வாக்குத்தத்தம்: 2020 மார்ச் 1 ஞாயிறு

தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும் (சங்கீதம் 51:10).


இந்தப் பாத்திரம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற என்னுடைய இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது. (லூக்.22:20)
எண்ணாகமம் 15,16,17 | மாற்கு 08:01-21

ஜெபக்குறிப்பு: 2020 மார்ச் 1 ஞாயிறு

முழு இருதயத்தோடும் கூப்பிட்டேன், கர்த்தாவே, என் ஜெபத்தைக் கேளும்; உம்முடைய பிரமாணங்களைக் கைக்கொள்ளுவேன் (சங்.119:145)


அவர் தமது சிறகுகளாலே உன்னை மூடுவார்; அவர் செட்டைகளின் கீழே அடைக்கலம் புகுவாய் (சங்.91:4) கர்த்தருடைய செட்டைகளின் கீழ் அடைக்கலமாய் வந்திருக்கும் நம் ஒவ்வொருவர்மேலும் தேவனுடைய பாதுகாப்பு காணப்படவும், இம் மாதத்தின் கைப்பிரயாசங்களை கர்த்தர் ஆசீர்வதிக்கவும் மன்றாடுவோம்.

அவரை அறிந்திருக்கிறேனா?

தியானம்: 2020 மார்ச் 1 ஞாயிறு | வேத வாசிப்பு: ஏசாயா 44:1-8

நான் முந்தினவரும், நான் பிந்தினவருந்தானே; என்னைத் தவிர தேவன் இல்லையென்று, …. சேனைகளின் கர்த்தராகிய அவனுடைய மீட்பரும் சொல்லுகிறார் (ஏசா.44:6).

“நான்தான் உன் அப்பா; இவள்தான் உன் அம்மா” என்று சொல்லிக் கொடுத்தா குழந்தை, “அம்மா, அப்பா” என்று தன் பெற்றோரை அழைக்கிறது? குழந்தை தன்னைத்தானே அறிந்துகொள்ளாத பருவத்திலேயே, தன் தாயின் முகத்தை மாத்திரமே பார்த்து புன்னகை பூக்குமே, அது யார் சொல்லிக்கொடுத்தது? தன் அம்மா அப்பாவைத்தவிர வேறு யார் கூப்பிட்டாலும் முகத்தைத் திருப்பிக்கொண்டு தன் தகப்பன் கழுத்தை இறுகக் கட்டிப்பிடிக்கும் குழந்தைக்கு அந்த அறிவு எங்கிருந்து வந்தது? இப்படியிருக்க, நமது பெற்றோருக்குப் பிள்ளைகளாய் நம்மை உருவாக்கிய தேவனைமட்டும் நாம் அடையாளங் காணுவதற்கு ஏன் அவதிப்படுகிறோம்?

400 ஆண்டுகள் அடிமையாயிருந்த இஸ்ரவேல் தன் அடையாளத்தையே மறந்திருந்தது. ஆனால், இதெல்லாம் ஆபிரகாமுக்கு முன்சொன்னபடியேதான் நடந்தது. தாமே தேவன் என்றதொரு மகா சத்தியத்தின் சாட்சியாகவே கர்த்தர் இஸ்ரவேலை அழைத்திருந்தார். அப்படிப்பட்டவர் அவர்களை மறப்பாரா? ஏற்ற காலத்தில் அவரே அவர்களை விடுவித்து, வாக்குப்படியே எல்லாவற்றையும் ஜெயமாக முடித்தார்.  “இஸ்ரவேலின் ராஜா”  என்றும், அவர்களுடைய யுத்தங்களிலெல்லாம் ஜெயம் கொடுத்த  “சேனைகளின் கர்த்தர்”  தாமே என்றும் எத்தனை தடவைதான் தேவன் இஸ்ரவேலுக்கு உணர்த்துவது!  “உன் நெருக்கங்களில் பயப்பட வேண்டியதில்லை. நீ கலங்காதிரு. அக்காலம் தொட்டு உன்னை நடத்தின நானே முந்தினவர், நானே இருக்கிறவர். நானே பிந்தினவர்”  என்றெல்லாம் எத்தனை தடவைதான் சொல்வது! இஸ்ரவேலோ அடிக்கடி அந்நியரை நாடியும், பாதுகாப்புக்கு அலைந்தும், தன் தேவனைவிட்டு அடிக்கடி சோரம் போனதையே காண்கிறோம்.

