ஜெபக்குறிப்பு: 2023 அக்டோபர் 7 சனி
திங்கள், புதன், வெள்ளிக்கிழமை ஆகிய நாட்களில் ஒளிபரப்பாகும் வேதாகமத்திற்கு திரும்புக ஆங்கில வானொலி நிகழ்ச்சிகளில் ஏராளமானோர் பங்குபெற்று ஆசீர்வதிக்கப்படவும் செய்தியாளர் Dr.ஜாண் நியூபெல்டு அவர்களது நல்ல சுகத்திற்காகவும் நிகழ்ச்சிக்கான தேவைகள் அனைத்தும் சந்திக்கப்பட கர்த்தர் கிருபை செய்யும்படியாக ஜெபிப்போம்.
ஊழியர்களைத் தாங்குவோம்!
தியானம்: 2023 அக்டோபர் 7 சனி | வேத வாசிப்பு: யாத்திராகமம் 17:8-16

“…. ஆரோனும், ஊர் என்பவனும்….. மோசேயின் கைகளைத் தாங்கினார்கள்” (யாத்.17:10,12).
வாக்களிக்கப்பட்ட கானானை நோக்கிப் பயணமாகிக்கொண்டிருந்த இஸ்ரவேலரை, இடைநடுவே அமலேக்கியர் சந்தித்து யுத்தம் பண்ணினார்கள். யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, மோசே, மக்களுக்காக தேவனை நோக்கித் தனது கரங்களை உயர்த்திய வண்ணமே இருந்தார். அப்போது இஸ்ரவேலர் அமலேக்கியரை மேற்கொண்டார்கள். மோசேயின் கைகள் தளர்ந்துபோனபோது, அமலேக்கியர்கள் இஸ்ரவேலரை மேற்கொண்டார்கள். அந்தவேளையில், ஆரோனும், ஊர் என்பவனும் மோசேயின் தளர்ந்துபோகும் கரங்களைத் தாங்கிப் பிடித்துக்கொண்டிருந்தனர். இதனால் இஸ்ரவேல் மக்கள் வெற்றி பெற்றனர்.
ஆம், அன்று அமலேக்கியர் இஸ்ரவேலரைத் தோற்கடிக்காதபடிக்கும், இஸ்ரவேலர் வெற்றிபெறவும் தக்கதாக மோசே தன் கரங்களை பரத்துக்கு நேராக உயர்த்தியபடியே நின்றார். அதேபோல இன்று சாத்தானுக்கு விரோதமான யுத்தத்திலே ஈடுபட்டிருக்கும் தேவஜனத்துக்கு ஊழியம் பண்ணவும், அவர்கள் தோற்கடிக்கப்படாதபடிக்கு அவர்களுக்காக உழைக்கவும் இடைவிடாமல் ஜெபிக்கவும் தங்களை அர்ப்பணித்திருக்கிற பல ஊழியர்களைத் தேவன் நம் மத்தியில் எழுப்பித் தந்துள்ளார். இவர்கள்; தேவனால் ஒரு விசேஷ ஊழியத்துக்கென தெரிந்துகொள்ளப்பட்டவர்கள்! உலகின் சிற்றின்பங்களையும், உயர் பதவிகளையும், அந்தஸ்துக்களையும், சொத்துக்களையும்விட்டு, அநேகரை இயேசு வுக்குள் வழிநடத்தும்படிக்குத் தங்களையே ஒப்புக்கொடுத்து உழைத்து வருகிறவர்கள். ஆனால், இவர்களும் மனுஷர்கள்தான்! இவர்களுடைய வாழ்விலும் பலவிதமான போராட்டங்கள் சோர்வுகள் ஏற்படத்தான் செய்யும். இன்னும் சிலர் கிறிஸ்துவின் நற்செய்திக்குத் தடைவிதித்துள்ள பல இடங்களிலே, தங்கள் உயிரையும் பாராமல் இயேசுகிறிஸ்துவை அறிவித்து வருகிறார்கள். இவர்களுக்கு பலவேளைகளிலும் எதிர்ப்புகள், பயமுறுத்தல்கள், கொலை மிரட்டல்கள் வரும். அப்போது இவர்கள் சோர்ந்துவிடக்கூடும்.
பிரியமானவர்களே, அன்று ஆரோனும் ஊரும் மோசேயைத் தாங்கியது போல இவர்களைத் தாங்கவேண்டிய பொறுப்பு இன்று நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. மற்றவர்களுக்காக ஜெபித்த பவுலும்கூட பல இடங்களிலே தனக்காக ஜெபிக்கும்படி கேட்டுக்கொண்டார். ஆகவே நமது ஊழியர்களை ஜெபத்தாலும் பணத்தாலும் இன்னும் பலவித வழிகளிலும் நாம் தாங்கி ஊக்கப்படுத்த இந்நாளிலே நம்மை ஒப்புக்கொடுப்போமாக. இவ்விதமாக தேவஜனத்தின் வெற்றியில் நாமும் ஒரு நல்ல பங்களிப்பைக் கொடுக்கலாமல்லவா!
ஜெபம்: அன்பின் ஆண்டவரே, ஊழியருக்காகப் பாரத்தோடு ஜெபிக்க ஜெபவாஞ்சையைத் தாரும். உமது யுத்தக்களத்திலே நிற்கும் ஊழியர்கள் சோர்ந்துபோகாமல் ஊழியம் செய்வதற்கு என் பங்களிப்பைக் கொடுக்க என்னை நடத்தும். ஆமென்.