வாக்குத்தத்தம்: 2023 அக்டோபர் 1 ஞாயிறு

நீங்கள் கிரயத்துக்குக்கொள்ளப்பட்டீர்கள்; மனுஷருக்கு அடிமைகளாகாதிருங்கள் (1கொரிந்தியர் 7:23).

கர்த்தர் நீதிசெய்கிற தேவன்; அவருக்குக் காத்திருக்கிற அனைவரும் பாக்கியவான்கள் (ஏசா.30:18).
வேதவாசிப்பு: காலை: ஏசாயா 35-37 | மாலை: எபேசியர் 3

ஜெபக்குறிப்பு: 2023 அக்டோபர் 1 ஞாயிறு

உம்முடைய மிகுந்த இரக்கங்களின்படியே, அவர்களை நிர்மூலமாக்காமலும் அவர்களைக் கைவிடாமலும் இருந்தீர்; நீர் கிருபையும் இரக்கமுமுள்ள தேவன் (நெகே.9:31).

கர்த்தர் நீதி செய்கிற தேவன்; அவருக்குக் காத்திருக்கிற அனைவரும் பாக்கியவான்கள் (ஏசா.30:18) பத்தாவது மாதத்திற்குள் இவ்விடம் வருகிறவரைக்கும் யெகோவாயீரே ஆக இருந்து அரவணைத்து பாதுகாத்த நல்தேவனிடத்தில் தொடர்ந்து நம்பிக்கையோடு காத்திருந்து இம்மாதத்திற்குரிய ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ள நம்மை அர்ப்பணித்து ஜெபிப்போம்.

அடிமைத்தனத்திலிருந்து விடுதலை!

தியானம்: 2023 அக்டோபர் 1 ஞாயிறு | வேத வாசிப்பு: யாத்திராகமம் 3:1-9

YouTube video

அவர்களை…. பாலும் தேனும் ஓடுகிற நலமும் விசாலமுமான தேசத்தில் கொண்டுபோய்ச் சேர்க்கவும் இறங்கினேன் (யாத்திராகமம் 3:8).

கடந்த மாதம் முழுவதும் நம்மை ஆதரித்து வழிநடத்தின நம் தேவன் மற்றுமொரு புதிய மாதத்திற்குள் பிரவேசிக்க கிருபை செய்தபடியால் அவருக்கு துதி ஸ்தோத்திரங்களை ஏறெடுப்போம். ஆனாலும் உங்களுக்கு இரங்கும்படி கர்த்தர் காத்திருப்பார், உங்கள் மேல் மனதுருகும்படி எழுந்திருப்பார்; . . . அவருக்குக் காத்திருக்கிற அனைவரும் பாக்கியவான்கள் (ஏசா.30:18) என்ற வாக்கின்படி தேவன் நமக்கு இரங்கி நம் தேவைகளை சந்தித்து வழிநடத்துவார். எனவே நம்பிக்கையோடு முன்னேறி செல்வோமாக!

சகல ஆசீர்வாதங்களோடும், தேவைகள் அனைத்தும் சந்திக்கப்பட்டு, எந்த விதக் குறைவுமின்றி, அந்நிய தேசமாம் எகிப்தில் இஸ்ரவேல் மக்கள் சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர். நாட்கள் உருண்டோடின. பல வருடங்களுக்கு பின் சிறிதுசிறிதாக அவர்களுக்கிருந்த வசதிகள் குறையத் தொடங்கியன. சந்தோஷமும் சுதந்திரமும் இழந்து, இறுதியிலே அந்நியனுக்கு அடிமைகளாகிவிட்டனர். உபத்திரவமும், பாடுகளும் அதிகரிக்க, தம்மை ஆசீர்வதித்த தேவனை மறந்திருந்த அந்த இஸ்ரவேல் மக்கள், இந்த அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாக வேண்டுமென தம்முடைய தேவனை நோக்கிக் கூக்குரலிட்டனர். அவர்கள் தேவன் உயிருள்ள அன்பின் தேவன் அல்லவா? அவர்கள் கூக்குரல் அவர் சந்நிதியில் போய் எட்டவே, அவர்களில் இரக்கங்கொண்டு அவர்களை விடுவிக்கச் சித்தங்கொண்டார்.

அன்பானவர்களே, இந்த உலகிலே நாமும்கூட இஸ்ரவேல் மக்களைப்போல சகல ஆசீர்வாதங்களையும் பெற்றவர்களாக, தேவைகள் அனைத்தும் சந்திக்கப் பட்டவர்களாக, சுகபோகமாகவும் சந்தோஷமாகவும் நமது நாட்களைக் கழித்துக் கொண்டிருக்கலாம். அதில் தவறு இல்லை. ஆனால், நாம் வாழும் இந்த உலகம் நமக்குச் சொந்தமானது அல்ல. இது நமக்கு அந்நிய தேசமே. நமது நாட்கள் சீக்கிரமாக உருண்டோடிக்கொண்டிருக்கிறது. இந்த நிரந்தரமற்ற உலகிலே நம்முடைய நிலை எப்படிப்பட்டது என்பதைச் சிந்திக்கிறோமா? நாம் உண்மையாகவே மாறாத நித்திய சந்தோஷத்தோடு வாழ்கிறோமா? இந்த உலகில் நாம் எத்தனை ஆசீர்வாதங்களைப் பெற்றிருந்தாலும், நாம் நமது பாவ அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெறாவிடில் நித்திய சந்தோஷத்தை அனுபவிக்க முடியாது.

எனவே அன்பானவர்களே, அதே பாவ அடிமைத்தனத்திலே நாம் தொடர்ந்து நிலைத்திருப்போமானால், அன்று இஸ்ரவேல் மக்கள் அடைந்த வேதனை, உபத்திரவம், துன்பம் இவைகளிலும், அதிக வேதனையை அடையவேண்டியதிருக்கும். ஆகவே இதை உணர்ந்தவர்களாக, நம்மை விடுவிக்கும் தேவனை நோக்கிக் கூப்பிடுவோம். அவர் நம்மைப் பாவத்திலிருந்து விடுதலையாக்கி, நித்திய ராஜ்யத்திலே சேர்த்துக்கொள்வார்.

ஜெபம்: அன்பின் தேவனே, இந்த புதிய மாதத்திலே என்னையும் என் குடும்பத்தையும் ஆசீர்வதித்து வழிநடத்தும். இன்று என் நிலையை ஆராய்ந்து பார்க்கிறேன். இப்போதும் எனக்கு இரங்கி, பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து என்னை விடுவியும். ஆமென்.