Daily Archives: December 17, 2017

ஜெபக்குறிப்பு: 2017 டிசம்பர் 17 ஞாயிறு

“உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக” (லூக்.2:14) என்று பரம சேனையின் திரள் கர்த்தரைப் போற்றி புகழ்ந்ததுபோல இந்நாளிலும் அனைத்து இடங்களிலும் நடைபெறும் கிறிஸ்துமஸ் கீதாராதனைகள் சிறப்புற நடைபெற தேவன் கிருபை செய்ய ஜெபிப்போம்.

குறைவு என்ன?

தியானம்: 2017 டிசம்பர் 17 ஞாயிறு; வேத வாசிப்பு: மத்தேயு 19:16-20

“அந்த வாலிபன் அவரை நோக்கி: இவைகளையெல்லாம் என் சிறுவயதுமுதல் கைக்கொண்டிருக்கிறேன். இன்னும் என்னிடத்தில் குறைவு என்ன என்றான்” (மத்தேயு 19:20).

சில சபைக்கூட்டங்களில் பிரச்சனைகள் எழும்பும்போது, விவாதங்களும் தொடங்கும். அப்போது சிலர், “நான் பல வருடங்களாக இந்தச் சபையில் இருந்து உழைக்கிறேன். எனது மூதாதையர் எத்தனை தலைமுறைகளாக இச்சபையில் வழிபடுகிறார்கள்” என்று சொல்லி, தாங்கள் செய்த தவறுகளை மறைத்துவிட முயற்சிப்பதுண்டு. அல்லது, “நான் யாருடைய மகன் தெரியுமா? யாருக்கு நெருங்கிய இனத்தான் தெரியுமா” என்று சொல்லி, மற்றவர்களின் உருவத்துக்கு அல்லது பெயருக்குப் பின்னால் மறைந்துகொண்டு தப்பித்துக்கொள்ளப் பார்ப்பதுண்டு. இவர் களில் நாமும் ஒருவரா?

இயேசுவிடம் வந்த வாலிபனும் தான் சிறுவயதுமுதல் கற்பனைகளைக் கைக்கொண்டு வந்தவன் என்றும், இன்னமும் தன்னிடத்தில் என்ன குறை இருக்க முடியும் என்றும் கேட்கிறான். அவனிடத்தில் இருந்த குறைவை ஆண்டவர் சுட்டிக் காட்டியபோது, அதை ஏற்றுக்கொள்ள மறுத்தவனாய், தான் நினைத்தபடி காரியம் அமையவில்லை என்பதால் துக்கத்தோடே போய்விட்டான் என்று வாசிக்கிறோம். அவன் இயேசுவிடம் வரும்போது தன்னிடத்தில் ஒரு குறைவுமே இல்லையென்று எண்ணியவனாகவே வந்தான். அதனால்தான் அவனால் இயேசு காட்டிய குறைவை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

கற்பனைகளைக் கைக்கொண்டு வருவது நல்ல காரியம். தேவனுக்குப் பயந்து வாழ்வதும் நல்லது. ஆனால் தன்னைத்தான் உணர்ந்து, தன் குறைவை ஏற்றுக்கொண்டு, பாவத்திலிருந்து மீட்பைப் பெற்றுக்கொண்டு, தேவனுடைய கற்பனைகளின்படி வாழுவதே ஆண்டவர் விரும்புகின்ற வாழ்வு. தேவனுக்கு முன்பாக நாம் அனைவருமே குறைவுள்ளவர்கள். நம்மில் குறைவில்லையென்று நாம் சொன்னால் அது நம்மைநாமே ஏமாற்றிக்கொள்ளுவதாகவே இருக்கும். எனவே, நம்மில் உள்ள குறைவுகளை உணர்ந்து, தேவனிடம் அறிக்கைசெய்து, நம்மைத் திருத்திக்கொள்ள எப்போதுமே நாம் ஆயத்தமுள்ளவர்களாக இருக்கவேண்டும். மனந்திரும்புகிற ஒரே பாவியின் நிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும். அப்போது, என்னிமித்தம் பரலோகில் சந்தோஷம் உண்டாயிருக்கிறதா?

“நமக்குப் பாவமில்லையென்போமானால் நம்மை நாமே வஞ்சிக்கிறவர் களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது. நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால் பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியுமுள்ளவராயிருக்கிறார்” (1 யோவான் 1:8-9).

ஜெபம்: அன்பின் தேவனே, என் அறிவுக்கு எட்டாமல் ஏதாவது குறைவு என்னில் இருக்குமானால் அதை எனக்கு உணர்த்தியருளும். நான் மனந்திரும்பி வாழ எனக்கு உதவியருளும். ஆமென்.

சத்தியவசனம்