ஜெபக்குறிப்பு: 2023 அக்டோபர் 20 வெள்ளி
கர்த்தருடைய வார்த்தையின்படியே அவர்கள் சாப்பிட்டதுமன்றி மீதியும் இருந்தது (2இரா.4:44) சத்தியவசன ஊழியங்களை தியாகத்தோடும் மனப்பூர்வமாகவும் தாங்கி வரும் பங்காளர்கள் ஆதரவாளர்கள் குடும்பங்களையும் அவர்களது கைகளின் பிரயாசங்களையும் அண்டசராசரங்களை படைத்த சர்வவல்லமையுள்ள கர்த்தர் கனப்படுத்தவும் மேன்மைப்படுத்தவும் ஜெபிப்போம்.
குடும்பத் தலைவியே!
தியானம்: 2023 அக்டோபர் 20 வெள்ளி | வேத வாசிப்பு: லூக்கா 10:38-42

“…மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள்” (லூக்.10:42).
“பின் தூங்கி முன் எழுவாள் பத்தினி” என தமிழிலே ஒரு முதுமொழி உண்டு. அதாவது, ஒரு பெண் அதிகாலை இருட்டோடே எழுந்து தன் வீட்டின் காரியங்களை ஆரம்பிப்பாள். பின்னர், இரவு தன் வேலைகளை முடித்து, எல்லாரும் தூங்கச்சென்ற பின்பு தூங்கச்செல்வாள். இப்படிப்பட்டவளே நல்ல குணசாலியான குடும்பப் பெண் என்பது பொதுவான அபிப்பிராயம். ஆனால், இயேசு கிறிஸ்து இவ்வுலகிலே ஜீவித்த காலத்திலே, பெத்தானியா ஊரிலிருந்த லாசருவின் வீட்டிற்குப் போனார். அங்கே மார்த்தாள் மரியாள் என இரண்டு சகோதரிகள் இருந்தார்கள். அவர்களில் மார்த்தாள் தன் வீட்டின் காரியங்கள் அனைத்தையும் செய்வதில் கண்ணும் கருத்துமாக இருந்தாள். ஆனால், அவள் சகோதரி மரியாளோ இயேசுவின் பாதத்தருகே அமர்ந்திருந்து அவரது போதனைகளைக் கேட்டுக்கொண்டிருந்தாள். தன் சகோதரி தனக்கு உதவி செய்யாதது மார்த்தாளுக்குக் கோபத்தை ஏற்படுத்தியது. எனவே அவள் இயேசுவிடம் வந்து முறையிட்டாள். ஆனால் இயேசுவோ மார்த்தாளைப் பார்த்து, “மார்த்தாளே நீ அநேக காரியங்களைக் குறித்து கவலைப்பட்டுக் கலங்குகிறாய் தேவையானது ஒன்றே, மரியாள் தன்னைவிட்டு எடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள்” என்று பதிலளித்தார்.
ஆம், இந்நாளில் என் வீட்டில் உள்ளவர்களுக்கு உணவைப் பரிமாற வேண்டுமே, விருந்தாளிகளை உபசரிக்க வேண்டுமே, வீட்டைப் பெருக்கி சுத்தம் செய்ய வேண்டுமே, பிள்ளைகளின் உடைகளைத் துவைக்க வேண்டுமே, என பலவிதமான சிந்தனைகளோடு பரபரப்போடு வீட்டுக் காரியங்களைக் குறித்துப் பாரப்படும் உன் வாழ்க்கை மார்த்தாளின் வாழ்வைப்போல மாறிவிட்டதா? உன் வேலைகளை பொறுப்போடு செய்கிறாய், நல்லதுதான், ஆனால், அதுமட்டும் போதாது. கர்த்தருடைய பாதத்தில் அமர்ந்து அவரது வார்த்தையைப் படிக்கவும், தியானிக்கவும், ஜெபிக்கவும் நேரம் செலவிடுகிறாயா? ஒரு குணசாலியான பெண்ணுக்கு இதுவும் முக்கியமானது என்பதை மறந்துபோகாதே. வேதம் சொல்லுகிறது.“கர்த்தருக்குப் பயப்படுகிற ஸ்திரீயே புகழப்படுவாள்” (நீதி.31:30).
எனவே இதை வாசிக்கும் நீங்கள் யாராயிருந்தாலும் சரி, முதலாவது கர்த்தருக்குப் பயப்படும் ஒரு நபராக நீங்கள் மாறவேண்டும். நீங்கள் இருட்டோடு எழுந்து உன் வேலைகளை ஆரம்பிக்குமுன், கர்த்தரின் சமுகத்தைத் தேடுங்கள். அதிகாலை முடியாதுபோனால், அந்த நாளில் ஏதாவது வசதியான ஒரு நேரத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும். அதுபோல இரவு படுக்கைக்குப் போகு முன்பதாக உங்கள் குடும்பத்திலுள்ள ஒவ்வொருவருக்காகவும் கர்த்தரிடம் நன்றி செலுத்துங்கள்.
ஜெபம்: அன்பின் கர்த்தாவே, நீர் எனக்குத் தந்த பொறுப்புகளுக்காக நன்றி. ஆனால் பொறுப்புகளைக் காரணம் காட்டி என் ஆவிக்குரிய வாழ்வை அசட்டை செய்யாதபடி எச்சரிக்கையாக இருக்க எனக்கு உதவியருளும். ஆமென்.