அன்று இஸ்ரவேல் காணாத பெரிய இரட்சிப்பை, இன்று நாம் பெற்றிருந்தும், ஆண்டவரே தம்மை நமக்கு வெளிப்படுத்தியிருந்தும், நாமும் அவருக்கு எதிராக கலகம் பண்ணலாமா? பிரச்சனைகள் வரும்போது பின்வாங்கலாமா? நாம் ஆண்டவரின் பிள்ளைகள் என்றால் அவரைக்குறித்து நாம் வெட்கப்பட வேண்டியதென்ன? தருணங்களில் அவரைக் காட்டிக்கொடுப்பதும் ஏன்? உலகம் நம்மை உதைத்தாலும்,  “நான் இயேசுவின் பிள்ளை”  என்று தைரியமாக மார்தட்டும் நாள் ஒன்று வரும். அன்று நாம் வெட்கப்படாதிருக்க, இன்று நாம் தைரியமாய் தேவனை அறிக்கை செய்யலாமே!

நான், நானே உன் மீறுதல்களை என் நிமித்தமாகவே குலைத்துப் போடுகிறேன். உன் பாவங்களை நினையாமலும் இருப்பேன் (ஏசா. 43:25).

ஜெபம்: என் பரம தகப்பனே, நான் உம்முடைய பிள்ளையென்பதைக் குறித்து வெட்கப்படாமல் எந்த இடத்திலும் தைரியமாய் அறிக்கையிட எனக்குக் கிருபை தாரும். ஆமென்.

விசுவாசத்தின் சோதனை!

அதிகாலை வேளையில்… (மார்ச்-ஏப்ரல் 2020)
– Dr.உட்ரோ குரோல்

வேதபகுதி: யோபு 24: 1-25


கொலைபாதகன் பொழுது விடிகிறபோது எழுந்து, சிறுமையும் எளிமையுமானவனைக் கொன்று இராக்காலத்திலே திருடனைப்போல் திரிகிறான். (யோபு 24:14)


நீண்ட சோதனை காலத்தில் யோபுவின் சிந்தனையை ஆழமாக ஒரு காரியம் ஆக்கிரமித்துக்கொண்டிருந்தது. மனிதர் அனைவரும் பாவிகள் என்றும் தேவனுடைய நீதியுள்ள தண்டனைக்கு உரியவர்கள் என்பதையும் அவர் நன்கு அறிந்திருந்தார். எனவே பாவத்தைப் பற்றிய உணர்வை வெளிப்படையாகத் தெரிவித்தார். தினமும் தேவனுக்கு பலி செலுத்திவந்ததுடன் தேவனுக்குப் பிரியமானதாக தனது வாழ்வையும் அமைத்திருந்தார். யோபுவின் மறைமுகப் பாவங்களின் விளைவே அவருடைய துன்பங்களுக்குக் காரணம் எனவும், அதை அறிக்கையிட்டால் தேவன் அவரது பாடுகளிலிருந்து விடுதலை அளிப்பார் என்றும் அவருடைய மூன்று நண்பர்களும் ஆலோசனை கூறினர். ஆனால் தன்னிடத்தில் மறைமுகப் பாவம் எதுவும் இல்லை என்றும் தனது பாடுகளுக்குக் காரணம் தன்னுடைய தேவபக்தியே என யோபு ஆழமாக நம்பினார். அவருடைய மனம் குழப்பத்தில் இருந்ததேயொழிய வெளிப்படையான பாவத்தால் முறிந்து போகவில்லை.

மனிதனுடைய அறிவீனமான மனதைப் பற்றிய யோபுவின் அறிவு இறையியலைப் பொறுத்து சரியானதே. தேவனிடமிருந்து பாவத்தை மறைக்க முடியாது என்பதை அவர் நன்கு அறிந்திருந்தார். தகப்பனில்லாத பிள்ளைகளின் சொத்துக்களைப் பறிமுதல் செய்வது, ஏழைகளுக்கு இரங்காமல் இருப்பது, காட்டுக்கழுதைகள்போல அதிகாலமே எழுந்து சிறுமையும் எளிமையுமானவனைக் கொன்று, ஒருவரும் அதனைக் காணவில்லை என்று எண்ணுவதே மனிதனுடைய கேடான மனம் (யோபு 24:14). விடியுங்காலமும் அவர்களுக்கு மரண இருள் போல் இருக்கிறது (யோபு 24:17).

