ஜெபக்குறிப்பு: 2017 டிசம்பர் 27 புதன்

“என் தாசனாகிய தாவீதின் சந்ததியையும் எனக்கு ஊழியஞ்செய்கிற லேவியரையும் வர்த்திக்கப்பண்ணுவேன்” (எரேமி.33:22) என்று வாக்குப் பண்ணின தேவன்தாமே சத்தியவசன அலுவலகத்திற்கு சொந்த இடம் ஒன்றை ஆசீர்வாதமாய் தந்தருள ஊழியங்களை ஆசீர்வதித்திட பாரத்துடன் ஜெபிப்போம்.

உணர்வுகளைப் புரிந்தவர்

தியானம்: 2017 டிசம்பர் 27 புதன்; வேத வாசிப்பு: யோவான் 11:28-45

“அவனை எங்கே வைத்தீர்கள் என்றார். ஆண்டவரே, வந்து பாரும் என்றார்கள். இயேசு கண்ணீர் விட்டார்” (யோவான் 11:34-35).

“அறுவை சிகிச்சைக்குப் பிறகு வேதனையோடு படுத்திருந்தபோது யாரோ என் தலையைத் தடவியதுபோல இருந்தது. சுற்று முற்றும் பார்த்தேன். யாரையும் காணவில்லை. ஆண்டவர் என் தலையைத் தொட்டிருப்பாரோ!” ஒரு தாயார் இப்படியாக தான் அனுபவித்ததை உணர்வோடு சொன்னபோது என்னால் அதை மறுத்துப்பேச முடியவில்லை. ஏனெனில் நமது ஆண்டவர் நமது உணர்வுகளைப் புரிந்துகொள்பவர் என்பது சத்தியம்.

லாசருவின் மரணத்தில் தேவநாமம் மகிமையடையும் என்பதை அறிந்தவராக இன்னமும் இரண்டு நாட்கள் தாமதமாகி வந்த ஆண்டவர், லாசரு உயிரோடெழுப்பப்பட்டதும் மார்த்தாள் மரியாளின் துக்கமெல்லாம் போய்விடும் என்று எண்ணவில்லை. சகோதரனின் பிரிவினால் தவித்துப்போயிருந்த அந்த இரண்டு சகோதரிகளின் உணர்வை ஆண்டவர் புரிந்துகொண்டிருந்தார். அவர்களோடு சேர்ந்து அவரும் கண்ணீர்விட்டார். தான் அன்பாக நேசித்த லாசருவின் மரணம் ஆண்டவரைக் கண்ணீர் விடச்செய்தது.

இந்த ஆண்டு முழுவதும் நமது அனுபவங்கள் பலவாறாக இருந்திருக்கலாம். ஆனால், ‘என்னைப் புரிந்துகொள்வார் யாருமே இல்லை’ என்று நினைக்கத்தக்க சந்தர்ப்பங்கள் மிகவும் வேதனையானது. ஆண்டவராகிய இயேசு நமது உணர்வுகளைப் புரிந்துகொள்கிறவர் என்பதை நாம் ஏன் மறக்கவேண்டும்! என்ன நிலைமையில் நாம் இருந்தாலும், எந்தச் சூழ்நிலையில் அகப்பட்டிருந்தாலும், தனிமையுணர்வில் தவித்துப்போயிருந்தாலும், எல்லா வேளைகளிலும் நமது உணர்வுகளைப் புரிந்துகொண்டு, நமக்குப் பக்க துணையாக இருக்கின்ற ஒரு நேசர் நமக்குண்டு. நாம் அவரோடு நடந்தால் அவர் நம்மோடு நடப்பார். அவரது வார்த்தைகளுக்கு நாம் செவிகொடுத்தால், நாம் கூப்பிடும்போது அவர் நமது குரலுக்குப் பதிலளிப்பார்.

ஆண்டவரோடு எவ்வளவுக்கு நாம் நெருக்கமான உறவில் இருக்கிறோமோ, அந்தளவுக்கு அவரும் நம்மோடு இருப்பதையும், நமது உணர்வில் அவர் கலந்திருப்பதையும் நம்மால் உணர்ந்துகொள்ளமுடியும். மார்த்தாள் மரியாளின் குடும்பத்தோடு ஆண்டவர் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார். அது அவருக்கு ஒரு அன்பான குடும்பமாக இருந்தது. அதனால் அவர்களது துக்கத்தை அவரால் உணரக்கூடியதாக இருந்தது. நமது உணர்வையும் அவர் அறிவார்; ஆதலால் நாம் துக்கத்தில் அமிழ்ந்துபோகவேண்டிய அவசியமே இல்லை. நம்முடன் கண்ணீர் விடுகிறவர், நமது கண்ணீரை துடைப்பார்.

“இதோ, அவர் என் அருகில் போகிறார், நான் அவரைக் காணேன். அவர் கடந்து போகிறார், நான் அவரை அறியேன்” (யோபு 9:11).

ஜெபம்: மனதுருக்கமுள்ள தேவனே, நீர் என்னை விசாரிக்கிறவராகவும் எங்கள் உணர்வுகளை அறிந்து எங்களுக்கு உதவி செய்கிறபடியாலும் உம்மை துதிக்கிறோம். ஆமென்.