ஜெபக்குறிப்பு: 2019 பிப்ரவரி 14 வியாழன்

சத்தியவசன வெப் டிவி, வெப் சைட், வாட்ஸ்அப், குறுஞ்செய்தி ஆகிய ஊழியங்களை கர்த்தர் ஆசீர்வதித்து, பிரச்சனைகளோடும் போராட்டங்களோடும் உள்ள மக்கள் இவ்வூழியத்தினாலே நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய தயையையும் கர்த்தருடைய அன்பையும் அறிந்துகொண்டு கிறிஸ்துவில் வளரவும் ஜெபிப்போம்.

ஒப்புக்கொடுத்தல்

தியானம்: 2019 பிப்ரவரி 14 வியாழன் | வேத வாசிப்பு: ரோமர் 6:6-19

“நீங்கள் உங்கள் அவயவங்களை… நீதிக்குரிய ஆயுதங்களாகத் தேவனுக்கு ஒப்புக்கொடுங்கள்” (ரோமர் 6:13).

கொடுத்தல்; இது சற்றுச் சங்கடமான விஷயம்தான். அதிலும் ‘தேவனுக்குக் கொடுத்தல்’ என்பது கிறிஸ்தவர்கள் நமக்கு மிக முக்கிய காரியம். தேவனுக்காக, அவருடைய ஊழியங்களுக்காகத் தாம் தாராளமாகக் கொடுப்பதாகத் தாங்களே தங்களைப் பெருமை பாராட்டுகிறவர்கள் அநேகர். அல்லது, உள்மனதில் அப்படியான ஒரு எண்ணத்தோடிருப்பவர்களும் உண்டு. ‘தேவனுக்குக் கொடுத்தல்’ என்பது பணத்தில் மாத்திரம் தங்கியுள்ளதா? அல்லது, எனக்குள்ளதை, அதிலும் மேலாக என்னையே தேவனுக்கென்று முழுமையாகக் கொடுப்பதில் தங்கியுள்ளதா? உங்கள் சிந்தனைக்காக இந்தக் கேள்விகளை உங்கள் முன் வைக்கிறோம்.

‘கொடுத்தல்’ என்பது இருவகைப்படும். முதலாவது, ஒரு கோழி தனது முட்டைகளைக் கொடுப்பது போன்றது. மற்றது, கோழி தனது இறைச்சியைக் கொடுப்பது போன்றது. கோழி தான் தானாகவே இருந்துகொண்டு முட்டைகளை மாத்திரம் இட்டு பிறருக்குக் கொடுக்கிறது. ஆனால், அந்தக் கோழியே தனது இறைச்சியைக் கொடுக்கவேண்டுமாயின், அது தன்னையே முழுமையாகக் கொடுக்கவேண்டும். அதேபோல நாம் நாமாகவே இருந்து கொண்டு, நமக்கு விருப்பமானதை, நினைக்கும் வேளையில் நமது விருப்பம்போல தேவனுக்குக் கொடுக்கலாம், விடலாம். அல்லது, என்னையே முழுமையாகத் தேவனுக்கு அர்ப்பணித்து, அதன் அடிப்படையில் எனது அனைத்தையுமே நான் கொடுக்கலாம். நாம் தேவனுக்குக் கொடுப்பது எந்த வகையில் அடங்குகிறது? நமக்குப் பிரியமானபடி கொடுக்கிறோமா? அல்லது, நமக்குத் தாக்கங்கள் ஏற்பட்டாலும்கூட தேவனுக்குப் பிரியமானதையே கொடுக்கிறோமா? கொடுப்பது அல்ல, அதை எப்படிப்பட்ட மன எண்ணத்தோடு கொடுக்கிறோம் என்பதே மிகவும் முக்கியமானது.

‘நீதிக்குரிய ஆயுதங்களாக, உங்கள் சரீரத்தின் அவயவங்களைத் தேவனுக்கு ஒப்புக்கொடுங்கள்’ என்று பவுல் எழுதுகிறார். பாவத்தினின்று நம்மை மீட்கும்படி தம்மைப் பலியாக ஒப்புக்கொடுத்த ஆண்டவருக்கு நமது உள்ளத்தில் இடமளித்தால் போதுமென்றிருக்கிறோமா? தம்மை நமக்காக முழுமையாக ஒப்புவித்தவருக்கு நம்மை முழுமையாகக் கொடுக்க, அவரோடேகூட சிலுவையில் அறையப்பட நாம் நம்மை அர்ப்பணிக்க வேண்டாமா?

“…நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு …வேண்டிக்கொள்ளுகிறேன். இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை” (ரோமர் 12:1).

ஜெபம்: அன்பின் தகப்பனே, எங்களை ஜீவபலியாக உமக்கு ஒப்புவிக்கிறோம். எங்களை ஏற்றுக்கொள்ளும். ஆமென்.