ஏனெனில் இரவின் இருளில் அவர்கள் செய்திருந்த தீயகாரியங்களை சூரிய உதயமானது வெளிச்சத்துக்குக் கொண்டுவருகிறது. தான் இவ்விதமாய் நடந்துகொள்ளவில்லை என்பதை யோபு நன்கு அறிந்திருந்தார். தீயவர்களை தேவன் பாடுகளால் தண்டிப்பார்; ஆயினும் நீதிமான்களும் அதே விதமாய் துன்பப்படுவதன் காரணத்தை அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை. யோபு தேவனுக்கு முன்பாக உத்தமனாகவும் சன்மார்க்கனாகவும் வாழ்ந்து வந்தார். ஆயினும் அவர் இத்துன்பங்களை அனுபவிக்க தேவன் ஏன் அனுமதித்தார்? இது அவருக்கும் ஒரு புதிராக இருந்தது.

இந்தியாவுக்கு அருட்பணியாளராக வந்த வில்லியம் கேரியின் வாழ்விலும் இதைப் போன்ற ஒரு சூழ்நிலை வந்தது. அவர் தனது பணியை அரம்பித்தவுடன், அதற்கு உதவும்படி இங்கிலாந்தில் அவருடைய ஆதரவாளர்கள் ஓர் அச்சுப்பொறியை அனுப்பி வைத்தனர். அதன் விளைவாக இந்தியாவில் வினியோகிப்பதற்காக பரிசுத்த வேதாக மத்தின் சில பகுதிகளை அச்சடிக்க ஆரம்பித்தனர். ஒருநாள் அவர் வெளியூர் சென்றிருக்கும் காலத்தில் ஏற்பட்ட ஒரு பயங்கர தீ விபத்தில் கேரியின் சாதனைகள் அனைத்தும் எரிந்து சாம்பலானது. அக்கட்டிடம், அச்சகம், வேதாகமங்கள், அவர் அநேக ஆண்டுகளாக பிரயாசப்பட்டு எழுதிய கையெழுத்துப் பிரதிகள், இலக்கணங்கள் மற்றும் அகராதிகள் யாவும் எரிந்து அழிந்தன. ஊருக்கு திரும்பிய கேரியிடம் அவருடைய உதவியாளர் சந்தித்து அப்பயங்கர தீ விபத்து செய்தியைக் கண்ணீருடன் கூறினார்.

அதனைக் கேட்ட கேரி கோபப்படவோ மன சஞ்சலமடையவோ இல்லை. மாறாக அவர் முழங்காற்படியிட்டு தேவனுக்கு நன்றி கூறினார். அக்காரியங்கள் அனைத்தையும் மீண்டும் செய்யும் பெலன் தனக்கு இருப்பதற்காக தேவனைத் துதித்தார். தன்னுடைய இழப்புகளையே எண்ணிக் கலங்காமல் உடனடியாக அவ்வேலைகளை மீண்டும் ஆரம்பித்தார். தேவ ஆவியானவருடைய வழிகாட்டுதலின்படி தனது வாழ்க்கை முடியுமுன்பதாக அவர் தன்னுடைய சாதனைகளை மறுபடியும் எழுதி முடிக்கவும், பழையவற்றைவிட சிறப்பான இலக்கணங்கள், அகராதிகள் மற்றும் வேதாகம மொழி பெயர்ப்புகளை விரைவில் வெளிக்கொணர்ந்தார்.

யோபு கற்றுக்கொண்டவற்றை வில்லியம் கேரியும் கற்றுக்கொண்டார். இரகசிய பாவத்தினால் மட்டுமே அழிவு வருவது கிடையாது. சில நேரங்களில் பக்தியற்றவர்களைப் போலவே பக்தியுள்ளவர்களும் துன்புற தேவன் அனுமதிக்கிறார். நம் விசுவாசத்தின் சோதனை பொறுமையை உண்டாக்குகிறது. யோபுவின் உபத்திரவங்களே அவருக்கு பொறுமையைக் கற்றுக்கொடுத்தது; நமக்கும் அக்காரியம் ஆறுதலை அளித்து வருகிறது.

