ஜெபக்குறிப்பு: 2025 அக்டோபர் 4 சனி

சத்தியவசன வாட்ஸ் அப், இணையதளம், YouTube ஆகிய ஊழியங்களினாலே ஏராளமானோர் சத்தியங்களை அறிந்துகொள்கிறார்கள். இந்தத் தீர்க்கதரிசன வசனங்களை … கைக்கொள்ளுகிறவர்களும் பாக்கியவான்கள் (வெளி.1:3). இவ்வூழியங்களினாலே அநேகர் விசுவாசத்தில் வளரவும், முடிவுபரியந்தமும் நிலைத்திருப்பதற்கும் தேவனுடைய கிருபைகளுக்காக ஜெபிப்போம்.

வேறுபட்ட மனநிலைகள்

தியானம்: 2025 அக்டோபர் 4 சனி | வேதவாசிப்பு: ரோமர் 7:23-8:2

YouTube video

தேவன் செய்வது எதுவோ அது என்றைக்கும் நிலைக்கும் (பிரசங்கி 3:14).

நமது மனதில் எழுகின்ற நினைவுகளைக்குறித்து நாம் எப்போதாவது ஆராய்ச்சி பண்ணியிருக்கிறோமா? அல்லது சிந்தித்தாவது இருக்கிறோமா? கடிவாளமில்லாத குதிரையைப் போன்றது நமது மனம். நாம் விழிப்போடு அதை அடக்கவில்லையானால் அது எங்கேயோ பறந்துசெல்லும். “மனதின் யோசனைகள் மனுஷனுடையது” (நீதி.16:1). அதேசமயம், “பட்டணத்தைப் பிடிக்கிறவனைப் பார்க்கிலும் தன் மனதை அடக்குகிறவன் உத்தமன்” (நீதி.16:32) என்றும் வேதாகமம் சொல்லுகிறது. நமக்குள் எழும் சிந்தனைகளை நினைவுகளை சீர்தூக்கிப் பார்த்தால், அநேகமான வேளைகளிலே இரண்டு நேர் எதிரான நினைவுகளுக்கிடையில் நாம் போராடுவதை நாமே கவனிக்கலாம். “சரியா? பிழையா?” – “போவதா? இல்லையா?” – “கர்த்தருடைய வார்த்தையா? எனது விருப்பமா?” என நமது மனம் முடிவெடுக்க போராடுகிறது. பவுலுக்கும் இந்தப் போராட்டம் இருந்தது. தேவபிரமாணத்தை நிறைவேற்ற துடிக்கும் மனதின் போராட்டத்திற்கும், பாவபிரமாணத்திற்கு அடிபணிய துடிக்கும் மாம்சத்தின் போராட்டத்திற்கும் இடையே பவுல் போராடினார்.

நமக்கும் சிலசமயம் “இது என்ன வாழ்வு” என்றிருக்கும்; அதேசமயம் “வாழ்விற்கு அர்த்தமும் இருக்கும்” என்ற எண்ணமும் வரும். அன்றைய பிரசங்கியும் இப்படித்தான் இருந்தார். பிரசங்கி புத்தகம் முழுவதையும் நாம் படித்தால், இரு வேறுபட்ட மனநிலைகளுக்கிடையில் பிரசங்கி போராடியதை புரிந்துகொள்ள முடியும். “மாயை மாயை, மாயை” என்று ஏறத்தாழ 37 முறை புலம்பியிருக்கிறார் பிரசங்கி. அதேசமயம், தேவனுக்குப் பயந்தவர்கள் நன்றாயிருப்பார்கள், தேவன் அதினதின் காலத்தில் சகலத்தையும் நேர்த்தியாகச் செய்திருக்கிறார் போன்ற வார்த்தைகளையும் அவர் தெளிவாகவே எழுதியிருக்கிறார்.

தேவபிள்ளையே, நீயும் குழம்பியிருக்கிறாயா? தேவனை நம்பக்கூடிய விதத்திலே காரியங்களும் இல்லை; அதேசமயம் அவரை நம்பாமல் இருக்கவும் முடியாது எனத் தடுமாறுகிறாயா? ஒருபுறம் விசுவாசம், மறுபக்கம் அவிசுவாசம். குழப்பம் வரட்டும். ஏனெனில் அதுதான் தெளிவைத் தரும். மனதில் குழப்பம் வரும்போதெல்லாம், பவுலடியார், இயேசுவின் மூலம்தான் விடுதலையானதை நினைப்பார். அந்த நினைவே அவருக்கு வெற்றியைத் தந்தது. எல்லாம் மாயை என்ற பிரசங்கிகூட இறுதியில் தேவனுக்குப் பயந்து நடப்பது ஒன்றே நம்மை வாழவைக்கும் என்று எழுதுகிறார். பின்னர் நமக்குள் போராட்டம் எதற்கு? ஏன் இரண்டு நினைவுகள்? எல்லாமே பாதகமாகத் தோன்றினாலும், அவற்றுக்கூடாக சகலத்தையும் சாதகமாக்கும் தேவனுடைய கரத்தை நோக்கிப்பார்க்கப் பழகிவிட்டால், அதுவே நமக்குக் கிடைக்கும் பெரிய வெற்றியாகும்.

ஜெபம்: அன்பின் பிதாவே, வேறுபட்ட இருநினைவுகளாலே அடிக்கடி நாங்கள் குழம்பி தவிக்கிறோம். சிந்தைகளை ஒருமுகப்படுத்தும். இவையெல்லாவற்றையும் வெற்றிசிறந்த கிறிஸ்துஇயேசுவினாலே நாங்களும் வெற்றிசிறக்க எங்களுக்கு உதவி செய்யும். ஆமென்.