ஜெபக்குறிப்பு: 2025 அக்டோபர் 14 செவ்வாய்

இலங்கையில் நடைபெறும் சத்தியவசன ஊழியங்களையும் ஊழியர்களையும் கர்த்தர் ஆசீர்வதித்து, இவ்வூழியங்களை தாங்கும் புதிய பங்காளர்கள் ஆதரவாளர்களை கர்த்தர் எழுப்பி தடையின்றி ஊழியம் செய்யப்படுவதற்கும், தேசத்தின் பொருளாதாரத்தை கர்த்தர் ஆசீர்வதிக்கவும் நடைபெறும் எல்லா சுவிசேஷ ஊழியங்கள், திருச்சபைகள் வளர்ச்சியடையவும் வேண்டுதல் செய்வோம்.

அலுப்பான வாழ்வும் அர்த்தம் பெறும்!

தியானம்: 2025 அக்டோபர் 14 செவ்வாய் | வேதவாசிப்பு: பிரசங்கி 1:3-11

YouTube video

இதைப் பார், இது நூதனம் என்று சொல்லப்படத்தக்க காரியம் ஒன்றுண்டோ? (பிரசங்கி 1:10).

ஒடுக்கமான வாடகை அறையிலே உட்கார்ந்து, அறையின் கூரையை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்த ஒரு சகோதரியிடம், ‘ஏன் இப்படி இருக்கிறீர்’ என்று கேட்டேன். ‘இந்த வாழ்க்கை வெறுப்பாய் இருக்கிறது. ஏதோ காலையில் எழும்பி, சமையல் செய்து, வேலைக்குப்போய், அங்கேயும் ஒரே முகங்களைப் பார்த்து, களைத்துப்போய், வீடு வந்து, திரும்பவும் அதே சாப்பாடு நித்திரை. விடியுது இருளுது, வாழ்வும் உருளுது. மனதிலேயோ ஆறுதலில்லை’ என்றாள் அவள். இப்படியே, நமக்கும் சிலசமயம் வாழ்க்கையே அலுத்துப்போனதுபோல தோன்றக்கூடும். தினம்தினம் நடப்பவையே பின்னும் தொடருகின்றன. எதிலும் திருப்தியில்லை. எதுவுமே புதினமானதாக இல்லை. இன்று எந்த நாளும் கொலை செய்திகளை கேட்டே வாழ்க்கை வெறுத்துவிடும் போலிருக்கிறது. மாத்திரமல்ல, திரும்பத்திரும்ப ஒரே கஷ்டங்கள்தான். மாற்றம் வேண்டும் என்பதற்காக எத்தனை பேர் வெளியூர் வெளிநாடு என்று போகிறார்கள். ஆனால், பின்னர் திரும்பி அதே இடத்திற்குத்தானே வரவேண்டும்; எங்கேமாற்றம்? அதுமாத்திரமல்ல, இதுவரை நாம் வாழ்ந்து முடிந்துவிட்ட நாட்கள் யாவும் நமது மனதில் இருக்கிறதா? அதுவும் இல்லை. இதைத்தான் சூரியனுக்குக் கீழே நூதனமானது ஒன்றுமே இல்லை என்று பிரசங்கி எழுதுகிறார்.

ஒரு மனிதன் இருந்தான். படிப்பு, செல்வம், நல்ல தொழில், கௌரவம், எல்லாம் இருந்தது. ஒவ்வொரு நாளும் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்களைக் கவனிப்பதுதான் அவனது பிரதான தொழில். காலையில் எழுந்தால் கிறிஸ்தவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று தேடி, அவர்களை அடித்து, கட்டி இழுத்து வரவேண்டும். இவனுடைய வாழ்வில் மாற்றம் வந்தபோது, துன்பப்படுத்துவதற்காக கிறிஸ்தவர்களைத் தேடினவன் இப்போது கிறிஸ்துவுக்காகத் துன்பப்பட தைரியமாய் அவர்களிடமே சேர்ந்துகொண்டான். “கிறிஸ்துவே தேவன்” என்று தைரியமாக பிரசங்கித்தான். மாத்திரமல்ல, இதுவரை சவுல் என்று அழைக்கப்பட்ட அந்த மனிதன் இப்போது பவுல் என்று அழைக்கப்படுகிறான். வாழ்வில் ஒரு மாற்றம். வித்தியாசமான சிந்தனை, வித்தியாசமான செயல்கள். பவுல் தன் வாழ்வுக்குரிய புதிய அர்த்தத்தைப் புரிந்துகொண்டார். இடையில் நடந்ததென்ன? அவருடைய வாழ்விலே உயிர்த்த இயேசு வந்தார். எல்லாம் மாற்றமடைந்தது, எல்லாம் புதிதானது!

தேவபிள்ளையே, நம் வாழ்வில் ஆண்டவரை வரவழைப்போமாக. அவரை அறிந்திருந்தால் போதாது. கடமை ஜெபமும் போதாது. ஆண்டவர் பார்க்கும் கண்களால் நாமும் பார்க்கப் பழகவேண்டும். உடனே புதினமான காரியங்கள் எதுவும் நடக்காது. எனினும், நமக்கு அலுப்புத் தந்த அத்தனையும் அர்த்தமுள்ளதாக மாறும்.

ஜெபம்: அன்பின் பிதாவே, கடமைக்காக கிறிஸ்தவ வாழ்வு, ஜெபம் என்றில்லாமல் கிறிஸ்துவின் சிந்தையால் நிரப்பப்பட்டு அர்த்தமுள்ள வாழ்வு வாழ எங்கள்மேல் கிருபையாயிரும். ஆமென்.