நம்முடைய வாழ்வில் நேரிடும் அனைத்து பேரிடர்களையும் தைரியம் மற்றும் பொறுமையுடன் எதிர்கொள்ளுவோமாக. பாவத்திலிருந்து விடுதலைபெற்ற ஒரு வாழ்வை நடத்தி “ஆனாலும் நான் போகும் வழியை அவர் அறிவார்; அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன்” என்று யோபு பக்தனுடன் சேர்ந்து கூறுவோம் (யோபு 23:10).


அதிகாலைப் பாடல்:

என்னை நம்புவோர்க்கு உண்மையாக இருப்பேன்;
என்னை நேசிப்போர்க்கு பரிசுத்தமாய் இருப்பேன்;
உபத்திரவங்கள் மத்தியில் திடமாய் இருப்பேன்;
சவால்களை சந்திக்க தைரியமாய் இருப்பேன்.

மொழியாக்கம்: Mrs.அகஸ்டா மங்களதுரை

வாசகர்கள் பேசுகிறார்கள்

(மார்ச்-ஏப்ரல் 2020)

[01]
கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதரருக்கு, தங்களின் சத்திய வசனப் புத்தகம் மிகுந்த ஆறுதலைத் தருகிறது, எனக்கு பத்திக்கை அனுப்புங்கள். அடுத்த மாத முதல் சந்தா அனுப்புகிறேன்.

Sis.Mary Jeba, Madurai.


[02]
Dear Brother in Christ, Thank you all for sending so systematically, the magazines and your faithful prayers to win us all for his kingdom. Dr.Pushparaj message on the sathiyavasanam TV recently about observing the holy communion was a real teaching. We can only thank God for this beautiful sathiyavasanam ministry .

Mrs.Usha Prasad, Bangalore.


[03]
சத்திய வசன வானொலி நிகழ்ச்சி கேட்டேன். தெளிவாக இருந்தது. டாக்டர் தியோடர் வில்லியம் அவர்களின் வேத ஆராய்ச்சி ஆசீர்வாதமாக இருந்தது நன்றி.

Mr.Chidambaram, Bangalore.


[04]
அன்பான சகோதரருக்கு, அனுதினமும் கிறிஸ்துவுடன் நவம்பர் 25ந்தேதி திங்கள் தியானப் பகுதி “பாடுகளும் பயன்களும்” என்ற தலைப்பில் வந்த செய்திகள் மிகவும் (அருமையாகவும்) நன்றாக இருந்தது.

Bro.Mathankumar, Kallidaikurichi.


[05]
இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள். தேவனுடைய பெரிதான கிருபையால் கடந்த நவம்பர் 12ம் தேதி என்னுடைய 80வயது கடந்து 81ம் ஆண்டுக்குள் நடத்துகின்ற என் தேவனுக்கு நன்றி செலுத்துகின்றேன். நம்முடைய குடும்ப கூடுகையில் கலந்துகொள்ள தேவன் கிருபை செய்தார். நிகழ்ச்சிகள் யாவும் நன்றாக இருந்தது. ஆத்துமாவுக்கும் சரீரத்திற்கும் நல்ல உணவும் உற்சாகமும் கொடுத்தது. உங்கள் ஊழியரின் கனிவான கவனிப்பிற்கும் மிக்க நன்றி.

Mr.Richard Sam Alex, Chennai.


[06]
எனக்கு இப்போது வயது 82. உடல் பலவீனத்தாலும் கண்பார்வை குறைவினாலும் வெளியீடுகளை சரியாக வாசிக்க முடியவில்லை. என் ஆவிக்குரிய வாழ்வில் எத்தனையோ ஆண்டுகள் அடைந்த ஆசீர்வாதங்களை இப்போது பெற முடியவில்லையே என்று வேதனை அடைகிறேன். என்னால் முடிந்தவரை வாசித்துவிட்டு எங்கள் சபையில் உள்ள எனது மாணவியிடம் கொடுத்து விடுகிறேன். அவர்கள் மூலம் அநேகர் ஆசீர்வாதம் பெறுகிறார்கள் என்று நம்பி சந்தோஷம் அடைகிறேன்.

Mrs.Sheela Samuel, Chennai.


