்வோம்; அதற்காகவே பிரயாசப்படுவோம். வருடாவருடம் நாம் நடத்தும் நிகழ்வுகளையும் அதன் செலவுகளையும் குறைத்து, வீண் விமரிசனங்களையும் விடுத்து, சுவிசேஷம் அறிவிக்க முன்செல்லுவோம். அதுவே தேவனுக்குப் பிரியமான கொண்டாட்டமாய் இருக்கும்.

“….மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்” (லூக்கா 15:7).

ஜெபம்: அன்பின் தேவனே, இக்கிறிஸ்துமஸ் நாட்களில் ஆடம்பர செலவுகளையும் அர்த்தமற்ற கொண்டாட்டங்களையும் வீண் விமர்சனங்களையும் விட்டுவிட்டு, பிறருக்கு நற்செய்தி அறிவிப்பதே எங்கள் பிரதான நோக்கமாயிருக்க வேண்டுதல் செய்கிறோம். ஆமென்.