ஜெபக்குறிப்பு: 2019 ஜனவரி 31 வியாழன்

கர்த்தர் எங்களுக்கு செய்தருளிள எல்லாவற்றிற்கும் தக்கதாகவும் … செய்த மகா நன்மைக்கு தக்கதாகவும் கர்த்தருடைய கிரியைகளையும் கர்த்தருடைய துதிகளையும் பிரஸ்தாபம் பண்ணுவேன் (ஏசா.63:7) என்ற வாக்குப்படி உண்மையுள்ள தேவன் இம்மாதம் முழுவதும் நம்மோடிருந்து நமக்கு அருளிச் செய்த சகல நன்மைகளுக்காகவும் உருக்கமான இரக்கங்களுக்காகவும் நன்றி செலுத்தி துதிப்போம்.

கர்த்தருக்குப் பயப்படும் பயம்

தியானம்: 2019 ஜனவரி 31 வியாழன் | வேத வாசிப்பு: சங்கீதம் 86:1-17

“கர்த்தாவே, உமது வழியை எனக்குப் போதியும், நான் உமது சத்தியத்திலே நடப்பேன்; நான் உமது நாமத்திற்குப் பயந்திருக்கும் படி என் இருதயத்தை ஒருமுகப்படுத்தும்” (சங்.86:11)

மனித வாழ்வில் பாவம் நுழைந்ததும் பயமும் நுழைந்து கொண்டது. பயம்தான் பொய்சொல்ல வைக்கிறது. பயம்தான் குற்றத்தை அடுத்தவன்மேல் சுமத்துகிறது. பயம், தேவனைவிட்டு விலக்குகிறது. பயம் மனிதனைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்லுகிறது. பயத்தினாலே மனிதன் அடுத்தவனைக் கொன்றுபோடுகிறான். பயம் அடுத்தவனுடைய வாழ்வையே தனதாக்க முனைகிறது. மொத்தத்தில் பயம் மனிதனை மனிதனாக வாழவிடுவதில்லை. இதிலிருந்து விடுதலை இல்லையா? சிலருக்கு இருளுக்குப் பயம்; சிலருக்கு வெளிச்சத்துக்கும் பயம். சிலருக்கு அமைதிக்குப் பயம்; சிலருக்குச் சந்தடிக்குப் பயம். இன்னும் சொல்லலாம். இவர்களுக்குள் நாம் எந்த ரக பயத்தைக் கொண்டிருக்கிறோம்? அதிலிருந்து நாம் வெளிவரவேண்டாமா?

இவற்றையெல்லாம் முறியடிக்க ஒரேயொரு வழி, ‘கர்த்தருக்குப் பயப்படும் பயம்’ நமக்குள் வளரவேண்டும். அவர் நமது அன்பின் பரம தகப்பன்; பின்னர் ஏன் நாம் அவருக்குப் பயப்படவேண்டும்? இது, அவர் நம்மைத் தண்டிப்பார் அல்லது அழிப்பார் என்ற பயம் அல்ல. மாறாக, கனத்துக்குரிய பயம். அண்டசராசரங்களையும் படைத்த கர்த்தருடைய வல்லமை, மாட்சிமை, மகிமை இவற்றை தியானிக்கும்போது, தலை வணங்காமல் இருக்க முடியாது. அந்த மரியாதையுடன் கூடிய பக்தியே கர்த்தருக்குப் பயப்படும் பயமாகும். அந்தப் பரிசுத்த பயம் நமக்குள் வேர்விடுமானால், நமது வாழ்வே மாறிவிடுமல்லவா! இந்தப் பயம், தேவ பிரசன்னத்தை உணரச்செய்கிறது. தீமை செய்யாதபடி எச்சரித்து, நன்மை செய்ய தைரியப்படுத்துகிறது. கர்த்தருக்குக் கீழ்ப்படியவும், அவரைப் பிரியப்படுத்தவும் நம்மை வழி நடத்துகிறது. இந்தப் பயத்தையே, தீமைக்குத் துணைபோகாத எபிரெய மருத்துவச்சிகளிடம் காண்கிறோம். பாவசோதனைக்கு இடங்கொடுக்காத யோசேப்பிடம் காண்கிறோம். மரணத்தைக் கண்டும் அஞ்சாத தானியேலிடமும் நண்பர்களிடமும் காண்கிறோம்.

கர்த்தருடைய சர்வவல்லமைக்குப் பயப்படுகிறவர்கள், உலக அதிகாரத்திற்குப் பயப்பட மாட்டார்கள். எந்த அதிகாரத்துக்கும் கர்த்தருக்குள்ளேயே கீழ்ப்படிவார்கள். சோதனையைக் கண்டு சோர்ந்துபோக மாட்டார்கள். அவர்கள் பாவத்தை வெறுப்பது, அகப்பட்டு விடுவோம் என்ற பயத்தினால் அல்ல. அவர்கள் தீமையை வெறுத்து நன்மை செய்வது, பிறரின் பாராட்டைப் பெறவேண்டும் என்பதற்காக அல்ல. எனவே, கர்த்தருக்கு மாத்திரம் பயந்து, அவரை மாத்திரம் பிரியப்படுத்த நம்மை அர்ப்பணிப்போமாக.

“கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; பரிசுத்தரின் அறிவே அறிவு” (நீதி.9:10).

ஜெபம்: அன்பின் கர்த்தாவே, வீண்பயங்களை உதறித் தள்ளி, உமக்குப் பயப்படும் பயத்தில் வளர என்னை தேவாவியானவர் கரத்தில் ஒப்புவிக்கிறேன். ஆமென்.

