Daily Archives: February 2, 2019

ஜெபக்குறிப்பு: 2019 பிப்ரவரி 2 சனி

2019ஆம் ஆண்டில் சத்தியவசன தமிழ் வானொலி நிகழ்ச்சிகளை நற்செய்தி சொல்லப்பட்டிராத இடங்களில் உள்ள பல புதிய நேயர்கள் கேட்டு இரட்சிக்கப்படவும், தேனிலும் தெளிதேனிலும் மதுரமுள்ளதுமாயிருக்கிற கர்த்தருடைய வார்த்தை அவர்கள் இருதயங்களை சந்தோஷிப்பிக்க ஜெபிப்போம்.

ஆவிக்குள்ளாக ஜெபம் பண்ணு

தியானம்: 2019 பிப்ரவரி 2 சனி | வேத வாசிப்பு: மாற்கு 11:24-26

‘நீங்களோ பிரியமானவர்களே, உங்கள் மகா பரிசுத்தமான விசுவாசத்தின்மேல் உங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, பரிசுத்த ஆவிக்குள் ஜெபம் பண்ணி…” (யுதா 1:20).

இப்பகுதியில் யூதா இரண்டு அறிவுரைகளைத் தந்திருக்கிறார். ஒன்று, மகா பரிசுத்தமான விசுவாசத்தின்மேல் உறுதிப்படவேண்டும். பிதாவாகிய தேவன் தமது ஒரே பேறான குமாரனாகிய கிறிஸ்துவை நமக்காக ஈந்து, நம்மைப் பாவபிடியிலிருந்து விடுதலையாக்கினார். மறுபடியும், கிறிஸ்துவின் இரண்டாம் வருகையிலே, நாம் வெட்கப்பட்டுப் போகாதபடி, சகல சத்தியத்திலும் நம்மை வழிநடத்தி, கரைதிறை முதலானவைகள் அற்றவர்களாக நம்மைத் தம்மிடம் சேர்த்துக்கொள்வார். இதுவே நமது அடிப்படை விசுவாசம். இந்த விசுவாசம் இல்லையானால் நமது ஜெபங்களும் வீணே.

யூதாவின் அடுத்த அறிவுரையானது, அப்படியாக உறுதிப்பட்ட பின்பு, வெறுமனே வார்த்தைகளை உதிர்க்காமல், பரிசுத்தாவிக்குள் ஜெபிக்கச் சொல்கிறார். நமது சுய சித்தத்தின் பிரகாரம் ஜெபிப்பதற்கும், ஆவிக்குள்ளாக ஜெபிப்பதற்குமுள்ள வித்தியாசத்தை அனுபவித்துத்தான் உணர்ந்துகொள்ள வேண்டும். நேற்றைய நாடகம் தொடருகிறது. தன்னைப் பிதா கேட்டுக்கொண்டிருக்கிறார் என்பதை உணர்ந்ததும் அவனால் என்றும் சொல்கின்ற பரமண்டல ஜெபத்தைக் கூடச் சொல்ல முடியவில்லை. அவனுக்குள் ஒருவித திகில் உண்டாகிறது. தற்போது நிதானத்துடன் தொடருகிறான். ஒவ்வொரு வார்த்தையையும் உணர்வுடன் கூறுகிறான். திரும்பவும் “என் கடனாளிகளுக்கு நான் மன்னிக்கிறதுபோல என் கடன்களை எனக்கு மன்னியும்” என்ற வார்த்தை வந்ததும், அவனது ஜெபம் தடைப்படுகிறது. இவனுக்கு என்ன வந்தது? இவ்வார்த்தைகள் அவனது இருதயத்தைக் குத்திக் கிளறியது. ஜெபத்தை நிறுத்திவிட்டு, “ஐயா நான் பாவி” என்று கதறிக்கொண்டு தரையில் விழுகிறான். காட்சி முடிகிறது.

நாம் பரிசுத்தாவிக்குள்ளாக ஜெபிக்கும்போது, ஆவியானவர்தாமே நம் ஆவியுடன் இணைகிறார். அவர் நமது இருதயத்துக்குள் கிரியை செய்கிறார். “நீங்கள் ஜெபம் பண்ணும்போது, ஒருவன்பேரில் உங்களுக்கு யாதொரு குறை உண்டாயிருக்குமானால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா, உங்கள் தப்பிதங்களை உங்களுக்கு மன்னிக்கும்படி, அந்தக் குறையை அவனுக்கு மன்னியுங்கள்” என்றார் இயேசு. இந்த வார்த்தைக்குக் கீழ்ப்படியாமல் எப்படி நாம் பரமண்டல ஜெபத்தைக்கூடச் சொல்லலாம்? அதனை நமக்கு உணர்த்துபவர் பரிசுத்தாவியானவரே. ஆகவே, நமது ஜெப நேரம் மாயையாகி விடாதபடிக்கு, பரிசுத்தாவியானவருக்குள் ஜெபிக்கும்படிக்கு ஜாக்கிரதையாய் இருப்போம்.

எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம் பண்ணுங்கள் (எபே. 6:18).

ஜெபம்: அன்பின் பிதாவே, நாங்கள் ஜெபிக்கும்போது பரிசுத்த ஆவிக்குள்ளாக ஜெபிப்ப தற்கும் உணர்த்தப்பட்ட குறைபாடுகளை சரி செய்வதற்கும் உமது கிருபை தாரும். ஆமென்.

சத்தியவசனம்