Daily Archives: February 1, 2019

வாக்குத்தத்தம்: 2019 பிப்ரவரி 1 வெள்ளி

நெருக்கப்படுகிற எளியவனுக்குத் திடனும் … வெயிலுக்கு ஒதுங்கும் நிழலுமானீர் (ஏசா.25:4)


கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரசன்னமாக்கி உனக்குச் சமாதானம் கட்டளையிடக்கடவர் (எண்.6:26).
யாத்திராகமம் 24-26 | மத்தேயு 22:23-46

ஜெபக்குறிப்பு: 2019 பிப்ரவரி 1 வெள்ளி

பரிசுத்த ஸ்தலத்திலும் வாசம் பண்ணுகிற நான், … நொறுங்குண்டு பணிந்த ஆவியுள்ளவர்களிடத்திலும் வாசம் பண்ணுகிறேன் (ஏசா.57:15).


கர்த்தருக்குள் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன் (பிலிப். 4:4) இப்புதிய மாதத்தை கர்த்தர் நமக்கு தந்திருக்கிறபடியால் கர்த்தரைத் துதிப்போம். பெரியவரும் மிகவும் புகழப்படத் தக்கவருமாயிருக்கிற தேவன் பெரிய காரியங்களை இம்மாதத்தில் நமக்குச் செய்ய வேண்டுதல் செய்வோம்.

கர்த்தர் கற்றுத்தந்த ஜெபம்

தியானம்: 2019 பிப்ரவரி 1 வெள்ளி | வேத வாசிப்பு: லூக்கா 11:1-4

நீங்கள் ஜெபம் பண்ணவேண்டிய விதமாவது…” (மத்தேயு 6:9).

சின்ன வயதிலே ஓய்வுநாட் பாடசாலையில் நாம் முதலில் மனனம் செய்த பகுதிகள் 23ம் சங்கீதமும், பரமண்டல ஜெபமுமே. அன்றிலிருந்து இந்த ஜெபம் நமக்கு நன்கு பழக்கமுள்ளதாகிவிட்டது. ஜெபிப்பதற்கு சோர்வாக இருந்தால், தூக்கம் கண்களை அழுத்தினால், வெகு சீக்கிரமாய் இந்த ஜெபத்தைக் கூறி ஜெபவேளையை முடித்துவிடுகிறவர்கள் இன்றும் இருக்கிறார்கள். என்ன ஜெபிக்கிறோம்? ஏன் ஜெபிக்கிறோம்? யாரிடம் ஜெபிக்கிறோம்? என்று எந்தவித சிந்தனையும் இருப்பதில்லை. ஆராதனைகளில் கூட, “இப்போது கர்த்தருடைய ஜெபத்தை அவரருளிய தைரியத்துடனே சொல்லக்கடவோம்” என்று கூறக்கேட்டதும், நாமும் கிளிப்பிள்ளை போல கூறி முடித்துவிடுகிறோம். அதையும் சத்தமாகக் கூறவும் தைரியமில்லை.

“நீங்கள் ஜெபம் பண்ணவேண்டிய விதமாவது…” என்று மத்தேயுவிலும், “நீங்கள் ஜெபம் பண்ணும்போது…” என்று லூக்காவிலும் எழுதப்பட்டிருப்பதைக் குறித்த தர்க்கங்களை விட்டுவிட்டு, கர்த்தர் கற்றுக்கொடுத்த இந்த ஜெபம் நமக்குக் கற்றுத்தருவது என்ன? அவர் நமக்குத் தெளிவுபடுத்துவது எது? இவற்றைக் கவனிப்போமானால், இந்த ஜெப வார்த்தைகளே நம்முடன் நிச்சயம் பேசும். சுவிசேஷக ஊழியர் ஒருவர் கூறியதொரு குறுநாடகத்திற்கான காட்சி இது. ஒரு வாலிபன் மேடையில் நிற்கிறான். களைத்துக் காணப்படுகிற அவன் படுக்கைக்குப் போகும்முன் ஜெபத்தின் ஞாபகம் வர முழங்காற்படியிடுகிறான். தூக்க மிகுதியால், பரமண்டல ஜெபத்தைக் கூறிவிட எண்ணி, “பரமண்டலங்களிலிருக்கிற என் பிதாவே” என்று ஆரம்பிக்கிறான். திடீரென ஒரு சத்தம் “மகனே, என்ன வேண்டும்?” யாரோ தன்னை குழப்புகிறார்கள் என்று எண்ணிய அவன் “நான் ஜெபிக்கிறேன். யாரும் என்னைத் தொந்தரவு செய்யவேண்டாம்” என்று கூறிவிட்டு, மறுபடியும் ஆரம்பித்தான். திரும்பவும், “மகனே நீ அழைக்கும் பிதா நானேதான். உனக்கு என்ன வேண்டும்?” என்று மறுபடியும் கேட்டது. இப்போது அவனுக்கு ஏதோ புரிய ஆரம்பித்தது. உள்ளத்தில் நடுக்கம் பிடித்தது. பரலோக பிதா தாமே தனது ஜெபத்திற்கு பதிலளிப்பதை உணருகிறான். அவனால், இப்போது ஜெபிக்கவே முடியவில்லை; வார்த்தையே வரவில்லை.

இது ஒரு கற்பனையென்றாலும், உண்மை இதுதான். பிதா நம் ஜெபத்தைக் கவனித்துக் கேட்கிறார் என்கிற உணர்வுடன் ஜெபிப்போமானால், நமது ஜெப நேரம் எத்தனை இன்ப நேரமாக மாறும். நமது ஜெப நேரம் எப்படிப்பட்டது?

“அவரோ வனாந்தரத்தில் தனித்துப்போய், ஜெபம் பண்ணிக் கொண்டிருந்தார்” (லூக். 5:16).

ஜெபம்: அன்பின் ஆண்டவரே, நாங்கள் செய்கின்ற ஒவ்வொரு ஜெபத்தையும், எங்கள் மனதின் எண்ணங்களையும் நீர் கேட்கிறீர் என்கிற உணர்வோடு காணப்படவும் ஜெப நேரம் இன்ப நேரமாக இருப்பதற்கும் வேண்டுதல் செய்கிறோம். ஆமென்.

சத்தியவசனம்