ஜெபக்குறிப்பு: 2019 ஜனவரி 30 புதன்

என் பெலன் ஒடுங்கும்போது என்னைக் கைவிடாமலும் இரும் (சங்.71:9) என்ற வாக்கைப் போலவே முதிர்ந்த வயதில் பல்வேறு பெலவீனங்களோடு இருக்கும் பங்காளர்கள் ஒவ்வொருவரையும் தேவன் தமது அளவற்ற அன்பினாலும் இரக்கத்தினாலும் பாதுகாத்து குடும்பத்தினரை கர்த்தரின் வழிகளில் உற்சாகப் படுத்துகிறவர்களாக அவர்கள் காணப்படுவதற்கு வேண்டுதல் செய்வோம்.

மரண பயம்

தியானம்: 2019 ஜனவரி 30 புதன் | வேத வாசிப்பு: 1கொரிந்தியர் 15:20-57

ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலை பண்ணும்படிக்கும் அப்படியானார்” (எபி. 2:15).

இந்தியாவின் சுதந்திரத்திற்காக அகிம்சா வழியில் போராடியவர்களை வெள்ளைக்காரருடைய படையினர் கைது செய்து, சிறையில் அடைத்து வைத்ததைக் கண்டு, பலர் பயத்தினால் போராட்டத்தைக் கைவிட்டுவிட்டு, பின்வாங்கத் தொடங்கினராம். இதைக் கண்ட காந்தியடிகள், பயத்தினால் பின்வாங்கியவர்களைத் தைரியப்படுத்துவதற்காக, அவரே ஒரு போராட்டத்தை அகிம்சா வழியில் முன்னின்று நடத்தி, கைது செய்யப்பட்டு, சிறைக்குச் சென்று, பின்னர் விடுவிக்கப்பட்டாராம். இதைக் கண்ணுற்ற மற்றவர்கள், “எங்கள் தலைவரே சிறைக்குச் சென்று திரும்பினாரே, அப்படியானால் நாம் ஏன் சிறைச்சாலையைக் கண்டு அஞ்சவேண்டும்” என்று தைரியத்துடன் மீண்டும் தங்கள் அகிம்சா வழிப்போராட்டத்தைத் தொடர்ந்ததாக ஒரு சம்பவம் உண்டு.

சாத்தானும் இதைப்போலவே ஒவ்வொரு மனிதனையும் “மரண பயம்” என்ற கட்டினால் அடிமைப்படுத்தி வைத்திருக்கின்றான். மரணத்தின் பின் நமக்கு என்ன நடக்குமோ என்ற அச்சமே நமக்கு மரணத்தைக்குறித்த பயத்தைத் தருகிறது. ஆனால் கிறிஸ்துவைத் தங்கள் வாழ்வில் ஏற்றுக்கொண்டவர்கள் மரணத்தைக் கண்டு அஞ்சுவது ஏன்? நம்முடைய தலைவராகிய இயேசுகிறிஸ்துவுங்கூட மரணத்தைச் சந்தித்தார். கிறிஸ்து தமது மரணத்தினால் நமக்குப் பாவ மன்னிப்பையும், நித்திய ஜீவனையும் மாத்திரமல்ல, மரண பயத்திலிருந்தும் விடுதலையையும் பெற்றுத் தந்துள்ளார். எப்படியெனில் முதலாவதாக, அவரது மரணம், நாம் ஆக்கினைத் தீர்ப்புக்கு நீங்கலாகி இரட்சிக்கப்படுகிறோம் என்ற தைரியத்தைத் தந்திருக்கிறது. இரண்டாவது, அவரது உயிர்த்தெழுதல், நாமும் மரணத்தின் பின் ஒருநாள் அவரைப்போல் உயிரோடு எழுந்திருப்போம் என்ற உறுதியைத் தந்திருக்கிறது.

கிறிஸ்துவின் உயிர்ப்பினால் மரணத்தின் கொடுக்கு, அதன் கூர் முறிக்கப்பட்டாயிற்று; அதன் விஷம் அகற்றப்பட்டாயிற்று. எனவே மரணம் நம்மைத் தீண்டலாம்; ஆனால் அது நம்மைப் பயமுறுத்தவோ தேவனிடமிருந்து நம்மைப் பிரிக்கவோ முடியாது. மரணம் நம்மைச் சந்திக்கலாம்; ஆனால் அது நம்மை அழிக்கவோ விழுங்கவோ முடியாது. ஏனெனில் விசுவாசியின் மரணம், வாழ்வின் முடிவல்ல; அது நித்திய வாழ்வின் ஆரம்பம்; விண்ணுலக வாழ்வுக்கான வாசல்; ஒரு கணப் பொழுதுக்கான நித்திரை. இந்தச் சத்தியமே மரண பயத்திலிருந்து நம்மை விடுவிக்கவும், மரணத்தை நம்பிக்கையோடு எதிர்நோக்கவும் நமக்குத் தைரியத்தைத் தருகிறது.

“கர்த்தருடைய பரிசுத்தவான்களின் மரணம் அவர் பார்வைக்கு அருமையானது” (சங்.116:15)

ஜெபம்: எங்கள் நம்பிக்கையின் தேவனே, நீர் மரணத்திலும் எங்களுக்கு தந்த ஜீவனுள்ள நம்பிக்கைக்காக உம்மை ஸ்தோத்தரிக்கிறோம். ஆமென்.