ஜெபக்குறிப்பு: 2025 அக்டோபர் 13 திங்கள்

நமது தேசத்தின் அண்டை நாடுகளுக்கிடையே பகைமைகள் நீங்கி எப்போதும் நல்ல உறவு காணப்படுவதற்கும், பயங்கரவாதங்கள், தீவிரவாதங்கள், வன்முறை சம்பவங்களாலே அப்பாவி மக்கள் கொல்லப்படுவது தடுக்கப்படவும், எல்லைப்பிரச்சனை, அந்நியர்களின் ஊருடுவல் போன்றவைகளினிமித்தம் விரோதங்கள் பெருகாதபடி சமாதானத்துக்காக ஜெபிப்போம்.

நமக்கு ஒரு நம்பிக்கை உண்டு!

தியானம்: 2025 அக்டோபர் 13 திங்கள் | வேதவாசிப்பு: ரோமர் 8:19-25

YouTube video

அந்தச் சிருஷ்டியானது … மாயைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது (ரோமர் 8:21).

பிரசங்கி நூலில் குறிப்பிடப்பட்ட ‘மாயை’ என்ற சொல்லின் பொருள், “குளிர் காலத்தில் தென்பட்டு மறையும் சுவாசம்” என்பதாகும். நமது கடந்த காலங்களைச் சற்று சிந்தித்துப்பார்த்தால், எல்லாமே தோன்றி மறைந்துவிட்ட மாயையாகத்தானே தெரியும்! ஏன் இந்த நிலைமை? இதற்கு ஒரே பதில், “பாவம்”. தேவன் சிருஷ்டித்த பூரண நிலைமையிலிருந்து சகல சிருஷ்டியையும் பாவமானது கீழே தள்ளிவிட்டது. அதனால் முழுஉலகமும் தன் மீட்புக்காக தவிக்கிறது.

உலகமே தன் மீட்புக்காகத் தவிக்கும்போது, அதே உலகம் நமது தேவையைப் பூர்த்தியாக்குவது எப்படி? ஆவியானவருக்குள்ளான சகல ஆசீர்வாதங்களைப் பெற்றிருக்கின்ற நாமும்கூட பாவஉலகின் வேதனைகளிலிருந்து வெளிவரவும், ஆவியின் நிறைவை அடைந்து, கிறிஸ்துவோடு வாழும் வாழ்க்கைக்காகவும் தவிக்கிறோம். இந்தத் தவிப்பானது, நமது உள்ளுணர்வில் கலந்திருக்கும்போது இந்த உலக காரியங்கள் வேறு எவ்விதத்தில் நமக்கு திருப்தியளிக்கக்கூடும்?

கிறிஸ்தவர்களாகிய நாம், இவ்வுலகையும் அதன் காரியங்களையும் எப்படிப் பார்க்கிறோம் என்பதிலேதான் நமது வாழ்வின் வெற்றி தோல்வி தங்கியிருக்கிறது. தோற்றத்தில் அழிவுக்குள்ளானதும் ஆவிக்குரிய விதத்தில் பாவத்தால் கறைப்பட்டதுமான இந்த உலகைப் பார்த்து நாம் சோர்ந்துபோக வேண்டியதில்லை. ஏனெனில் நமக்கு ஒரு நம்பிக்கை உண்டு. ஏற்கனவே நாம் தியானித்தபடி நாம் எதையும் நித்தியத்தின் கண்ணோட்டத்தில் பார்க்கப் பழகவேண்டும். தேவனுடைய அநாதி திட்டம், புதியவானம், புதிய பூமி, பாவம் துன்பம், வியாதி கண்ணீர், தீமை எதுவுமற்ற ஒரு புதிய வாழ்வு நமக்காக வைக்கப்பட்டிருக்கிறது. அதேசமயம், கிறிஸ்துவைக் கொண்டிருக்கும் நாம் இவ்வுலகில் வாழும்வரைக்கும், என்றும் கிறிஸ்துவோடு வாழுவோம் என்ற நம்பிக்கையைச் சுமந்துகொண்டு வாழவும், நம்பிக்கையற்ற மக்கள் மத்தியில், தீமையோடு எதிர்த்துப் போராடவும் கிருபை பெற்றிருக்கிறோம்.

தேவபிள்ளையே, நம்பிக்கையற்ற உலகுக்கு நம்பிக்கை கொடுக்கவேண்டிய நாமே, இவ்வுலகத்தின் அற்பமான பயமுறுத்தல்களையும் மாயைகளையும் கண்டு நம்பிக்கையற்றுப் போகலாமா? எல்லாவற்றுக்கும் நல்ல முடிவு உண்டு என்ற நம்பிக்கையோடே எழுந்து நிற்போம். பிசாசானவன் கொண்டுவரும் எந்தக் காரியத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது. நமக்குள் இருக்கும் நம்பிக்கையை ஒருபோதும் இழந்துபோகக்கூடாது. அப்போது மாயையாகத் தோன்றுவதெல்லாம் நமக்கு அர்த்தமுள்ளதாக மாறுவது நிச்சயம்!

ஜெபம்: அன்பின் ஆண்டவரே, அநித்தியமான உலகில் முடிந்துபோகக்கூடிய மாயை ஏற்படுத்தும் பயங்களுக்கு எங்களை நீங்கலாக்கி உமக்குள்ளான நம்பிக்கையிலே எங்களை திடப்படுத்தும். ஆமென்.