ஜெபக்குறிப்பு: 2025 செப்டம்பர் 30 செவ்வாய்

கர்த்தர் தம்முடைய இரக்கங்களின்படியும் …செய்த மகா நன்மைக்குத்தக்கதாகவும், கர்த்தருடைய துதிகளையும் பிரஸ்தாபம் பண்ணுவேன் (ஏசா.63:7) இம்மாதத்தில் தேவன் நடப்பித்த அதிசயமான கிரியைகளையும், மகா நன்மைகளையும் நினைத்து கர்த்தரின் துதிகளை பிரஸ்தாபித்து, அவருடைய மகிமையுள்ள நாமத்தை உயர்த்தி ஆராதிப்போம்.

மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; நீங்கள் என் நாமத்தினாலே பிதாவினிடத்தில் கேட்டுக்கொள்வதெதுவோ அதை அவர் உங்களுக்குத் தருவார் (யோவான் 16 : 23).

பொறுப்பினைக் காத்துக்கொள்!

தியானம்: 2025 செப்டம்பர் 30 செவ்வாய் | வேதவாசிப்பு: 1சாமுவேல் 17: 20-24,28

YouTube video

“…என்னை உண்மையுள்ளவனென்றெண்ணி, இந்த ஊழியத்திற்கு ஏற்படுத்தினபடியால், அவரை ஸ்தோத்திரிக்கிறேன்” (1தீமோத்தேயு 1:12).

பொறுப்புக்களை எடுப்பது, தலைமைத்துவத்தில் இருப்பது என்றால் சிலருக்கு அலாதிப் பிரியம். இவற்றிற்கெல்லாம் இப்போ நான்தான் பொறுப்பு, இன்னின்ன காரியங்களுக்கு நான்தான் தலைவர் என்று சொல்லுவதிலே மகிழ்ச்சி காண்போரும் இருக்கத்தான் செய்கின்றனர். ஆனால், பொறுப்புக்களை எடுப்பதும், தலைவர்களாய் இருப்பதும் முக்கியமல்ல, நாம் எடுத்த பொறுப்புக்களை எப்படிச் செய்கிறோம் என்பதும், நமது தலைமைத்துவத்தை எப்படியாகக் கையாளுகிறோம் என்பதுமே முக்கியமானதாகும்.

ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த தாவீதை, அவன் தகப்பனார் போர்க்களத்தில் இருக்கும் சகோதரருக்கு உணவு எடுத்துச்செல்லும்படியாகக் கூறியபோது, அவன் அதிகாலமே எழுந்து தனது ஆடுகளைக் காவலாளிகள் வசம் ஒப்படைத்து, பின்னர் போர்க்களத்திற்குச் செல்வதைக் காண்கிறோம் (1சாமு. 17:20). தன் பொறுப்பில் இருப்பது ஆடுகளாயினும் அவற்றைத் தவிக்கவிட தாவீதுக்கு மனதிருக்கவில்லை. தாவீதின் பொறுப்பான தன்மை இதில் நமக்கு வெளிப்படுகிறதல்லவா? தாவீது ராஜாவாக அபிஷேகம் பண்ணப்பட்டதால், இப்போது அவனுக்கு துணிகரமும், அகங்காரமும் வந்துவிட்டதனால் ஆடுகளைக் கவனிக்காது விட்டுவிட்டு இங்கே யுத்தகளத்தில் வந்துநிற்கிறான் என தப்பாகப் புரிந்துகொண்ட அவனது சகோதரன் எலியாப் கோபத்தோடு அவனைக் கடிந்துகொள்கிறான் (1சாமு. 17:28).

புதிய பொறுப்புக்கள் வந்ததும் பழைய பொறுப்புக்களை மறந்துபோவது சர்வசாதாரணமாகிவிட்டது. பதவி மோகத்தினால், குடும்பங்களை மறந்துபோகும் தாய், தந்தையரின் குடும்பநிலைகள் பரிதாபமானவைகள். எல்லாப் பொறுப்புக்களையும் தலைமேல் தூக்கி வைத்துக்கொண்டு எதைச் செய்வது என தெரியாமல் ஒன்றையுமே செய்யாமல் இருப்பதைவிட அளவோடு பொறுப்புக்களை எடுத்து முழுமையாகச் செய்துமுடிப்பதே ஞானமான செயலாகும். ஒரு திருமண வைபவத்தில் ஆலயத்துக்கு வந்தவரை விருந்து உபசாரத்தில் காணவில்லை என்று தேடியபோது, அவர் வீடு சென்று படுக்கையில் இருக்கும் தனது தந்தையாருக்குச் செய்யவேண்டிய கடமைகளைச் செய்து மீண்டும் புறப்பட்டு விருந்துபசாரத்துக்கு வந்திருந்தார். அவர் செய்த செயலை நாங்கள் அறிந்துகொண்டபோது நாங்கள் தேவனை மகிமைப்படுத்தினோம். பொறுப்பற்றிருப்போருக்கு இது ஒரு சவால் அல்லவா? எனவே பிரியமானவர்களே, நமக்கு அருளப்பட்டிருக்கும் பொறுப்புகளை தேவன் தந்துள்ள பொக்கிஷங்களாக நினைத்து நாமும் செயல்படுவோமாக! சிந்திப்போம். கொஞ்சத்திலே உண்மையுள்ளவன் அநேகத்திலும் உண்மையுள்ளவனாயிருக்கிறான் (லூக்-16:10).

