ஜெபக்குறிப்பு: 2025 செப்டம்பர் 10 புதன்

அவர்கள் ஒருமனப்பட்டவர்களாய் தேவாலயத்திலே அநுதினமும் தரித்திருந்தார்கள் (அப்.2:46) இன்று சத்தியவசன அலுவலகத்தில் நடைபெறும் ஜெபக்கூட்டத்தை கர்த்தர் ஆசீர்வதித்து, ஏறெடுக்கப்படும் எல்லா விண்ணப்பங்களுக்கும் மறுஉத்தரவுகளை நன்மையாகவும் ஆசீர்வாதமாகவும் கர்த்தர் தந்தருளவும், கர்த்தரின் செய்தியை கொண்டுவரும் ஊழியரை கர்த்தர் வல்லமையாய் பயன்படுத்தவும் வேண்டுதல் செய்வோம்.

தாழ்மையானவர்களை உயர்த்தினார்!

தியானம்: 2025 செப்டம்பர் 10 புதன் | வேதவாசிப்பு: 1சாமுவேல் 16:1-13

YouTube video

பலவான்களை ஆசனங்களில் இருந்து தள்ளி, தாழ்மையானவர்களை உயர்த்தினார் (லூக்கா 1:52).

ஒரு விழா நடத்துவதற்காக, தன்னாலான ஒரு சிறுதொகை பணத்தைக் கொடுத்து உதவிய ஒருவர், எல்லாருடைய மனங்களிலும் உயர்ந்து நின்றார். ஆனால், விழா முடிந்து நன்றியுரை சொல்லப்பட்டபோது, உதவி செய்த இவரது பெயரை அதிலே சேர்க்க மறந்துவிட்டார்கள். விழா முடிந்ததும் நன்றியுரையில் தனது பெயர் சேர்க்கப்படாததற்கு அவர் கொடுத்த குடைச்சல் அனைவரது மனங்களிலும் உயர்ந்திருந்த அவரை இல்லாமலேயே அழித்தொழித்துப் போட்டது.

சவுல் ராஜா தேவனுடைய கட்டளைக்குக் கீழ்ப்படியாமல், தன்னுடைய இஷ்டப்படி நடந்துகொண்டபோது, தேவன் அவனை ராஜா ஸ்தானத்திலிருந்து தள்ளி, அவனுக்குப் பதிலாக தாவீதை ராஜாவாக அபிஷேகம் பண்ணினார். தாவீதை தேவன் ராஜாவாக அபிஷேகம் பண்ணுகிறபோது, அவன் ஒரு குடும்பத்தில் கடைசிப் பிள்ளையாக, தகப்பனின் ஆடுகளை மேய்த்தவனாக இருந்தான். சாமுவேல் தீர்க்கதரிசி, ஈசாயைப் பார்த்து உனது குமாரரை எனக்கு முன்பாகக் கொண்டு வா என்ற போதுகூட, ஈசாய்க்கு தாவீதின் ஞாபகமே வரவில்லை. எல்லாக் குமாரரும் கடந்து போயும் அதில் தேவன் யாரையும் தெரிந்துகொள்ளவில்லை என்றதும், சாமுவேல் ஈசாயைப் பார்த்து, உனது குமாரர் இவ்வளவுதானா என்கிறான். அப்பொழுது தான் ஈசாய் தனது கடைசி மகன் ஆடுகளை மேய்ப்பதாகக் கூறி அவனை அழைப் பிக்கிறான். அங்கே வந்த தாவீதை, சாமுவேல் அபிஷேகம் பண்ணுகிறான். குடும் பத்தில் மூத்த சகோதரர் இருந்தார்கள்; அதிலும் சவுலுக்குப் போர் வீரராகக்கூட அவர்கள் இருந்தனர். அப்படியிருக்க, ஆடு மேய்த்துக்கொண்டிருந்த தாவீதுக்கு அந்த அபிஷேகம் கிடைத்தது. சாதாரணமாக இப்படியொரு காரியம் நடந்தால், அதைப் பெற்றுக்கொண்டவருக்கு ஒரு பெருமை, தான் உயர்ந்தவர் என்றதான பெருமிதம் இப்படியெல்லாம் வருவது இயல்பு. ஆனால் தாவீதோ, அபிஷேகத்தைப் பெற்ற பின்பும் அதே ஆடுகளையே மேய்த்துக்கொண்டிருந்தான். தகப்பன் யுத்தத்திற்குப்போன சகோதரரின் சுகம் விசாரித்து வா என்றதும், ஆடுகளைக் காவலாளிகள் வசம் விட்டவனாக, விரைந்துசெல்கிறான்.

தாழ்மைக்கு முன்னுதாரணமாக தாவீது விளங்கினான். தன்னை ராஜாவாக தேவன் அபிஷேகம் பண்ணியதைக் குறித்து, சற்றேனும் அவன் பெருமை கொள்ளவில்லை. பலவான்களை ஆசனங்களிலிருந்து தள்ளி, தாழ்மையானவர்களை உயர்த்தும் தேவன், தாவீதை உயர்த்தினார். ஆனால், தாவீது சிங்காசனத்தில் அமருவதற்குப் பல காலம் எடுத்தது, தாவீது பல போராட்டங்களைச் சந்திக்க நேர்ந்தது. ஆனாலும் அவன் தாழ்மையாய் தேவனின் நேரத்துக்காகக் காத்துக் கிடந்தான். தேவன் ஏற்றகாலத்தில் அவனை உயர்த்தினார். கர்த்தர் உயர்ந்தவராயிருந்தும், தாழ்மையுள்ளவனை நோக்கிப்பார்க்கிறார் (சங்கீதம் 138:6).

ஜெபம்: அன்பின் கர்த்தாவே, நீரே எங்களை ஆளுகிறவர், உம்மாலே நாங்கள் நடத்தப்பட வாஞ்சிக்கிறோம். நீர் எங்களை உயர்த்தக் காத்திருக்கிறோம். ஆமென்.