“இதோ உம்மோடே இருக்கிறேன்” என்ற வார்த்தைகள் வெற்றிக்கும் தோல்விக்கும் உள்ள வேறுபாட்டை ஏற்படுத்துகிறது. யோனத்தான் வெற்றிபெற்ற யுத்தத்தின் மேன்மையை அவனது தகப்பனான சவுல் எடுத்துக்கொண்டான் (1சாமு.13:1-4). ஆனால், இஸ்ரவேல் பாதுகாப்பாக உள்ளது; தேவனே மகிமைக்கு உரியவர் என்பதாலும் யோனத்தான் அதைப்பற்றி கவலைப்படவில்லை. தேவனுடைய பிள்ளைகளாக நாமும் ஆண்டவருடைய சத்துருக்களுடன் நித்தமும் போரிட நேரிடும். பெலிஸ்தருக்கு விரோதமான அந்த யுத்தகளத்தில் இஸ்ரவேலரில் மூன்று பிரிவினர்; இருந்தனர். இன்றும் நமது சபைகளில் மூன்று வித “கிறிஸ்தவ வீரர்கள்” காணப்படுகின்றனர்.
பார்வையாளர்கள்
சவுல் அரசன் ஏறக்குறைய அறுநூறு வீரர்கள் சூழ்ந்திருக்க ஒரு மரத்தின் கீழ் என்ன செய்வது என்று அறியாமல் திகைத்தவனாய் அமர்ந்திருந்தான். தலைவர்கள் தங்களுடைய அதிகாரத்தை பயன் படுத்தவேண்டும். கடமையை செய்து விடுவதுடன்மட்டும் நின்று விடக்கூடாது (1தீமோ.3:13). தேவன் சவுலுக்கு அதிகாரத்தையும் பதவியையும் கொடுத்திருந்தார். ஆனால் சவுலோ, தரிசனம், அதிகாரம் அல்லது செயல்திட்டம் அற்றவனைப் போல காணப்பட்டான். காரியங்களை செயல்படுத்துவதற்குப் பதிலாக காரியங்கள் நடந்தேறுவதைக் கவனித்துக் கொண்டிருந்தான். வெறும் பார்வையாளர்கள் தங்கள் வாழ்வில் எதையும் சாதித்து முன்னேறுவதில்லை. சவுலுடன் ஒரு சிறிய இராணுவம் மட்டுமே இருந்தது. இஸ்ரவேலரில் சிலர் யுத்தகளத்தை விட்டு ஓடி ஒளித்துக்கொண்டனர். ஒரு சிலர் எதிரிகளிடம் சரணும் அடைந்து விட்டனர்! ஆனால் யோனத்தானும் அவனுடைய ஆயுததாரியும் பெலிஸ்தரை எதிர்த்து போரிட்டு அவர்களை வெட்டிக்கொண்டே போனார்கள்.
ஆண்டவரும் எதிரிகளின் போர்க்களத்தை கலங்கடித்தார். ஒளித்துக்கொண்டிருந்த இஸ்ரவேலரும் வெளியில் வந்து யுத்தத்தில் கலந்து கொண்டனர். இவர் களைப்போன்ற கிறிஸ்தவர்களை நீங்கள் கண்டிருக்கிறீர்களா? அவர்களில் நீங்களும் ஒருவரா?