[07]
அன்பான சகோதரருக்கு, அனுதினமும் கிறிஸ்துவுடன் ஜுன் மாத தியான பகுதியில் “பேச்சைக் காத்துக்கொள்” என்ற தலைப்பில் நம்முடைய ஜெபங்கள் எப்படி இருக்க வேண்டும் என்று தெளிவாக கூறப்பட்டிருந்தது. கவர்ச்சியான நீண்ட ஜெபங்கள் அல்ல, சிறிதானாலும் உள்ளத்தின் ஆழத்திலிருந்து ஏறெடுக்கும் ஒரு சிறு ஜெபத்தில் தேவன் பிரியப்படுகிறார், என்று கூறப்பட்டிருந்தது. நன்றி.

Mrs.Gnanamani Hepzibah, Vellenlanvilai.

ஆசிரியரிடமிருந்து…

(மார்ச்-ஏப்ரல் 2020)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,

இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் நம்மில் அன்புகூர்ந்த மீட்பர் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்.

இவ்விதழ் வாயிலாக தங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம். அனுதினமும் கிறிஸ்துவுடன் இதழ், சத்தியவசனம் இணையதளம் மற்றும் வாட்ஸ் ஆப் ஆகியவற்றின் வாயிலாக தியானங்களை தினமும் பல்லாயிரக்கணக்கானவர்கள் படித்து பிரயோஜன மடைகின்றனர். இத்தியானங்கள் சத்தியத்தை அறியாத இன்னும் அநேகருக்கு சென்றடைய ஜெபத்துடன் பிரயாசப்படுகிறோம். நீங்களும் தங்களுக்கு அறிமுகமானவர்களுக்கு இவ்விதழை பெற்றுத் தாருங்கள். இத்தியானங்களை எழுதுகிற சகோதர சகோதரிகளை கர்த்தர் ஆசீர்வதிக்கும்படியாகவும் இன்னும் வல்லமையாய் எடுத்து உபயோகப்படுத்தவும் வேண்டுதல் செய்வோம். இத்தியானங்கள் வாயிலாக தாங்கள் பெற்ற ஆசீர்வாத அனுபவங்களை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

கடந்த 2019 ஆம் ஆண்டு பரிசுத்த வேதாகமத்தை வாசித்து முடித்தவர்களின் பெயர்களை இவ்விதழில் பிரசுரித்துள்ளோம். அவர்களுக்கு எமது பாராட்டுக்களைத் தெரிவிக்கிறோம். பள்ளி அராசங்கத்தேர்வு எழுதப்போகும் தங்கள் பிள்ளைகளுக்காக வேண்டுதல் செய்கிறோம். நமது பங்காளர் குடும்பங்களில் உள்ள பிள்ளைகள் எழுதவிருக்கும் தேர்வு விவரங்களை எங்களுக்கு தெரிவித்தால் நாங்கள் அவர்களுக்காக பாரத்தோடு ஜெபிப்போம்.

சத்தியவசன ஊழியத்தை தங்கள் ஜெபத்தாலும் ஆதரவான காணிக்கையாலும் தாங்கி வருகிறமைக்காக அதிக நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். 2020ஆம் வருட விசுவாசப்பங்காளர் சந்தாவை இதுவரைப் புதுப்பிக்காதவர்கள் புதுப்பித்து இவ்வூழியத்தைத் தாங்க அன்பாய் கேட்கிறோம். சத்தியவசன வானொலி மற்றும் தொலைகாட்சி நிகழ்ச்சி ஒலி(ளி)பரப்பின் தேவைகள் சந்திக்கப்படவும் நிகழ்ச்சி ஆதரவாளர் திட்டத்தில் இணைந்து இவ்வூழியங்களைத் தாங்கவும் அன்பாய் கேட்கிறோம்.

இவ்விதழில் சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் மார்ச் மற்றும் ஏப்ரல் ஆகிய மாதங்களுக்கான தியானங்களை கிறிஸ்துவின் பாடு, மரணம், உயிர்த்தெழுதல் ஆகியவற்றை மையமாக வைத்து எழுதியுள்ளார்கள். இத்தியானங்களை வாசிக்கின்ற ஒவ்வொருவரும் தங்கள் ஆவிக்குரிய வாழ்வில் பிரயோஜனடைய வேண்டுதல் செய்கிறோம்.

கே.ப.ஆபிரகாம்