ஜெபக்குறிப்பு: 2019 பிப்ரவரி 25 திங்கள்

அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும்; அவன் கொம்பு மகிமையாய் உயர்த்தப்படும் (சங்.112:9) நம்முடைய பிரயாசங்களை மறவாத தேவன்தாமே சத்தியவசன வானொலி, தொலைகாட்சி ஊழியங்களை ஆதரவாளராக பங்காளராக இருந்து தாங்கிவரும் ஒவ்வொருவரது கைகளின் பிரயாசங்களிலும் உயர்வுகளையும் கனத்தையும் தந்தருள ஜெபம் செய்வோம்.

இழந்து கொடுப்போமா!

தியானம்: 2019 பிப்ரவரி 25 திங்கள் | வேத வாசிப்பு: யோபு 1:8-22

“இவையெல்லாவற்றிலும் யோபு பாவஞ் செய்யவுமில்லை, தேவனைப் பற்றிக்குறை சொல்லவுமில்லை” (யோபு 1:22).

வெளியூரிலே இறையியல் படிப்பை முடித்துகொண்டு, ஊழியத்துக்காக இலங்கை யாழ்நகர் சென்ற ஒரு குடும்பத்தினரின் வீடு, அவர்கள் அங்கு சென்ற பத்தாவது நாளிலே, கொள்ளையரால் சூறையாடப்பட்டது. மீண்டும் ஐந்து மாதங்களின் பின், ஊழிய வேலைகளுக்காக கொழும்பிற்கு வந்திருந்தபோது, அங்கேயும் அவர்களது சகல உடமைகளும் களவாடப்பட்டது. இதை அறிந்தபோது, தேவன்மேல் வருத்தப்படாவிட்டாலும், ‘ஏன் ஆண்டவரே?’ என்ற கேள்வியைப் பல மாதங்களாகக் கேட்டார்கள் என்பது உண்மை.

2004ஆம் ஆண்டு சுனாமிப் பேரலையில் அநேகரின் வாழ்வு, யோபுவின் வாழ்வைப் போலானது என்பது மறுக்க முடியாத உண்மை. அந்தச் சந்தர்ப்பத்தில் எத்தனை பேர் யோபுவைப்போல உண்மையாய் இருந்திருப்பார்கள் என்பது தேவனுக்கே வெளிச்சம். சாத்தானின் சோதனை அன்று யோபுவின் வாழ்விலும், சுனாமியைப்போல வந்தது. அதனால் உடமைகள், செல்வங்கள், மிருகஜீவன்கள், பிள்ளைகள் யாவரையும் ஒரே நாளில் இழந்துபோனான் யோபு. தேவனின் அனுமதியோடுகூட யோபுவுக்கு வந்த சாத்தானின் இந்த சோதனையில் யோபு பாவம் செய்யாதவராக, தேவனைக் குறைகூறாதவராக வாழ்ந்து காட்டினார். அன்று தனக்குப் பின்னே நடந்ததை அறியாதிருந்தும், யோபு, தேவனுக்காய் வாழ்வதில் தன்னைக் கொடுப்பதற்கு அவர் பின்வாங்கவில்லை.

எல்லா சுகங்களும் தாராளமாக இருக்கும்போது நமது உண்மைநிலை வெளித் தெரியாது. ஏதாவது ஒரு கஷ்டதுன்பம் வரும்போதுதான் நாம் தேவனுக்காக எவ்வளவு வைராக்கியமாய் இருக்கிறோம் என்பது தெரியவரும். தேவ அனுமதியோடு நாம் எதையாவது இழக்க இன்று தயாரா? எல்லாவற்றையும் இறுகப்பற்றிப் பிடித்துக்கொண்டு, தேவனும் அவர் ஆசியும் வேண்டும் என்கிறோம். எதையாவது ஒன்றை இழந்துவிட்டால் அல்லது ஏதாவது குறைகள், கஷ்டங்கள் வந்துவிட்டால், ‘ஐயோ, கிறிஸ்தவனாய் வந்ததாலேயே இத்தனை பாடுகளும் கஷ்டங்களும்’ என்று அழுது புலம்பி, மற்றவர்கள் மத்தியில் ஒரு காட்சிப் பொருளாய் மாறிவிடுகிறோம். நமது தேவன் நம்மை மீட்பதற்காய் தமது பரலோக மேன்மையைத் துறந்து, தனது ஜீவனையே கல்வாரிச் சிலுவையில் கொடுத்தார் என்பதை மறந்துவிடுகிறோம். அந்தக் கல்வாரி அன்புக்கு ஈடாக எதை இழக்கத் தயாராக உள்ளோம்? எதைத் தேவனுக்குக் கொடுக்கத் தீர்மானிக்கிறோம்? எதை இழந்தாலும், தேவனுக்காக வாழுவதில் நம்மைக் கொடுக்கத் தயாரா?

‘அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன்; குப்பையுமாக எண்ணுகிறேன்’ (பிலி. 3:11).

ஜெபம்: எங்களை இரட்சித்தவரே, பாவத்தினால் இழந்துபோயிருந்த எனக்காக கல்வாரி சிலுவையில் பலியானீர். என் வாழ்வின் எந்த இழப்புகள் மத்தியிலும் உம்மையே மகிமைப் படுத்தி வாழவும் என்னை அர்ப்பணிக்கிறேன். ஆமென்.