பயப்படாதவர்கள்
யோனத்தான் ஏற்கனவே பெலிஸ் தரை யுத்தத்தில் தோற்கடித்திருந்தான். இஸ்ரவேலின் தேவன் தங்களுக்கு வெற்றியைத் தருவார் என அதிக நிச்சயமாய் நம்பியிருந்த அவன் ஒரு விசுவாச வீரன். ஒருவேளை லேவியராகமம் 26:7-8 வரையுள்ள “உங்கள் சத்துருக்களைத் துரத்திவிடுவீர்கள்; அவர்கள் உங்கள் முன்பாகப் பட்டயத்தால் விழுவார்கள். உங்களில் ஐந்துபேர் நூறு பேரைத் துரத்துவார்கள்; உங்களில் நூறுபேர் பதினாயிரம் பேரைத் துரத்துவார்கள்; உங்கள் சத்துருக்கள் உங்களுக்கு முன்பாகப் பட்டயத்தால் விழுவார்கள்” என்ற தேவனுடைய வாக்குறுதியை அவன் சிந்தித்திருப்பான். தன்னுடைய ஆயுததாரிக்கும் “அநேகம் பேரைக் கொண்டாகிலும், கொஞ்சம் பேரைக் கொண்டாகிலும், ரட்சிக்கக் கர்த்தருக்குத் தடையில்லை” (1சாமு. 14:6) என்று கூறி உற்சாகப்படுத்தினான். தன்னுடைய நிலைப்பாடு சரியானது தான் என்பதற்கு தேவன் ஒரு அடையாளத்தைத் தருவார் என எதிர்பார்த்தான். தேவனும் அதை நிறைவேற்றினார் (வச. 9-14). எதிரிகளின் பாளையத்தில் பூமியதிர்ச்சி உண்டானதினால் பெலிஸ்தர்கள் திகில் அடைந்து ஒருவரையொருவர் தாக்க ஆரம்பித்தனர். எதிரிகளின் இராணுவம் கலைய ஆரம்பித்தது (வச. 16).
பயன்தருபவர்கள்
தங்களுக்கென்று எதையும் வைத்துக்கொள்ளாமல் பிறருக்கு உதவும் மக்களும் உண்டு. யோனத்தானின் ஆயுத தாரியின் பெயர் இங்கு குறிப்பிடப்படவில்லை. வேதத்தில் பெயர் தரப்படாத அநேகர் தங்களுக்குரிய வேலையை முடித்துவிட்டு அறியப்படாதவர்களாய் காணப்படுகின்றனர். அவர்களுக்கு பரலோகில் சிறந்த வெகுமானங்கள் தரப்படும் என்பதில் ஐயமில்லை. இயேசு ஐந்தாயிரம் மக்களைப் போஷிக்க தன்னுடைய உணவை தியாகம் பண்ணின சிறுவன் (யோவான் 6:8-11), நாகமானை குஷ்ட ரோகத்திலிருந்து குணமாக்க எலிசாவிடம் செல்ல ஆலோசனை கூறிய சிறு பெண் (2 இராஜா.5:1-4), பவுலின் உயிரைக் காப்பாற்ற முயன்ற அவனுடைய சகோதரியின் மகன் (அப். 23:16-22) ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
தானும் கூடவே வருவதாகக் கூறி ஆயுததாரி யோனத்தானை உற்சாகப்படுத்தினான். அனைத்து தலைவர்களுக்கும் தங்களுடைய செயல்பாட்டை நடத்த உதவும் சில உண்மையான மக்கள் தேவை. யோசுவாவுக்கும் இஸ்ரவேல் இராணுவத்துக்கும் மோசே ஜெபித்த பொழுது, ஆரோனும் ஊரும் அவனுடைய கைகளைத் தாங்கினர் (யாத் 17:8-16). கெத்செமெனே தோட்டத்தில் இயேசு ஜெபிக்கும்பொழுது தன்னுடனே விழித்திருக்க பேதுரு, யாக்கோபு மற்றும் யோவானை கேட்டுக்கொண்டார் (மத்.26:36-46). தங்களுக்கென்று எதையும் வைத்துக்கொள்ளாமல் “கூடவே இருப்போம்” என்று கூறும் ஒரே மனமுடைய தொண்டர்களைக் கொண்ட தலைவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். இயேசுகிறிஸ்துவும் நம்முடன் கூடஇருப்பதாக வாக்களித்திருக்கிறார்; நாமும் மற்றவர்களுக்கு அதனைக் கூற அவர் நமக்கு உதவி செய்வார்.
இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன் என்றார். ஆமென் (மத்.28:20).