ஜெபம்: “அன்பின் ஆண்டவரே, எனது கைகளில் நீர் தந்திருக்கும் பொறுப்புக்களை உண்மைத்துவத்துடன் செய்ய உமது கிருபையை ஈந்தருளும். ஆமென்.”

ஜெபக்குறிப்பு: 2025 செப்டம்பர் 29 திங்கள்

நமது தேசத்தின் எல்லை பாதுகாப்புப் பணியில் இருக்கும் எல்லா பாதுகாப்பு படைவீரர்களுக்காகவும், இராணுவத்துக்காகவும் பணிபுரியும் உயர்அதிகாரிகள் அனைவரின் நல்ல சுகம்,பாதுகாப்பிற்காகவும் அவர்களை பிரிந்து தூர இடங்களில் இருக்கும் அவர்களது குடும்பங்களை கர்த்தர் ஆசீர்வதிப்பதற்கும் கருத்தாய் ஜெபிப்போம்.

தேவ சித்தத்துக்கு அடங்குதல்!

தியானம்: 2025 செப்டம்பர் 29 திங்கள் | வேதவாசிப்பு: 1சாமுவேல் 16:14-23

YouTube video

…ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்(1 பேதுரு 5:6).

ஒரு நிறுவனத்தில் சாதாரண ஊழியராக பணிபுரியும் ஒருவருக்கு, அந்த நிறுவனத்தின் அதிகாரியாக பதவி உயர்வு கிடைக்குமானால், பின்பு சாதாரண ஊழியராக கடமை புரிவது அவருக்குக் கடினமானதாகவே இருக்கும். ஆரம்பப் பள்ளியில் படிக்கும் பிஞ்சு குழந்தைகளிலே ஒருவனைப் பார்த்து, இந்த வகுப்புக்கு நீதான் தலைவர் என்று சொல்லிவிட்டால் போதும், மற்றவர்களை விட தான் ஏதோ விசேஷித்தவன் என்ற எண்ணம் அந்த பிஞ்சு உள்ளத்திலேயே தோன்றிவிடும். ஆனால், சவுலின் ஸ்தானத்தில் ராஜாவாக அபிஷேகம் பண்ணப்பட்ட தாவீதோ, தேவன் அந்த ஸ்தானத்தில் தன்னைக் கொண்டுபோய் நிறுத்தும் வரைக்கும் பொறுமையோடு, அவ்வப்போது தேவன் தரும் பொறுப்புக்களை உண்மையோடு செய்துகொண்டிருந்தார் எனக் காண்கிறோம். இது மிகவும் உயர்ந்த ஒரு பண்பு!

வெளி உலகிலும் சரி, தேவ ஊழியங்களிலும் சரி பெயருக்காகவும், பதவி உயர்வுகளுக்காகவும் போட்டி போட்டுக்கொண்டிருக்கும் ஒரு சமுதாயத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் நமக்கு தாவீதின் வாழ்வு ஒரு சவாலாக அமைகிறது. ஒவ்வொருவருக்கும் பொறுப்புக்களைத் தேவன் கொடுத்திருக்கிறார். உத்தியோகஸ்தராகவோ, ஊழியராகவோ, குடும்பப் பெண்ணாகவோ, மாணவராகவோ இருக்கலாம். நமது கையில் தேவன் தந்த பொறுப்புக்களை அவரது சித்தத்துக்கு ஏற்றவாறுச் செய்ய நாம் ஆயத்தமா? தேவன் நம்மை உயர்த்தும்மட்டும் அவரது சித்தத்துக்கு அமைய அவரது பலத்த கரத்துக்குள் அடங்கியிருந்து சேவை செய்வது மிகவும் உன்னதமானது. அதைவிடுத்து நமது சுயபுத்தியின் மேல் சாய்ந்து உயர்வை நோக்கி நாம் நினைத்த பாதையில் ஓடுவது தேவனுடைய பார்வையில் புத்தியீனமான காரியமாய் இருக்கிறது. கர்த்தரால் அபிஷேகம் பெற்றும் தாவீது தன் சிங்காசனத்தில் அமர அநேக ஆண்டுகள் சென்றது மாத்திரமல்ல, அத்தனை ஆண்டுகளும் அவர் தனது உயிருக்காகப் போராடவேண்டியதிருந்தது. ஆனால் தேவன், அவரை உயர்த்தியபோதோ அவருடைய சிங்காசனம் நிலைத்து நின்றது. இன்னுமொரு விஷயம் என்னவெனில், நமது பொறுப்புக்களை விடுத்து மற்றவர் தனது பொறுப்புக்களைச் சரிவர செய்கிறாரா என ஆராய்வதும் மதியீனமான காரியமாகும்.

ஆகவே தேவபிள்ளையே, நமது கையில் தற்போது தேவன் தந்திருக்கும் பொறுப்புக்கள் என்னவென்பதை அமர்ந்திருந்து சற்றே சிந்திப்போம். அதை முழுமையாகச் சரிவரச் செய்ய என்ன வழிமுறைகளைக் கைக்கொள்ளவேண்டும் என்பதைச் சிந்தித்து செயற்படுவோம். தேவன் நமக்கு உதவி செய்வார். நீ கர்த்தருக்குக் காத்திருந்து, அவருடைய வழியைக் கைக்கொள்; அப்பொழுது நீ பூமியைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு அவர் உன்னை உயர்த்துவார் (சங்.37:34).

ஜெபம்: “அன்பின் பிதாவே, எனக்கு நீர் தந்திருக்கும் பொறுப்புக்களைச் சரிவரச் செய்து உண்மையும் உத்தமமுமாய் வாழ எனக்கு உதவி புரியும், ஆமென்.”