ஜெபக்குறிப்பு: 2023 அக்டோபர் 27 வெள்ளி

என் நாமத்தினிமித்தம் இளைப்படையாமல் பிரயாசப்பட்டதையும் அறிந்திருக்கிறேன் (வெளி.2:3) சத்தியவசன இலக்கியப் பணியில் மொழியாக்க உதவிகளைச் செய்து வரும் சகோதர, சகோதரிகளுக்காகவும் அவர்களது நல்ல சுகத்திற்காக அவர்களது தேவைகள் கர்த்தரால் சந்திக்கப்பட வேண்டுதல் செய்வோம்.

சுத்திகரிக்கப்பட்ட பாத்திரம்!

தியானம்: 2023 அக்டோபர் 27 வெள்ளி | வேத வாசிப்பு: மத்தேயு 23:23-28

YouTube video

“… பாத்திரங்களின் வெளிப்புறம் சுத்தமாகும்படி அவைகளின் உட்புறத்தை முதலாவது சுத்தமாக்கு” (மத்.23:26).

ஒரு வீட்டில் வரவேற்பு அறையின் நடுவே எவரையும் இலகுவில் கவரத்தக்கதான அழகான வேலைப்பாடுள்ளதும் மிக விலையுயர்ந்ததுமான ஒரு பூ ஜாடியில் பூஞ்செண்டு ஒன்று வைக்கப்பட்டிருந்தது. ஒருநாள் அந்த வீட்டுப் பணிப்பெண் பூஞ்செண்டை அகற்றி புதிய பூஞ்செண்டு ஒன்றை வைப்பதற்கு பூ ஜாடியண்டை சென்றபோது அதற்குள் இருந்து மிகமோசமான துர்நாற்றம் வீசியது. அவள் பூ ஜாடிக்குள் பார்த்தபோது. அதற்குள் அழுக்கு நிறைந்து காணப்பட்டது. அதுபோல நாம் வெளியரங்கமாக அதிக தாலந்து படைத்தவர்களாக, ஊழியம் செய்கிறவர்களாக, மற்றவர்களுக்கு முன் நல்லவர்களாகக் காணப்பட்டாலுங்கூட, நமது உள்ளான வாழ்வு எந்தளவு தூய்மையாயிருக்கிறது என்பதை அடிக்கடி தற்பரிசோதனை செய்துகொள்ள வேண்டியது மிக அவசியம்.

சுத்திகரிக்கப்பட்ட ஒருவருடைய வாழ்வுதான் கர்த்தரால் அவருடைய ஊழியத்துக்கென உபயோகமுள்ள பாத்திரமாக விளங்கமுடியும். இதைத்தான் பவுல், “ஒரு பெரிய வீட்டிலே பொன்னும் வெள்ளியுமான பாத்திரங்களுமல்லாமல், மரமும் மண்ணுமான பாத்திரங்களுமுண்டு. …ஆகையால் ஒருவன் தன்னைச் சுத்திகரித்துக்கொண்டால், அவன் பரிசுத்தமாக்கப்பட்டதும், எஜமானுக்கு உபயோகமானதும், எந்த நற்கிரியைக்கும் ஆயத்தமாக்கப்பட்டதுமான கனத்துக்குரிய பாத்திரமாயிருப்பான்” (2 தீமோ.2:20,21) என எழுதுகிறார். ஆம் ஒரு வீட்டில் வெள்ளி, செம்பு, கண்ணாடி, பிளாஸ்டிக், மண் என பலவிதமான பாத்திரங்கள் வைக்கப்பட்டிருக்கலாம். ஆனால், அப்பாத்திரங்கள் எவ்வளவு அழகானதாக கவர்ச்சியுள்ளதாக விலையுயர்ந்ததாக இருந்தாலும் அது சுத்தமானதாக இல்லையேல் எஜமானுடைய உபயோகத்துக்குப் பயன்படாது.

தேவனுடைய கரத்தில் ஒரு பாத்திரமாக இருக்கும் தேவபிள்ளையே, நீ எங்கே இருக்கிறாய்? என்ன படித்திருக்கிறாய்? நீ என்ன நிறம்? எப்படிப்பட்ட தோற்றமுள்ளவன் என்பது முக்கியமல்ல. உன்னுடைய உள்ளான வாழ்வு பரிசுத்தமாகக் காணப்படுகிறதா? அல்லது, உன் அனுதின வாழ்க்கையில் மற்றவர்கள் பார்வையில் நீ ஒரு நல்ல கிறிஸ்தவனைப்போல இருப்பது போதுமென்ற மனதிருப்தியோடு ஜீவிக்கின்றாயா? அப்படியாக உன் ஜீவியம் இருக்குமேயானால், கர்த்தர் உன்னைச் சுத்திகரித்து, தமக்கென்று உபயோகிக்கும்படி இன்றே உன்னை அர்ப்பணிப்பாயா?.

அவர்மேல் இப்படிப்பட்ட நம்பிக்கை வைத்திருக்கிறவனெவனும், அவர் சுத்தமுள்ளவராயிருக்கிறதுபோல, தன்னையும் சுத்திகரித்துக்கொள்ளுகிறான் (1யோவான் 3:3).

ஜெபம்: அன்பின் தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், உமக்குப் பிரியமில்லாத அனைத்துக் காரியங்களையும் என் வாழ்விலிருந்து அகற்றி, உமக்கு உகந்த பாத்திரமாக என்னை உபயோகியும். ஆமென்.