Daily Archives: December 21, 2017

ஜெபக்குறிப்பு: 2017 டிசம்பர் 21 வியாழன்

“தேவனாலே எல்லாம் கூடும்” (மத்.19:26) இந்த வாக்கு பீஹார் மாநிலத்தின் மிஷனரி பணித்தளங்களில் நிறைவேறவும், மிஷனரிகளின் கல்லறை என்றழைக்கப்படும் அந்த மாநிலத்திலே சுவிசேஷத்திற்கு எதிரிடையாகவும் தடைகளாகவும் இருக்கிற ஒவ்வொருவரையும் கர்த்தர் இரட்சித்து அவர்கள் சுவிசேஷப்பணியைச் செய்கிறவர்களாக மாறுவதற்கும் ஜெபிப்போம்.

நன்மைக்கேதுவாக…

தியானம்: 2017 டிசம்பர் 21 வியாழன்; வேத வாசிப்பு: யோவான் 11:1-22

“அவன் வியாதியாயிருக்கிறதாக அவர் கேள்விப்பட்டபொழுது, தாம் இருந்த இடத்திலே பின்னும் இரண்டுநாள் தங்கினார்” (யோவான் 11:6).

தகாத முறையில் சொத்துக்களையும், நகைகளையும் சேர்த்து வைத்திருந்த ஒரு குடும்பத்தினரின் வீட்டில் கொள்ளையர்கள் புகுந்து, எல்லோரையும் கட்டிவைத்துக் கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர். அவர்களோ, “சகலத்தையும் நன்மைக்கேதுவாகச் செய்கின்ற ஆண்டவர் இதையும் அப்படியே செய்வார்” என்று மனதைத் தேற்றினர். அதற்கு அவர்களுடைய மகன், “அப்பா, இப்படிப் பணம் சம்பாதிக்கவேண்டாம் என்று சொல்லியும் நீங்கள் கேட்கவில்லை. இந்தப் பணம் நம் வீட்டில் இருக்கக்கூடாது என்று ஆண்டவர் நன்மைதான் செய்தார்” என்றான்.

இயேசுவுக்கு மிகவும் பிரியமான பெத்தானியா ஊர் குடும்பத்தில் இயேசுவுக்கு மிகவும் அன்பான லாசரு என்பவன் வியாதியாய் இருக்கிறான் என்ற செய்தி இயேசுவுக்கு வந்திருந்தது. இந்நேரத்தில் சாதாரணமாக எவரும் என்ன செய்வர்? தமக்கு அன்பானவர் சுகவீனமாக இருக்கிறார் என்றால் அல்லது ஏதாவது கஷ்டம் என்றால் உடனடியாகவே ஓடிச்சென்று அவரைச் சந்தித்து அவருக்கு ஆறுதலோ அல்லது வேண்டிய உதவிகளையோ செய்ய முயலுவர். இது இயல்பு. ஆனால் இயேசுவோ, லாசருவின் சுகவீனத்தைக் கேள்விப்பட்டும், இன்னமும் இரண்டு நாட்கள் தங்கியிருந்து பின்னர் புறப்பட்டுப்போனார் என்று வாசிக்கிறோம். ஏனென்றால், லாசருவின் மரணம் தேவனுடைய நாமத்தை மகிமைப்படுத்துகின்ற ஒன்று என்பதை அவர் அறிந்திருந்தார். ஆனால், இயேசுவின் தாமதத்திற்குரிய காரணத்தை வேறு எவரும் அறிந்திருக்கவில்லை. இதனால் மார்த்தாள் மரியாள் உட்பட எல்லோரும் தடுமாறி யிருப்பர். மார்த்தாள் அவரைச் சந்தித்த மாத்திரத்தில், “ஆண்டவரே, நீர் இங்கே இருந்தீரானால் என் சகோதரன் மரிக்கமாட்டான்” என்று சொன்னதாக வாசிக்கிறோம். தாம் தாமதித்ததற்காகவோ, லாசரு மரித்துவிட்டானே என்பதற்காகவோ இயேசு துக்கப்படவில்லை. சகோதரிகளின் துக்கத்தையும், கூட இருந்தவர்களின் துக்கத்தைப் பார்த்தே அவர் கண்ணீர்விட்டார். இறுதியில் லாசரு உயிருடன் எழுப்பப்பட்டபோது எல்லோரும் தேவனை மகிமைப்படுத்தினார்கள்.

அருமையானவர்களே, தாமதங்களும் நன்மைக்கு ஏதுவானவைதான். நமது ஜெபங்களுக்குப் பதில் தாமதமாகும்போது அதன் காரணத்தை நாம் அறியாவிட்டாலும் தேவன் அறிவார் என்ற நம்பிக்கை நமக்கு அவசியம். நாம் அவரில் உண்மையாகவே அன்புகூர்ந்து அவரையே நம்பி வாழும்போது, அவர் நமக்கு அனைத்தையும் நன்மைக்கு ஏதுவாக நிச்சயம் மாற்றுவார்.

“…அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கேதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்” (ரோமர் 8:28).

ஜெபம்: இரக்கத்தின் தேவனே, என் வாழ்வில் ஏற்படுகிற தாமதங்கள், தீங்குகள், பாடுகள் யாவையும் நன்மைக்கேதுவாய் நீர் முடியப்பண்ணுகிறபடியால் உம்மை துதிக்கிறோம். ஆமென்.

சத்தியவசனம்